📅 Thursday, 04 June 2026 IST | வைகாசி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health May 27, 2026 06:32 PM

5 ஆண்டுகளில் ஒரு லட்சம் சுகாதார நிபுணர்கள் உருவாக்க இலக்கு: மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சக செயலர் தகவல்

5 ஆண்டுகளில் ஒரு லட்சம் சுகாதார நிபுணர்கள் உருவாக்க இலக்கு: மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சக செயலர் தகவல்

புதுச்சேரி: 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் தரமான சுகாதார நிபுணர்களை உருவாக்கும் இலக்கை இந்திய அரசு நிர்ணயித்துள்ளது என, புண்ய சலிலா ஸ்ரீ வஸ்தவா தெரிவித்துள்ளார்.

ஜிப்மர் நிறுவனத்தின் நர்சிங் மற்றும் இணை மருத்துவ அறிவியல் பாடப்பிரிவுகளின் 12வது பட்டமளிப்பு விழாவில் அவர், பேசியதாவது:

மாணவர்கள் தங்களது மருத்துவப் பயணத்தை சேவை மனப்பான்மை, கருணை, ஒழுக்கநெறி மற்றும் தேச நிர்மாணத்திற்கு அர்ப்பணிக்க வேண்டும். ஜிப்மர் நிறுவனம் அர்ப்பணிப்பு, திறமை மற்றும் ஒழுக்கமிக்க மருத்துவச் சேவையில், சிறப்புமிக்க கல்வி நிறுவனமாகும்.

ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர் மற்றும் ஹெல்த் அண்ட் வெல்னஸ் சென்டர்கள் மூலம் நாடு முழுதும் 1.8 லட்சத்திற்கும் மேற்பட்ட மையங்கள் மூலம் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய், மனநலப் பிரச்னைகள் உள்ளிட்ட தொற்றாத நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சையளிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தரமான சுகாதார சேவைகளை உறுதி செய்யும் வகையில் தற்போது 64,000க்கும் மேற்பட்ட அரசு சுகாதார நிலையங்கள் என்.கியூ.ஏ.எஸ்., சான்றிதழ் பெற்றுள்ளன.

எதிர்கால தொற்றுநோய்கள் மற்றும் அவசர நிலைகளை சமாளிக்க நாட்டின் சுகாதார அமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் பல கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜிப்மரில் உருவாகி வரும் கிரிட்டிக்கல் கேர் பிளாக் இதன் ஒரு பகுதியாகும்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சம் தரமான சுகாதார நிபுணர்களை உருவாக்கும் இலக்கை இந்திய அரசு நிர்ணயித்துள்ளது.

இந்திய சுகாதாரத் துறையினருக்கு உலகளவில் அதிக வரவேற்பு உள்ளது. இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா சுகாதாரத் துறையில் பணியாற்றுவதற்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன. விக்சித் பாரத் 2047 என்ற இலக்கின் அடித்தளம் சுவஸ்த் பாரத். ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்கும் பணியில் இன்றைய இளம் சுகாதாரத் தொழில்நுட்ப நிபுணர்கள் முன்னிலை வகிப்பார்கள்' என்றார்.