50 நாளில் 100 முறை கோரிக்கை விடுத்தும் அலட்சியம் காட்டும் தவெக அரசு.! அன்புமணி ராமதாஸ் ஆதங்கம்
50 நாளில் 100 முறை கோரிக்கை விடுத்தும் அலட்சியம் காட்டும் தவெக அரசு.! அன்புமணி ராமதாஸ் ஆதங்கம்
சென்னை: மேகதாது மற்றும் காவிரி பிரச்சனைகள் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுமாறு கடந்த 50 நாட்களில் மட்டும் தமிழக முதலமைச்சரிடம் 100 முறை கோரிக்கை வைத்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், தமிழ்நாடு என்பது பொதுவானது. முதலமைச்சர் என்பவர் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் பெற்றவர். சமீபத்தில் கூட தமிழக முதலமைச்சர் கர்நாடக போவாரா.! இல்லையா.! பேச்சுவார்த்தை நடத்துவாரா.! என்பதில் தெளிவான தகவல் இல்லாத சூழல் நிலவியது.
நம் மக்களின் முக்கிய வாழ்வாதார பிரச்னையில் அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதில் . வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். உண்மையாக என்ன நடக்கிறது என்பதைத் தெரியப்படுத்த வேண்டும். அதுதான் ஜனநாயக முறை, இதில் மறைக்க என்ன இருக்கிறது என்று வினவினார்.
பல முறை கோரிக்கை விடுத்தும் காவிரி விவகாரத்திற்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டாத முதல்வர் விஜய், நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறைப் பிரச்சனைக்காகத் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை கூட்டியதையும் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு உண்மையில் தமிழக வளர்ச்சிக்கு முக்கியமானது. இதனால் தமிழகத்தில் தற்போதுள்ள 39 மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும் என்றும், அதில் 20 தொகுதிகள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் வாய்ப்பு உருவாகும். அதேபோல், சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 351-ஆக அதிகரிக்கும் என்றும், இதன் மூலம் 117 பெண் உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்குள் நிச்சயம் வர முடியும் என்பதால் தொகுதி மறுசீரமைப்பை பாமக ஆதரிப்பதாக விளக்கமளித்தார்.