📅 Friday, 05 June 2026 IST | வைகாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business May 27, 2026 06:00 PM

ஆண்டுக்கு $500,000 ஈட்டும் இளைஞர்களின் ‘கறி பஃப்’ வணிகம்

ஆண்டுக்கு $500,000 ஈட்டும் இளைஞர்களின் ‘கறி பஃப்’ வணிகம்

பாரம்பரியமான ‘கறி பஃப்’ தின்பண்டத்தை நவீனமாக்கி வெற்றிகரமான வணிகமாக மாற்றியுள்ளனர் மூன்று இளைஞர்கள்.

சகோதரர்கள் லிம் யுவான் மிங், 23, பிராண்டன் லிம், 29, அவர்களின் நண்பர் ஓ சின் ஜியே, 31, ஆகிய மூவரும் தங்களது சேமிப்பிலிருந்து $10,000 முதல் போட்டு 2024 டிசம்பர் மாதம் முதல் கடையை சாங்கி வில்லேஜ் உணவங்காடியில் தொடங்கினர்.

ஒன்றரையாண்டுக்குள் மூன்று கிளைகளாக விரிந்துள்ள ‘வாட் த பஃப்’, 2025ல் ஏறக்குறைய $500,000 வருவாய் ஈட்டியது.

அன்றாடம் 1,500 கறி பஃப்கள் விற்பனையாகின்றன. பாற்கட்டி, சார் சியூ போன்ற புதிய சுவைகள் வாடிக்கையாளர்களை விரைந்து ஈர்த்தது. குறிப்பாக, ‘சீஸி கறி பஃப்’பிற்கு வாடிக்கையாளர்களிடம் வரவேற்பு அதிகம்.

இந்த பஃப் வணிகம், பிடோக் உணவங்காடியில் ‘லாவ் எர் தியோசியூ எக்னாமிக்கல் ரைஸ் & போரெட்ஜ்’ கடையை 10 ஆண்டுகளாக நடத்தி வரும் சகோதரர்கள் பெற்றோரின் யோசனையில் உதித்தது.

ஒரே மாதத்தில் முதல் கடையில் ஈட்டிய தொகையிலிருந்து $15,000ஐ கொண்டு 2025 ஜனவரியில் இரண்டாவது கடையை பெற்றோரின் கடை உள்ள பிடோக் உணவங்காடியில் தொடங்கினர்.

நிர்வகிப்பதில் சிரமம் ஏற்பட்டதால் 2026ல் அவர்கள் சாங்கி வில்லேஸ் கடையை மூடிவிட்டு, ஹேக் ரோட்டில் புதிய கடையைத் திறந்தனர்.

அதிகாலை 4 மணிக்கே இவர்களது பணி தொடங்குகிறது. இயந்திரங்களைப் பயன்படுத்தாமல் கைகளால் மடிக்கப்படும் பஃப்கள், ஒவ்வொரு கிளையிலும் உடனுக்குடன் பொறிக்கப்பட்டு விற்கப்படுகின்றன.

தொடக்கத்தில் இளையர்களே பஃப்களைத் தயாரித்தனர். ஒரு மாத காலத்திற்குப் பின்னரே ஊழியர் ஒருவரை அமர்த்தினர். முதல் மூன்று மாத காலத்துக்கு அவர்கள் ஊதியம் எடுத்துக்கொள்ளவில்லை.

படிப்பிற்கும் வணிகத்திற்கும் இடையே சவால்களைச் சந்தித்தாலும், அடுத்த ஐந்தாண்டுகளில் 10 கிளைகளைத் திறப்பதே இந்த இளைஞர்களின் இலக்கு.