📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema May 27, 2026 11:31 PM

திரைக்கு வந்து 65 ஆண்டுகள் நிறைவு: 'பாசமலர்' ரசிகர்கள் மனங்களை கொள்ளை கொண்ட 'வாடாமலர்'!

திரைக்கு வந்து 65 ஆண்டுகள் நிறைவு: 'பாசமலர்' ரசிகர்கள் மனங்களை கொள்ளை கொண்ட 'வாடாமலர்'!

1961-ம் ஆண்டு இதே நாளில் (மே 27) வெளிவந்த திரைப்படம் 'பாசமலர்'. அண்ணன் - தங்கை பாசத்தை மையமாக கொண்ட இப்படத்தில் சிவாஜி கணேசன் - சாவித்திரி அண்ணன் - தங்கையாக வாழ்ந்திருந்தனர். சாவித்திரியின் கணவராக ஜெமினி கணேசன் நடித்திருந்தார். அந்த நேரத்தில், சாவித்திரி - ஜெமினிகணேசன் ஜோடி உண்மையிலேயே திருமணம் செய்து கொண்டு கணவன் - மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

பிரபல இயக்குனர் பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த 'பாசமலர்' திரைப்படம் 3 மணி நேரம் 17 நிமிடங்கள் ஓடியது. இப்படத்திற்கு விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை அமைத்திருந்தனர். அந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள "வாராயென் தோழி.. வாராயோ.. மணப்பந்தல் காண.. வாராயோ.." என்ற பாடல் இன்றளவிலும் பட்டித்தொட்டி எல்லாம் மணவிழாக்களில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமா, "மலர்ந்தும் மலராத..", "எங்களுக்கும் காலம் வரும்.." என்று, எப்போதும் பசுமையான பாடல்கள் அனைவரது மனதையும் கட்டிப்போட்டுள்ளது.

வெள்ளி விழா கண்ட 'பாசமலர்'

இப்படி, 'எவர் கிரீன்' படமான 'பாசமலர்', 2013-ம் ஆண்டு டிஜிட்டல் முறையில் மீள் உருவாக்கம் செய்யப்பட்டு, தமிழகத்தில் 70 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. பல தியேட்டர்களில் ஒரு மாத காலம் ஓடி சாதித்து காட்டியது. 50 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்து ரசித்து அழுத அதே கண்கள், மீண்டும் தியேட்டர்களில் கண்ணீர் வடித்ததை காண முடிந்தது. அதுவே அப்படத்தை காலத்தால் அழியாத காவியமாக பறைசாற்றியது. அண்ணன் - தங்கை பாசத்தையும், எந்தச் சூழ்நிலையிலும் அறுபடாத பாசப்பிணைப்பையும் சொன்ன பாசமலருக்கு திரைத்துறையில் உன்னதமான இடம் வழங்கப்பட்டது. படம் வெள்ளி விழா கண்டது. கிராமங்களில் மாட்டு வண்டி கட்டிக்கொண்டு பல மைல் தூரம் குடும்பம் குடும்பமாக சென்று தியேட்டர்களில் 'பாசமலர்' படத்தை பார்த்தனர்.

மாறுவேடத்தில் சென்ற சாவித்திரி

இப்படத்தில் இடம்பெற்ற இளமையும், எளிமையும், இலக்கிய நயமும் கொண்ட வசனங்கனை 24 வயதே ஆன ஆரூர்தாஸ் எழுதியிருந்தார். 'பாசமலர்' திரைப்படம் வெளியான முதல் நாளில், மாறுவேடத்தில் திரையரங்குக்கு சென்ற சாவித்திரி, பெண்களுடன் இருந்து படத்தை பார்த்தார். படத்தை பார்த்துவிட்டு பெண்கள் வெளியே வந்தபோது, "பிறந்தால் இப்படியொரு அண்ணனுக்கு தங்கையாக பிறக்க வேண்டும்" என்று பேசிக் கொண்டே போனார்களாம். அதைக்கண்டு கண்கலங்கிப்போன சாவித்திரி, "சிவாஜியின் தங்கையாக நான் பிறக்காவிட்டாலும், அவருடைய தங்கையாக நடிக்கும் வாய்ப்பாவது கிடைத்ததை பெருமையாக கருதுகிறேன்" என்று பேட்டி ஒன்றில் கூறினார்.

அண்ணன்-தங்கை பாசம்

'பாசமலர்' வெளிவருவதற்கு முன்பாக, 'வீரபாண்டிய கட்டப்பொம்மன்' படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் நடந்துகொண்டிருந்தது. அதில் வெள்ளையத்தேவனாக நடித்த எஸ்.எஸ்.ராஜேந்திரன், திடீரென படத்தைவிட்டு விலகினார். அப்போது, ஜெமினி கணேசனை தொடர்புகொண்ட சிவாஜி கணேசன், படத்தில் வெள்ளையத்தேவன் வேடத்தில் நடித்துக் கொடுக்க வருமாறு கூறினார். அவர் தயக்கம் காட்டவே, உடனே அவரது மனைவியான சாவித்திரிக்கு போன் செய்து, "தங்கச்சி மாப்ள தயங்குறான்மா.. அவர் நடிச்சா அற்புதமா இருக்கும்.. புத்தி சொல்லி அனுப்பி வை.. இதுக்கப்புறம் நான் போன் பண்ண மாட்டேன்" என்று சொல்லி போனை வைத்துவிட்டாராம். சிவாஜியை அண்ணனாகவே ஏற்று வாழ்ந்து கொண்டிருந்த சாவித்திரியும், உடனே கணவர் ஜெமினி கணேசனை வீரபாண்டிய கட்டபொம்மன் படப்பிடிப்புக்கு அனுப்பிவைத்தார். இதுவல்லவோ, அண்ணன் - தங்கை பாசம். அதனால்தான், 65 ஆண்டுகள் கடந்து போனாலும் இன்றைக்கும் அனைவரது நெஞ்சிலும் வாடா மலராக நிலைத்து நிற்கிறது 'பாசமலர்'.