📅 Wednesday, 07 October 2026 IST | புரட்டாசி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 07, 2026 10:04 AM

68 எம்ஆர்டி நிலையங்களில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் ஆங்கிலச் செய்தியைக் கேட்கலாம்

68 எம்ஆர்டி நிலையங்களில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் ஆங்கிலச் செய்தியைக் கேட்கலாம்

சிங்கப்பூர் ரயில்களில் பயணம் செய்வோர் இனி குறிப்பிட்ட சில ரயில் நிலையங்களில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகத்தின் ஆங்கிலச் செய்திகளைக் கேட்கலாம்.

எஸ்எம்ஆர்டி நிறுவனத்தால் இயக்கப்படும் 68 எம்ஆர்டி நிலையங்களில் பயணிகள் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்துகொள்ளலாம்.

வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு, வட்டப் பாதை வழித்தடங்களிலும் புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டி வழித்தடத்திலும் உள்ள ரயில் நிலையங்கள் அதில் அடங்கும்.

இதனை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி நிறுவனத்தை நடத்தும் எஸ்பிஎச் மீடியாவும் எஸ்எம்ஆர்டி நிறுவனமும் இணைந்து புதன்கிழமை (அக்டோபர் 7) வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.

கடந்த ஜனவரி மாதம் அந்த நிறுவனங்களுக்கு இடையில் கையெழுத்தான பங்காளித்துவ ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.

மூன்று முதல் நான்கு நிமிடங்கள் வரை நீடிக்கும் செய்தி அறிக்கைகள், திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 7 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஒவ்வொரு மணி நேரத்தின் தொடக்கத்திலும் ஒலிபரப்பப்படும்.

கிழக்கு-மேற்கு வழித்தடத்தில் உள்ள பிடோக், தானா மேரா, கல் சர்க்கிள், துவாஸ் கிரசென்ட், துவாஸ் வெஸ்ட் ரோடு, துவாஸ் லிங்க், வடக்கு-தெற்கு வழித்தடத்தில் உள்ள பிராடல் ஆகிய ரயில் நிலையங்களில் இந்தச் செய்தி அறிக்கை ஒலிபரப்பு வசதி இருக்காது.

வட்டப் பாதை வழித்தடத்தில், கெப்பல், கென்டோன்மென்ட், பிரின்ஸ் எட்வர்ட் ரோடு ஆகிய நிலையங்களில் மட்டுமே இப்போதைக்கு இந்த ஒலிபரப்பு கிடைக்கும்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

மேலும் பல நிலையங்களுக்கு இந்தச் செய்தி அறிக்கையைக் கொண்டுசேர்க்க எஸ்எம்ஆர்டி நடவடிக்கை எடுத்துவருவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.