ஆசிரமம் செல்ல 5 கோடி ரூபாய் வாங்கினாரா விராட் கோலி? குற்றச்சாட்டுக்கு அதிகாரப்பூர்வ மறுப்பு!
ஆசிரமம் செல்ல 5 கோடி ரூபாய் வாங்கினாரா விராட் கோலி? குற்றச்சாட்டுக்கு அதிகாரப்பூர்வ மறுப்பு!
மும்பை: உத்தர பிரேதசத்தின் பிருந்தாவனம் என்ற பகுதியில் உள்ள பிரேமானந்த் மகாராஜ் என்ற சாமியாரின் ஆசிரமத்திற்குச் செல்ல விராட் கோலி 5 கோடி ரூபாய் பணம் பெற்றதாக தகவல் பரவி வந்தது. பலஹாரி மகாராஜ் என்பவர் அந்த குற்றச்சாட்டை வைத்து இருந்தார். அதற்கு விராட் கோலியின் செய்தி தொடர்பாளர் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
ஸ்ரீ கிருஷ்ண ஜன்மபூமி சங்கர்ஷ் நியாஸ் அமைப்பின் தலைவரான தினேஷ் சர்மா என்ற பலஹாரி மகாராஜ், சமீபத்தில் பரபரப்பான குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார். அதில், ஆன்மீக குரு பிரேமானந்த் மகாராஜின் புகழை அதிகரிப்பதற்காக ராஜஸ்தானைச் சேர்ந்த தனியார் நிறுவனம் 5 கோடி ரூபாய் கொடுத்து விராட் கோலியை ஆசிரமத்திற்கு அழைத்து வந்ததாகக் கூறியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டு சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
இந்நிலையில் இந்தக் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்து விராட் கோலியின் செய்தித் தொடர்பாளர் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது - "விராட் கோலி குறித்து பலஹாரி மகாராஜ் தினேஷ் சர்மா கூறியுள்ள தகவல்கள் முற்றிலும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமற்றவை மற்றும் உண்மைக்கு புறம்பானவை. விராட் கோலி தனது ஆழ்ந்த பக்தி, ஆன்மீக நம்பிக்கை மற்றும் மரியாதை காரணமாக மட்டுமே பிரேமானந்த் மகாராஜை நேரில் சந்தித்து ஆசி பெறுகிறார்.
இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நாங்கள் மறுக்கிறோம். இதுபோன்ற உண்மைக்குப் புறம்பான வதந்திகளைப் பரப்பும் முன்பாக ஊடகங்கள் உண்மைத்தன்மையை முழுமையாக ஆராய்ந்து பொறுப்புடன் செயல்பட வேண்டும்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோர் கடந்த 2023 ஜனவரி முதல் பிருந்தாவனத்தில் உள்ள பிரேமானந்த் மகாராஜின் ஆசிரமத்திற்குத் தொடர்ந்து சென்று வருகின்றனர். அதை விளம்பர நோக்கம் என மற்றொரு சாமியார் குற்றம் சாட்டிய நிலையில், தற்போது விராட் கோலி தரப்பு வெளியிட்டுள்ள இந்த விளக்கம் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.