📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema May 28, 2026 03:32 AM

முதல் 7 நாட்களுக்கு 5 காட்சிகள்: முதல்வர் விஜய் முடிவுக்கு விஷால் வரவேற்பு

முதல் 7 நாட்களுக்கு 5 காட்சிகள்: முதல்வர் விஜய் முடிவுக்கு விஷால் வரவேற்பு

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை கடந்த 16-ந் தேதி திரைப்படத் துறையினர் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். அவற்றில் முக்கியமாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் அனைத்து திரைப்படங்களையும் நாளொன்றுக்கு 5 காட்சிகள் திரையிட அனுமதியளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த கோரிக்கையை பரிசீலித்த முதலமைச்சர் விஜய், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் புதியதாக வெளியாகும் தமிழ்த் திரைப்படங்கள், வெளியான நாளிலிருந்து முதல் 7 நாட்களுக்கு தினசரி 5 காட்சிகள் திரையிடலாம் என்று உத்தரவிட்டுள்ளார். மேலும், உள்ளூர் பண்டிகை நாட்கள், பொது விடுமுறை நாட்கள், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் தினசரி 5 காட்சிகள் திரையிட அரசு மற்றும் உரிமம் வழங்கும் அலுவலரின் தனி அனுமதி பெறத் தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் விஜயின் இந்த உத்தரவு திரையுலகினர் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதற்காக தமிழ் திரையுலகை சேர்ந்த பலரும் அவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் விஷால் முதல்-அமைச்சர் விஜய் நன்றி தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது, திரையுலகின் தற்போதைய சூழலைப் புரிந்துகொண்டு, திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முதல் 7 நாட்களுக்கு அனைத்துப் படங்களுக்கும் தினமும் 5 காட்சிகள் (shows) திரையிடப்படும் திட்டத்தை நடைமுறைப்படுத்திய, மக்களின் செல்லப்பிள்ளையான அன்புச் சகோதரர் முதல்-அமைச்சர் விஜய் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள். வருவாய் ஈட்டுதலில் இது ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அனைத்துத் துறைகளிலும் பொதுமக்களுக்கு நிவாரணமும், முற்போக்கான வளர்ச்சியும் அளிக்கும் வகையிலான மேலும் பல அரசாணைகள் பிறப்பிக்கப்படுவதை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். எங்கள் அனைவரின் சார்பாகவும் ஒரு மிகப்பெரிய 'விசில்' (Whistle) அவருக்கு உரித்தாகட்டும்! என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.