ஜாம்பவான்களின் சாதனையை முறியடித்த மெஸ்ஸி.. தொடர்ந்து 7 உலகக்கோப்பை போட்டிகளில் கோல்
ஜாம்பவான்களின் சாதனையை முறியடித்த மெஸ்ஸி.. தொடர்ந்து 7 உலகக்கோப்பை போட்டிகளில் கோல்
டல்லாஸ்: அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, உலகக்கோப்பையின் வரலாற்றில் தொடர்ந்து 7 போட்டிகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார். டல்லாஸில் நடைபெற்ற ஜோர்டான் அணிக்கு எதிரான குரூப் ஜே லீக் போட்டியில் கோல் அடித்ததன் மூலம் அவர் இந்த இமாலய சாதனையை எட்டினார்.
இதன் மூலம் பிரான்ஸின் ஜஸ்ட் ஃபோன்டைன் (1958) மற்றும் பிரேசிலின் ஜெய்ர்சின்ஹோ (1970) ஆகியோரின் சாதனையை 39 வயதான மெஸ்ஸி முறியடித்துள்ளார். அவர்கள் இருவரும் தொடர்ந்து 6 உலகக்கோப்பை போட்டிகளில் கோல் அடித்திருந்ததே முந்தைய சாதனையாக இருந்தது. ஜோர்டானுக்கு எதிரான போட்டியில் மாற்று வீரராக 60-வது நிமிடத்தில் களம் இறங்கிய மெஸ்ஸி, ஆட்டத்தின் 80-வது நிமிடத்தில் ஒரு அபாரமான ஃபிரீ-கிக் மூலம் கோல் அடித்தார்.
மெஸ்ஸியின் இந்த கோல் வேட்டை கடந்த 2022 கத்தார் உலகக்கோப்பையின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து நெதர்லாந்து, குரோஷியா மற்றும் பிரான்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியிலும் அவர் கோல் அடித்தார்.
நடப்பு 2026 உலகக்கோப்பையிலும் தனது சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்த மெஸ்ஸி, அல்ஜீரியாவுக்கு எதிராக ஹாட்ரிக் கோலும், ஆஸ்திரியாவுக்கு எதிராக 2 கோல்களும் அடித்தார். தற்போது ஜோர்டானுக்கு எதிராக அடித்த கோலையும் சேர்த்து உலகக்கோப்பை வரலாற்றில் அவரது மொத்த கோல்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.
முன்னதாக ஆஸ்திரியாவுக்கு எதிரான போட்டியில் 2 கோல்கள் அடித்ததன் மூலம், உலகக்கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த ஜெர்மனியின் மிரோஸ்லாவ் குளோசேயின் சாதனையை மெஸ்ஸி முறியடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தொடர்ந்து 7 போட்டிகளில் கோல் அடித்து மற்றொரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.