பள்ளி தமிழ் பாட புத்தகத்தில் கருணாநிதி புகழ்: மாற்றம் கொண்டு வர கோரிக்கை
தமிழக அரசின் பாடப் புத்தகங்களில், கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கருணாநிதி புகழ் பாடும் பாடங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.தமிழகத்தில் சமச்சீர் கல்வி முறையில், 10ம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடமாக்கப்பட்டு உள்ளது. சி.பி.எஸ்.இ., உள்ளிட்ட மற்ற கல்வி முறைகளில் படிக்கும் மாணவர்களும், இந்த பாடப் புத்தகத்தை படித்து தேர்வெழுத வேண்டும். இப்பாடப் புத்தகத்தை தமிழ்நாடு பாடநுால் கழகம் தயாரித்து, அச்சிட்டு வழங்குகிறது.ஒவ்வொரு முறை ஆட்சிக்கு வரும் அந்தந்த கட்சிக்கேற்ப, பாடநுால்களில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. இதில், ஈ.வெ.ராமசாமி, அண்ணாதுரை குறித்த தகவல்கள் பொதுவாக குறைந்த அளவிலும் இடம்பெற்றுள்ளன.கடந்த காலத்தில் தி.மு.க., ஆட்சியில் இருந்ததால், கருணாநிதி புகழ் பாடும் வாசகங்கள் அனைத்து புத்தகங்களிலும் இடம்பெற்றன.குறிப்பாக, 10ம் வகுப்பு பாடப்புத்தகத்தில், 'பன்முக கலைஞர்' என்ற தலைப்பில், ஐந்து பக்கங்கள் கொண்ட பாடமாக, கருணாநிதியின் இளமைக்காலம், ஹிந்தி எதிர்ப்பு போராட்டம், மேடைப்பேச்சு, நாடகம், திரைப்படம், இதழியல், இலக்கியம் மற்றும் பொதுப்பணி ஆகியவை குறித்து விளக்கப்பட்டுள்ளன.அவர் இயற்றிய, 'தொல்காப்பியப் பூங்கா, குறளோவியம், நெஞ்சுக்கு நீதி' போன்ற நுால்கள் மற்றும் அவர் எழுப்பிய, 'வள்ளுவர் கோட்டம்' மற்றும் 'கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை' போன்ற கட்டுமானங்கள் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன.அண்ணாதுரை மறைவின் போது, கருணாநிதி பாடிய இரங்கற்பா அப்படியே இடம்பெற்றுள்ளது. சினிமாவில் இவர் கதை, வசனம் எழுதிய படங்களான பராசக்தி, திரும்பி பார், மனோகரா, ராஜாராணி, ரங்கோன் ராதா, மறக்க முடியுமா, மந்திரிகுமாரி தொடங்கி, ராமானுஜர் தொலைக்காட்சி சீரியல் வரை இடம்பெற்றுள்ளன. ஐந்து பக்கங்களுக்கு அவரது புகழை பாடும் வகையில் இந்த பாடம் அமைக்கப்பட்டுள்ளது.ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தின் ஏழாவது பிரிவில், 'பெரியாரின் சிந்தனைகள்' என்ற தலைப்பில் உரைநடைப் பகுதி விரிவாக இடம்பெற்றுள்ளது. இதில், அவரின் பகுத்தறிவு, ஜாதி ஒழிப்பு, பெண் கல்வி மற்றும் எழுத்து சீர்திருத்தம் குறித்த சிந்தனைகள் விளக்கப்பட்டுள்ளன.நான்காவது பிரிவில், 'வீட்டிற்கோர் புத்தகசாலை' என்ற தலைப்பில் அண்ணாதுரையின் வானொலி உரை இடம்பெற்றுள்ளது. மேலும், அண்ணாதுரையின் பொன்மொழிகள் மற்றும் அவரின் குறிப்புகளும் இதில் உள்ளன.எட்டாம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் ஆறாவது பிரிவில், 'நாடு, சமூகம்' எனும் பொருண்மையின் கீழ் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை, அவர் அறிமுகப்படுத்திய சத்துணவு திட்டம் மற்றும் சமூக நலத்திட்டங்கள், தமிழ் வளர்ச்சி பணிகள் குறித்து விரிவான கட்டுரை உள்ளது.எழுத்து சீர்திருத்தம் குறித்த கட்டுரையில் ஈ.வெ.ரா., மேற்கொண்ட தமிழ் எழுத்து சீர்திருத்தங்கள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், அயோத்திதாசர் குறித்த கட்டுரையில், ஈ.வெ.ரா., தன் பகுத்தறிவு பிரசாரத்திற்கு முன்னோடியாக அயோத்திதாசரை குறிப்பிட்ட செய்தியும் உள்ளது.ஏழாம் வகுப்பு தமிழ் பாடம் முதல் பருவ புத்தகத்தில், பிரிவு - 3ல், 'தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர்' என்ற உரைநடைப் பகுதியில் ஈ.வெ.ரா., குறித்த குறிப்பு உள்ளது. முத்துராமலிங்க தேவரை, 'சுத்த தியாகி' என்று ஈ.வெ.ரா., பாராட்டிய செய்திக் கட்டுரை இதில் இடம்பெற்றுள்ளது.பிரிவு - 1ல், 'மொழியை ஆள்வோம்' பகுதியில் 'அண்ணாதுரையின் சிறப்பு, அவரது அடுக்கு மொழி' என்ற வாக்கியம் பயிற்சியாக கொடுக்கப்பட்டுள்ளது.ஏழாம் வகுப்பு இரண்டாவது பருவ பாடப்புத்தகத்தில், பிரிவு - 3ல், 'வாழ்விக்கும் கல்வி' பாடத்தில் 'அறிஞர் அண்ணாதுரை தம் பேச்சால் புகழ் பெற்றார்' என்ற உதாரணம் கொடுக்கப்பட்டு உள்ளது. பூம்புகாரில் உள்ள 'சிற்ப கலைக்கூடம், முன்னாள் முதல்வர் கருணாநிதியால் ஏற்படுத்தப்பட்டது' என்ற குறிப்பு உள்ளது.ஏழாம் வகுப்பு மூன்றாவது பருவ பாடப்புத்தகத்தில், இயல் - 3ல் உள்ள 'கண்ணியமிகு தலைவர்' எனும் உரைநடைப் பகுதியில், கண்ணியமிகு காயிதேமில்லத்தின் சிறப்புகளை பாராட்டி, இவர்கள் இருவரும் கூறிய பொன்மொழிகள் இடம்பெற்றுள்ளன.'தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராக காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் திகழ்கிறார்' என்று ஈ.வெ.ரா., பாராட்டியுள்ளார். 'இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது. அவர் நல்ல உத்தமமான மனிதர்' என்று அண்ணாதுரை, அவரை புகழ்ந்துள்ளார்.ஆறாம் வகுப்பு இரண்டாம் பருவ பாடப்புத்தகத்தில், காமராஜரை, 'கல்வி கண் திறந்தவர்' என ஈ.வெ.ரா., மனமார பாராட்டியதாக, பிரிவு - 1ல் உள்ள 'கல்வி கண் திறந்தவர்' எனும் உரைநடைப் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.பிரிவு - 1ல் உள்ள 'நுாலகம் நோக்கி' எனும் விரிவான பகுதியில், ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நுாலகமான 'அண்ணா நுாற்றாண்டு நுாலகம்' பற்றியும், நுாலகத்தில் படித்து உயர்நிலை அடைந்தவர்களில் ஒருவர் என்றும் தகவல்கள் உள்ளன.ஐந்தாம் வகுப்பு தமிழ் முதல் பருவ பாடப்புத்தகத்தில் பிரிவு - 2ல், 'கல்வி' பகுதியில் 'மொழியோடு விளையாடு' மற்றும் 'செயல் திட்டம்' போன்ற பகுதிகளில் தலைவர்கள் பற்றிய கலந்துரையாடலில், இவரை பற்றிய செய்திகள் இடம்பெற்று உள்ளன.தி.மு.க., ஆட்சியின் போது, ஆட்சியாளர்களை திருப்திபடுத்த, புத்தக தயாரிப்பு ஆசிரியர்களால் சேர்க்கப்பட்ட இது போன்ற பாடங்களை, முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க., ஆட்சியில் மாற்றம் செய்ய வேண்டும் என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.பாரதியார் குறித்த பாடங்கள்பத்தாம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் இயல் - 4ல், மொழிபெயர்ப்பு கல்வி பகுதியில் பாரதியார் செய்த சில மொழிபெயர்ப்புகள், விடுதலைக்குப் பின் ஒருமைப்பாட்டை ஏற்படுத்த மத்திய அரசு மொழிபெயர்ப்பை ஒரு கருவியாகக் கொண்டது குறித்த தகவல்கள் உள்ளன. எட்டாம் வகுப்பு தமிழ் பாடநுாலில் பகுதி - 1ல் 'கவிதைப்பேழை' பகுதியில் சுப்பிரமணிய பாரதியார் குறித்த செய்திகள் உள்ளன. அவர் ஒரு விடுதலை போராட்ட வீரர் என்றும், 'இந்தியா, விஜயா' முதலான இதழ்கள் வழியாக விடுதலை போருக்கு வித்திட்டவர் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.ஏழாம் வகுப்பு மூன்றாம் பருவ பாடப்புத்தகம், பகுதி - 1ல், 'திருநெல்வேலி சீமையும் கவிகளும்' என்ற விரிவான பகுதியில், மகாகவி பாரதியார் பிறந்த எட்டயபுரம் மற்றும் அவரது கவிப்பணிகள் குறித்த குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.ஆறாம் வகுப்பு தமிழ் முதல் பருவ பாடப்புத்தகத்தில் பகுதி - 1ல், 'வளர்தமிழ்' பகுதியில் தமிழ்மொழியின் இனிமையை வியந்து பாரதியார் பாடிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. பகுதி - 2ல், காணி நிலம் பகுதியில், பாரதியார் தன் கவிதைகளின் வழியாக விடுதலை உணர்வை ஊட்டியவர் என்றும், மண் உரிமைக்காகவும், பெண் உரிமைக்காகவும் பாடியவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவர், 'காக்கை குருவி எங்கள் ஜாதி' என்று பாடியதுடன், தமக்கு கிடைத்த உணவையும் சிட்டுக்குருவிகளுக்கு பகிர்ந்தளித்த நிகழ்வு குறிப்பிடப்பட்டுள்ளது.ஆறாம் வகுப்பு மூன்றாம் பருவ பாடப்புத்தகத்தில், பாரதியார், காந்தியடிகளுடனான சந்திப்பு மற்றும் அவரது கவிதைகள் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.ஐந்தாம் வகுப்பு மூன்றாம் பருவ பாடப்புத்தகத்தில், பகுதி - 3ல், பாரதியார் விடுதலை போராட்ட காலத்தில், 10 ஆண்டுகள் புதுவையில் தங்கியிருந்துள்ளார் எனவும், அங்கு தங்கியிருந்த போது தான், 'பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு, கண்ணன் பாட்டு' ஆகிய முப்பெருங் காவியங்களை படைத்தார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.தேசிய தலைவர்கள்பத்தாம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில், விடுதலை போராட்டம் மற்றும் இசை நிகழ்வுகள் தொடர்பான குறிப்புகளில் காந்தி, நேரு ஆகியோரின் விபரங்கள் இடம்பெற்றுள்ளன. ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில், இந்திய தேசிய ராணுவத்தில் நேதாஜியின் தலைமைத்துவம் மற்றும் அதில் தமிழர்களின் பங்கு குறித்து கூறப்பட்டுள்ளது.எட்டாம் வகுப்பு தமிழ் பாடத்தில், 'சட்டமேதை அம்பேத்கர்' என்ற பகுதியில் அவரது பிறப்பு, கல்வி, தீண்டாமைக்கு எதிரான போராட்டங்கள், பூனா ஒப்பந்தம், இந்திய அரசியல் சாசன உருவாக்கத்தில் அவரது பங்கு மற்றும் அவருக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருது குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன. மற்ற தலைவர்கள் குறித்து தமிழ் பாடப்புத்தகங்களில் தகவல்கள் இல்லை.சுதந்திர போராட்ட வீரர்கள்தமிழ் பாடப்புத்தகங்களில் சுதந்திர போராட்ட வீரர்களின் விபரமும் இடம் பெற்றுள்ளன:பத்தாம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில், ம.பொ.சிவஞானம் வரலாறு, குமரி மாவட்ட போராட்டத்தை முன்னெடுத்து சென்ற மார்ஷல் நேசமணி, சுதந்திர போராட்ட வீரர்களான கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் மற்றும் எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோர் விபரங்கள் இடம்பெற்றுள்ளன.ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், பசும்பொன் முத்துராமலிங்கனார், டாக்டர் லட்சுமி, ஜானகி, ராஜாமணி மற்றும் தில்லான் போன்ற விடுதலை போராட்ட வீரர்கள் குறித்த விரிவான தகவல்கள் உள்ளன.ஏழாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு தமிழ் பாடத்தில், காந்தியடிகள் தமிழகத்திற்கு வருகை புரிந்த நிகழ்வுகள், தமிழ் மொழியின் மீது அவர் கொண்டிருந்த பற்று மற்றும் அவரது எளிமைத் திருக்கோலம் குறித்தும், ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்த சிவகங்கை ராணி வேலுநாச்சியாரின் வரலாறு, கப்பல் நிறுவனத்தை தொடங்கிய வ.உ.சிதம்பரத்தின் பன்முகத்தன்மை மற்றும் விடுதலை போராட்ட பங்களிப்பு சுருக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளன.தமிழ் புத்தகத்தில் கவிஞர்கள்பத்தாம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில், கவிதைப்பேழை பகுதியில் கவிஞர் கண்ணதாசன் குறித்த விபரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் அவர் 1949ல், 'கலங்காதிரு மனமே' என்ற பாடலை எழுதி, திரைப்பட பாடலாசிரியரானார் என்பதும், 'சேரமான் காதலி' புதினத்திற்காக சாகித்திய அகாடமி விருது பெற்றவர் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.கவிஞர் நாகூர்ரூமி (முகம்மது ரபி), எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோர் பாடல்கள் மற்றும் இசைப்பயணம் குறித்த செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன. ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில், கவிஞர் ஈரோடு தமிழன்பன், கவிஞர் பாரதிதாசன், கவிஞர் புலவர் குழந்தை குறித்த தகவல்களும், படைப்புகளும் இடம்பெற்று உள்ளன.* எட்டாம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில், சுப்பிரமணிய பாரதியார், சந்தக்கவிமணி தமிழழகனார், ஆலங்குடி சோமு, வெங்கம்பூர் சாமிநாதன், குணங்குடி மஸ்தான் சாகிபு ஆகியோர் விபரங்கள் இடம்பெற்றுள்ளன.ஏழாம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில், நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கனார், உடுமலை நாராயண கவி, சுரதா, ராஜமார்த்தாண்டன், சுந்தரனார், பாரதிதாசன், திருக்குறளார் முனிசாமி, கவிஞர் கண்ணதாசன் ஆகியோரின் விபரங்களும், படைப்பு குறித்த குறிப்புகளும் உள்ளன.