9 தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்
9 தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்
"ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இதேபோன்று இரண்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்திய மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது, மீனவ சமூகத்தினரிடையே மிகுந்த கவலையையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்துவதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
Published : August 13, 2026 at 8:01 PM IST
சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமநாதபுரத்தை சேர்ந்த 9 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், "12.08.2026 அன்று இரவு, IND-TN-10-MM-329 என்ற பதிவு எண்ணைக் கொண்ட மீன்பிடி இயந்திரப் படகில் மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 9 இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்த சம்பவம் குறித்து ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரின் தனிப்பட்ட கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.
இந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இதேபோன்று இரண்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்திய மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது, மீனவ சமூகத்தினரிடையே, குறிப்பாக தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில், மிகுந்த கவலையையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தி வருகிறது. இதுநாள்வரையில், 49 இந்திய மீனவர்கள் இலங்கை அரசால் சிறைக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 9 இந்திய மீனவர்களை விடுவிப்பதற்கும் அவர்களின் மீன்பிடிப் படகை மீட்பதற்கும் தேவையான நடவடிக்கை எடுக்கக்கோரி மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் அவர்களுக்கு மாண்புமிகு… pic.twitter.com/P4lghNMokS
எனவே, தகுந்த தூதரக நடவடிக்கைகள் வாயிலாக இலங்கை அரசிடம் இக்கோரிக்கையை முன்வைத்து, சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகையும் விரைவாக விடுவித்து, அவர்கள் பாதுகாப்பாக தாய்நாடு திரும்புவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்வதால் தாங்கள் தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்வது, பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கும், தமிழ்நாட்டு மீனவ சமூகத்தினருக்கும் இவ்விவகாரத்தில் பெரும் நம்பிக்கையையும், நிம்மதியையும் அளிக்கும்.
ஆகவே, இந்த விவகாரத்தில் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் உடனடித் தலையீட்டை நான் எதிர்நோக்கியுள்ளேன்" என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 2,000 -க்கும் மேற்பட்ட மீனவர்கள், 400 -க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிப்பதற்காக நேற்று (ஆக. 12) கடலுக்குள் சென்றனர்.
இந்நிலையில், கச்சத்தீவு - தலைமன்னார் இடையே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு இலங்கை கடற்படையினர் வந்து அவர்களை சுற்றி வளைத்து 9 மீனவர்களை கைது செய்துள்ளனர். மேலும், அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
இதேபோல், கடந்த வாரம் ராமநாதபுரத்தை சேர்ந்த 11 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.