90 சதவீத அதிமுக நிர்வாகிகள் தவெகவில் இணைய விருப்பம்; அடித்து சொல்கிறார் அமைச்சர் ஆதவ்
சென்னை: அ.தி.மு.க.,வில் உள்ள 90 சதவீத நிர்வாகிகள், தமிழக வெற்றி கழகத்தில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக, பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் தெரிவித்தார்.
சென்னை பனையூரில் உள்ள த.வெ.க., அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் முன்னிலையில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலர் கமலக்கண்ணன், மயிலாப்பூர் முன்னாள் எம்.எல்.ஏ., நடராஜ், த.வெ.க.,வில் இணைந்தனர்.
நிகழ்ச்சியில் ஆதவ் பேசியதாவது: மக்கள் முன் யாரெல்லாம் உறுதியாக நிற்கின்றனரோ, அவர்களையே மக்கள் தலைவராக உருவாக்குவர். இப்படித்தான் அண்ணாதுரை, எம்.ஜி,ஆர்., ஜெயலலிதா வழியில் ஜோசப் விஜயும் உருவாக்கப்பட்டு உள்ளார்.
மதச்சார்பின்மை, சமூகநீதியை காக்கவே காங்கிரஸ், வி.சி.க., முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளோம்.
தி.மு.க., ஆட்சியில் முதல்வர் குடும்ப நிதி, அமைச்சர் நிதி, கட்சி நிதி, அதிகாரிகள் நிதி என, ஊழல் இருந்தது. த.வெ.க., ஆட்சியில் சி.எம்.டி.ஏ., பத்திரப்பதிவு, வருவாய், பொதுப்பணி, நெடுஞ்சாலை என, எந்த துறையிலும் ஊழல் இல்லை. தமிழகத்தில் ஊழலை ஒழித்த வரலாற்றை, முதல்வர் விஜய் உருவாக்கியுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி எடுத்த முடிவுகளே, அக்கட்சியின் தோல்விக்கு காரணம். 47 எம்.எல்.ஏ.,க்களை வைத்து கொண்டு, தி.மு.க.,வுடன் இணை ந்து அவர் முதல்வராக முயன்றார். இதனால், அ.தி.மு.க.,வின் 25 எம்.எல்.ஏ.,க்கள், த.வெ.க., அரசை ஆதரித்து ஓட்டளித்தனர்.
உதயநிதியை முதல்வராக்கி, பழனிசாமியை துணை முதல்வராக்க முயன்றார்கள். கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பால், இது சாத்தியமாகவில்லை. அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் த.வெ.க.,வில் இணைவது குறித்து, கூட்டணி கட்சி தலைவர்களிடம் விளக்கம் அளித்தேன்.
நாங்கள் எந்த வாக்குறுதியும் அளித்து, எம்.எல்.ஏ.,க்களை இழுக்கவில்லை; அவர்களே விரும்பி வந்துள்ளனர். 90 சதவீத அ.தி.மு.க., நிர்வாகிகள், த.வெ.க.,வில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர். இனி ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இணைப்பு நிகழ்ச்சிகள் நடக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
த.வெ.க.,வில் இணைந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறுகையில், 'இரண்டு கோடி தொண்டர்களை கொண்ட அ.தி.மு.க., சிதறி சின்னாபின்னமாகி விட்டது. தோல்விக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. அ.தி.மு.க.,வில் நீக்கம், விடுவிப்பு மட்டுமே நடக்கிறது. முதல்வர் விஜயை தமிழக மக்கள் ஏற்று கொண்டுள்ளனர். அதனால், அவரது தலைமையை ஏற்று கொண்டுள்ளோம்,' என்றார்.
த.வெ.க.,வில் இணைந்தவர்களை வரவேற்று பேசிய அமைச்சர் ஆனந்த், 'இரண்டு லட்சம் ரூபாய், மூன்று லட்சம் ரூபாய் மட்டுமே செலவு செய்து, த.வெ.க.,வினர் எம்.எல்.ஏ.,க்களாகி உள்ளனர். த.வெ.க., அமைச்சர்கள் யாராவது ஊழல் செய்தால், முதல்வர் விஜய் உடனடியாக நடவடிக்கை எடுப்பார். த.வெ.க.,வில் பதவி கிடைக்குமா என, எங்களுடன் இணைந்த மாற்று கட்சியினர் கவலைப்பட வேண்டாம். த.வெ.க.,வில் இணைந்தவர்களுக்கு பதவி கிடைக்கும். வரும் உள்ளாட்சி தேர்தலில், அனைத்து இடங்களிலும் த.வெ.க.,தான் வெல்லும்; அதில் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கும்,'' என்றார்.