📅 Tuesday, 04 August 2026 IST | ஆடி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 04, 2026 02:01 PM

அ.தி.மு.க., செயற்குழு, பொதுக்குழு கூட்டம் விரைவில் நடத்தப்படும்: பழனிசாமி அறிவிப்பு

அ.தி.மு.க., செயற்குழு, பொதுக்குழு கூட்டம் விரைவில் நடத்தப்படும்: பழனிசாமி அறிவிப்பு

சென்னை: ''சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பின், அ.தி.மு.க., செயற்குழு, பொதுக்குழு கூட்டப்படும்,'' என, அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்தார்.

சென்னை கிண்டியில் நேற்று தீரன் சின்னமலை சிலைக்கு மரியாதை செய்த பின், பழனிசாமி அளித்த பேட்டி: காவிரி நீர், மேகதாது அணை விவகாரத்தில், த.வெ.க., அரசு என்ன செய்கிறது என எதுவுமே தெரியவில்லை.

அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, கருத்துக்களை கேட்டு, தீர்வு காணுமாறு வலியுறுத்தினேன். விவசாய பிரதிநிதிகளும், பிற அரசியல் கட்சியினரும் இதையே வலியுறுத்தினர்.

ஆனால், அனைத்து கட்சிகளின் கருத்துக்களை பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.

காவிரி விவகாரத்தில் நிரந்தர தீர்வு காணும் வகையில், அ.தி.மு.க., ஆட்சியில் பெற்று தரப்பட்ட தீர்ப்பைக்கூட காப்பாற்ற முடியாத நிலையில் த.வெ.க., அரசு இருக்கிறது.

கட்சி துவங்கி இரண்டு ஆண்டுகள் தான் ஆவதால், காவிரி விவகாரம் என்னவென்றே த.வெ.க.,வுக்கு தெரியாது. அ.தி.மு.க., - தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளின் போராட்ட வரலாறும் தெரியாது.

அ.தி.மு.க.,வில் மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டங்கள் முடிந்துள்ளன. சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பின், அ.தி.மு.க., செயற்குழு கூட்டப்படும். அதன் பிறகு, பொதுக்குழுவும் நடத்தப்படும்.

இவ்வாறு தெரிவித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி, குறுவை சாகுபடிக்கு திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணையை த.வெ.க., அரசு திறக்கவில்லை. டெல்டா மாவட்டங்களில் கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளை பயன்படுத்தி, விவசாயிகள் குறுவை சாகுபடி மேற்கொள்கின்றனர். இதனால், ஒரு ஏக்கருக்கு 25,000 ரூபாய்- செலவாகி உள்ளது. அதே நேரத்தில், தண்ணீர் இல்லாமல், ஒரு லட்சம் ஏக்கரில் நெற்பயிர்கள் கருகி விட்டன. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு, தலா 25,000 ரூபாய் நஷ்டஈடாக வழங்க வேண்டும். மீதமுள்ள பயிர்களை பாதுகாக்க, 24 மணி நேரமும் இலவச மும்முனை மின்சாரம் வழங்க, த.வெ.க., கூட்டணி அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். - பழனிசாமி, பொதுச்செயலர், அ.தி.மு.க.,