📅 Sunday, 20 September 2026 IST | புரட்டாசி 4, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 20, 2026 04:02 PM

ஆசியான் வர்த்தக ஒப்பந்தம்: முன்கூட்டிய அமலாக்கம்

ஆசியான் வர்த்தக ஒப்பந்தம்: முன்கூட்டிய அமலாக்கம்

தென்கிழக்கு ஆசிய வட்டாரத்தில் நெருக்கமான பொருளியல் உறவுகளை வலுப்படுத்த ஆசியான் அமைப்பு முயன்று வருவதால், அவ்வட்டாரத்துக்குள் சரக்குகள், வணிக நடவடிக்கைகளின் பரிமாற்றத்தை எளிதாக்கும் நடவடிக்கைகளை அது மேற்கொண்டு வருகிறது என்று துணைப் பிரதமர் கான் கிம் யோங் தெரிவித்தார்.

மேம்படுத்தப்பட்ட வட்டார சரக்கு வர்த்தக ஒப்பந்தத்தை, திட்டமிடப்பட்ட காலக்கெடுவுக்கு முன்னதாகவே நடைமுறைப்படுத்த ஆசியான் பொருளியல் அமைச்சர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் சனிக்கிழமையன்று (செப்டம்பர் 19) தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.

மணிலாவில் செப்டம்பர் 19 முதல் 22ஆம் தேதி வரை நடைபெற்று வரும் ‘ஆசியான் பொருளியல் அமைச்சர்கள் கூட்டம்’ மற்றும் அது தொடர்பான கூட்டங்களின் முதல் நாள் விவாதங்களில் எட்டப்பட்ட முக்கிய முடிவுகளில் இதுவும் ஒன்றாகும்.

ஆசியான் சரக்கு வர்த்தக ஒப்பந்தம், வர்த்தகத் தடைகளைக் குறைப்பதையும், வணிகங்கள் தங்கள் தயாரிப்புகளைச் சந்தைகள் முழுவதும் எளிதாக விற்பனை செய்வதையும் நோக்கமாகக் கொண்ட விதிகளுடன், இவ்வட்டாரத்துக்குள் சரக்கு வர்த்தகத்தை நிர்வகிக்கிறது.

மேம்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்தம், முதலில் 2027 ஜூன் 1ஆம் தேதி, அதாவது கையெழுத்திடப்பட்ட 18 மாதங்களுக்குப் பிறகு, நடைமுறைக்கு வரவிருந்தது. ஆனால், ஆசியான் இப்போது அதன் அமலாக்கத்தை 2026ஆம் ஆண்டின் இறுதிக்கு முன்கூட்டியே கொண்டுவர நகர்கிறது.

இந்த முன்கூட்டிய அமலாக்கம், சரக்குகள் எல்லைகளைக் கடந்து எளிதாகச் செல்ல அனுமதிக்கும் என்றும், வட்டாரம் முழுவதும் உள்ள சந்தைகளுக்கு வணிகங்களுக்கான சிறந்த அணுகலை வழங்கும் என்றும் திரு கான் கூறினார்.

“ஆசியான் அமைப்பின் இலக்கு தெளிவானது. வட்டாரத்துக்குள் வலுவான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும், வட்டாரத்துக்கு அப்பால் பங்காளித்துவங்களை பலப்படுத்தவும் நாங்கள் கொண்டுள்ள உறுதியில் தொடர்ந்து ஒன்றுபட்டு நிற்போம்,” என்று அவர் கூறினார்.

உலகப் பொருளியலில் நிலவும் நிச்சயமற்ற சூழலுக்கு மத்தியில், ஆசியான் தனது வட்டாரத்துக்குள் வர்த்தகத்தை வலுப்படுத்த முற்படும் வேளையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

மேம்படுத்தப்பட்ட ஆசியான் சரக்கு வர்த்தக ஒப்பந்தமானது, சுங்க நடைமுறைகள், விநியோகச் சங்கிலிகள், பிற வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட விதிகள் மூலம், தென்கிழக்கு ஆசியாவில் வர்த்தகத் தடைகளைக் குறைக்கவும் சரக்கு போக்குவரத்தை மேம்படுத்தவும் நோக்கமாகக் கொண்டுள்ளது.