📅 Saturday, 03 October 2026 IST | புரட்டாசி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Technology May 27, 2026 10:32 PM

ஆக்லாந்தில் உபன்யாச நிகழ்ச்சி

ஆக்லாந்தில் உபன்யாச நிகழ்ச்சி

ஆக்லாந்தில் உபன்யாச நிகழ்ச்சி ஆக்லாந்தின் சரணாகதி அமைப்பினர் பிப்ரவரி 13 மற்றும் 14 ஆம் தேதி ஸ்ரீ ஈரோடு பாலாஜி பாகவதரின் உபன்யாச நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். இரு தினங்களும் மவுண்ட ஈடன் வார் மெமோரியல் ஹாலில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.ஆஸ்திக உபந்யாசர்களில் சிறந்தவரான ஶ்ரீ பாலாஜி அவர்கள் ராமாயணம், மஹாபாரதம், மற்றும் பாகவதத்தை சிறந்த முறையில் ஆராய்ந்து ஹரிகதை மூலம் இந்தியா மற்றும் உலக நாடுகள் முழுவதும் சென்று இறைவன் அருளை உபன்யாசம் செய்து வருகிறார். ஈரோடு ஸ்ரீ பாலாஜி பாகவதர், இன்றைய ஆன்மீக உலகில் நாமசங்கீர்த்தனம் மற்றும் உபன்யாசங்களின் மூலம் பலரது உள்ளங்களைக் கவர்ந்த ஒரு மிகச்சிறந்த கலைஞர். பக்தி மார்க்கத்தை எளிமையாகவும், இனிமையாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அவர் முன்னோடியாகத் திகழ்கிறார். அவரைப் பற்றியும், அவருடைய தனித்துவமான நாராயணீய உபன்யாசம் மற்றும் நாமசங்கீர்த்தனச் சிறப்புகளைப் பற்றியும் ஆக்லாந்தில் இரண்டு நாட்களும் உபன்யாசம் நிகழ்த்தினார். இரு தினமும் மாலை 7 மணி முதல் 9 மணி வரை உபன்யாசம் செய்தார். பாலாஜி பாகவதர் பாரம்பரியமான கர்நாடக இசைப் பின்னணியும், ஆழ்ந்த ஆன்மீக அறிவும் கொண்டவர். இளம் வயதிலேயே நாமசங்கீர்த்தனத்தில் ஈடுபாடு கொண்டு, குருமார்களின் ஆசியுடன் இந்தத் தொண்டினைத் தொடங்கினார். கடினமான சமஸ்கிருத ஸ்லோகங்களையும், தத்துவங்களையும் பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய தமிழில் விளக்குவது இவருடைய தனிச்சிறப்பு.ஒருநாள் நாராயணீய உபன்யாசம்'ஸ்ரீமந் நாராயணீயம்' என்பது மேல்பத்தூர் நாராயண பட்டத்திரியால் எழுதப்பட்ட மகாவிஷ்ணுவின் லீலைகளைப் போற்றும் ஒரு அற்புதமான காவியம். பொதுவாகப் பல நாட்கள் சொல்லப்பட வேண்டிய இந்த நாராயணீயத்தை, 'ஒரு நாள் நாராயணீய உபன்யாசம்' என்ற வடிவில் பாலாஜி பாகவதர் வழங்குவது மிகவும் பிரபலம். குருவாயூரப்பனின் லீலைகளை, தசாவதாரக் கதைகளை உள்ளடக்கிய 100 தசகங்களையும் (சுமார் 1000 ஸ்லோகங்கள்) அதன் சாராம்சம் குறையாமல் ஒரு சில மணி நேரங்களுக்குள் தொகுத்து வழங்கினார். அவர் உபன்யாசம் செய்யும் போது, கேட்பவர்களுக்குத் தாங்களே குருவாயூர் கோவிலில் அமர்ந்து அந்த லீலைகளை நேரில் காண்பது போன்ற ஒரு பக்தி உணர்வு ஏற்பட்டது. நாராயணீயம் பாராயணம் செய்வது உடல் மற்றும் மன பிணிகளைத் தீர்க்கும் என்பது நம்பிக்கை. 'ஹரி நாமத்தை' உச்சரிப்பதன் முக்கியத்துவத்தை அஜாமிளன் கதையின் மூலமாக வலியுறுத்தி, எளிமையான பாடல்கள் மூலம் பிரவசனம் செய்தது ரசிக்கும்படி இருந்தது. இரண்டு நாட்களும் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ பாலாஜி பாகவதரின் உபன்யாசத்தை கேட்டு மகிழ்ந்தனர். இரண்டு தினங்களும் வந்திருந்த அனைவருக்கும் சரணாகதி அமைப்பினர் சிறப்பான முறையில் மகா பிரசாதம் வழங்கினர்.- ஆக்லாந்தில் இருந்து சந்திரா சங்கரன்