📅 Saturday, 15 August 2026 IST | ஆடி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Technology June 23, 2026 02:01 PM

ஆள்மாறாட்ட இணைய மோசடிகளில் 3 வாரங்களில் $74,000 இழப்பு

ஆள்மாறாட்ட இணைய மோசடிகளில் 3 வாரங்களில் $74,000 இழப்பு

நிலப் போக்குவரத்து ஆணைய (எல்டிஏ) அதிகாரிகள் போன்று ஆள்மாறாட்டம் செய்து இணையத்தில் கடந்த மூன்று வாரங்களில் நடத்தப்பட்ட மோசடிகளில் பலர், கிட்டத்தட்ட $74,000ஐ இழந்துவிட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

இம்மாதம் முதல்தேதியிலிருந்து திங்கட்கிழமை (ஜூன் 22) வரை 13 இணைய மோசடிச் சம்பவங்கள் குறித்துத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது. அத்தகைய மோசடிகளுக்கு எதிராகப் பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் என்று அது ஆலோசனை கூறியது.

அதுபோன்ற மோசடிச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள், மோசடிக்காரர்களிடமிருந்து குறுந்தகவல்களைப் பெறுவர். மோசடிப்பேர்வழிகள் தங்களை நிலப் போக்குவரத்து ஆணையத்தின் அதிகாரிகள் என்று கூறிக்கொள்வர். அபராதத்தைத் தவிர்க்க, நிலுவையில் உள்ள மின்னியல் சாலைக் கட்டணங்களைச் செலுத்துமாறு பாதிக்கப்பட்டோரை அவர்கள் கேட்டுக்கொள்வர். அதற்கெனக் கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளைச் சொடுக்குமாறும் பாதிக்கப்பட்டவர்கள் அறிவுறுத்தப்படுவர்.

அந்த இணைப்பு, அவர்களை நிலப் போக்குவரத்து ஆணையம் அல்லது ‘ஒன்மோட்டாரிங்’ போன்று வடிவமைக்கப்பட்ட போலி இணையத்தளத்திற்கு இட்டுச்செல்லும்.

அங்கு, வாகன எண்ணையும் வங்கி, கடன் அட்டை உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களையும் நிரப்புமாறு அவர்கள் கேட்டுக்கொள்ளப்படுவர்.

பாதிக்கப்பட்டோர், தங்களின் கணக்குகளிலிருந்து முறையற்ற விதத்தில் பணம் எடுக்கப்பட்டதைக் கண்டறியும்போதுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதை உணர்வார்கள்.

பொதுமக்கள் இதுபோன்ற போலி இணைப்புகள் குறித்து விழிப்புடன் இருக்கவேண்டும் என்று ஆணையம் கூறுகிறது.

நிலுவையில் உள்ள கட்டணங்கள் அல்லது சாலை வரிக் கட்டணங்கள் குறித்து ஆணையம் தகவல்களை அனுப்புவது வழக்கம். அத்தகைய தகவல்களில், ‘ஒன்மோட்டாரிங்’ இணையத்தளத்திற்கோ பணம் செலுத்தும் இணையவாசல்களுக்கோ செல்லும் இணைப்புகள் இருக்கமாட்டா என்பதைக் காவல்துறை சுட்டியது.

ஆணையத்திடமிருந்து வாகன உரிமையாளர்களுக்கு அனுப்பப்படும் குறுந்தகவல்களில் ‘கவ்.எஸ்ஜி’ (gov.sg) என்ற அனுப்புநர் அடையாளம் இருக்கும். அதேநேரம், வாகன உரிமையாளரின் ‘ஒன்மோட்டாரிங்’ கணக்கில் பதிவேற்றப்படும் மின்கடிதங்களை ‘சிங்பாஸ்’ மூலம் மட்டுமே பார்க்க முடியும். கடிதத் தொடர்புமுறையைத் தெரிவுசெய்தவர்களுக்கு வாகன உரிமையாளரின் முகவரிக்குக் கடிதங்கள் அனுப்பப்படும்.

மோசடிகள் பற்றி மேலும் அறிய விரும்புவோர், www.scamshield.gov.sg என்ற இணையத்தளத்திற்குச் செல்லலாம் அல்லது 1799 என்ற ஸ்கேம்‌ஷீல்டு உதவித் தொலைபேசி எண்களைத் தொடர்புகொள்ளலாம்.