📅 Wednesday, 18 November 2026 IST | கார்த்திகை 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics June 22, 2026 09:02 AM

ஆளுநர், முதல்வர் மோதல் தவிர்ப்பு... மாநில மக்கள் நலனுக்கு நல்லதுதானே!

ஆளுநர், முதல்வர் மோதல் தவிர்ப்பு... மாநில மக்கள் நலனுக்கு நல்லதுதானே!

ஆளுநர், முதல்வர் மோதல் தவிர்ப்பு... மாநில மக்கள் நலனுக்கு நல்லதுதானே!

த.வெ.க ஆட்சியின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் நாள், தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம், ஆளுநர் உரை, மீண்டும் தேசிய கீதம் எனச் சுமுகமாக முடிந்திருக்கிறது. இதை, கூட்டாட்சியின் நல்ல தொடக்கமாகப் பார்க்கலாம்.

இந்தச் சுமுகத்தை குறிப்பிட்டுச் சொல்லக் காரணம், கடந்தகாலத்தின் கசப்பு. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான 2017 - 21 அ.தி.மு.க ஆட்சியில், அப்போதைய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடுவது, அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் இட ஒதுக்கீடு உள்ளிட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தர தாமதித்தது உள்ளிட்டவை சர்ச்சையாகின.

ஸ்டாலின் தலைமையிலான 2021 - 2026 தி.மு.க ஆட்சியில் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி, தேசிய கீதத்தை முதலில் இசைக்கவில்லை எனக் கூறி, மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆளுநர் உரை வாசிப்பு நிகழ்ச்சியைத் தவிர்த்ததோடு, சட்டப்பேரவையிலிருந்து பாதியிலேயே வெளியேறினார். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்தது, பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் எனப் பல விஷயங்களிலும் தீவிர மோதல் நீடித்தது.

தற்போது, முதல்வர் விஜய் தலைமையிலான சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம், தேசிய கீதம் இரு முறை வாசிப்பு எனக் கடந்த சில ஆண்டுகளாக நிலவிவந்த ஆளுநர் - தமிழக அரசுக்கு இடையிலான மோதல் தவிர்க்கப்பட்டிருக்கிறது. ஆளுநர் அர்லேகர், மாநில அரசு தயாரித்த உரையை முழுமையாக வாசிக்க, அதிகார மோதல்கள் அணைந்துள்ளன.

ஆளுநர், மத்திய அரசின் பிரதிநிதி. ஆனால், பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் மத்திய பா.ஜ.க-வின் ‘ஏஜென்ட்’போலச் செயல்படுகிறார்கள் என்ற விமர்சனம் பரவலாக இருக்கிறது. மறுபுறம், மாநில முதல்வர்கள் கட்சித் தலைவராக நடந்து மோதலை வளர்க்கிறார்கள். இரண்டுக்கும் நடுவில் மாட்டுவது மக்களும், வளர்ச்சித் திட்டங்களும்தான்.

ஆர்.என்.ரவியின் மோதல் போக்கு தி.மு.க-வுக்கு அரசியல்ரீதியாகச் சாதகமாகவே அமைந்தது என ஸ்டாலினே பகிரங்கமாகச் சொன்னார். தி.மு.க-வுக்கு வேண்டுமானால் சாதகமாக இருந்திருக்கலாம். இணக்கமற்ற இந்தச் சூழலால், பாதிக்கப்பட்டது என்னவோ மாநில நலன்தான். மாநிலத்துக்குத் தரவேண்டிய நிதியை முழுமையாகத் தர மத்திய அரசு மறுக்க, தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்கப்பட்டன.

இப்படிப்பட்ட சூழலில் தற்போதைய விஜய் அரசும், ஆளுநர் அர்லேகரும் மோதலைத் தவிர்த்திருப்பது, த.வெ.க அரசு நிர்வாக அரசியலை முன்னிலைப்படுத்துவதாகப் பேசப்படுகிறது.

இதற்குப் பின்னாலும் அரசியல் கணக்குகள் இருக்கலாம். ஆனால், `நிர்வாக மோதல் தவிர்க்கப் பட்டு மாநில மக்கள் நலத் திட்டங்களுக்கு உரிய நிதி கிடைத்து, திட்டங்கள் சிரமமின்றி நிறைவேற்றப்படுமானால், அதைக் கைதட்டி வரவேற்கலாம்’ என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.

மத்திய அரசு, ஆளுநர்கள் மூலம் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு நெருக்கடி ஏற்படுத்துவதைத் தவிர்த்து, ஆரோக்கியமான சூழலை மாநிலங்களில் ஏற்படுத்த முன்வருவதோடு, மாநில உரிமைகள் பாதிக்கப்படாத வகையிலும் நடந்துகொண்டால், நல்லதுதான்.

கூட்டாட்சித் தத்துவத்தை மாநில, மத்திய அரசுகள் பின்பற்றினால் மக்களுக்கு நல்லதுதானே!