ஆர்.எம்.கே.வியில் பர்சேஸ் செய்த தனுஷ், மம்மூட்டி.. ஓம் ஷூட்டிங் பரபரனு நடக்குது ப்பா
சென்னை: தனுஷ் நடிப்பில் அடுத்ததாக ஓம் திரைப்படம் வரவிருக்கிறது. அதனை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கிறார். மம்மூட்டி, சாய் பல்லவி உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். அக்டோபர் 16ஆம் தேதி படமானது ரிலீஸாகவிருக்கிறது. நேற்று படத்திலிருந்து முதல் பாடல் வெளியானது.இந்நிலையில் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமடைந்திருக்கின்றன.
இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவரான தனுஷ்; நடிகராக மட்டுமின்றி இயக்குநர், பாடலாசிரியர், பாடகர் என பல அவதாரங்களை கொண்டிருப்பவர். அவருக்கு கடந்த சில வருடங்களாகவே எதிர்பார்த்தபடியே மிகப்பெரிய வெற்றி கிடைக்கவில்லை. இட்லி கடை வசூலில் நல்ல நிலையை எட்டினாலும்; விமர்சன ரீதியாக படம் அடிதான் வாங்கியது. குல தொழிலை ஆதரிக்கும்படியான கதையை தனுஷ் எடுத்துவிட்டார் என்றும் பேச்சுக்கள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
கர படம் தோல்வி: கடைசியாக அவர் போர்த்தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் கர திரைப்படத்தில் நடித்தார். அந்தப் படத்தின் மீதும் எக்கச்சக்க நம்பிக்கையை வைத்திருந்தார். ஆனால் படம் படுதோல்வியை சந்தித்தது. கர படத்தை பார்த்தவர்கள் எல்லாம்; இவரா போர்த்தொழில் படத்தை இயக்கியவர்; ஏதோ அதில் ஸ்கேம் செய்துவிட்டார் போல என்று கலாய்த்து கமெண்ட்ஸ்களை பறக்கவிட்டார்கள். கர திரைப்படம் கரை சேராதது கண்டிப்பாக தனுஷுக்கு பெரிய ஏமாற்றத்தைத்தான் கொடுத்திருக்கும்.
அடுத்த படங்கள்: தனுஷின் லைன் அப்பை பொறுத்தவரை செம பிஸியாக இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அடுத்ததாக அவரது நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஓம் திரைப்படம் வரவிருக்கிறது. ஜெயிலர் 2வுக்கு போட்டியாக அக்டோபர் 16ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. கடந்த படங்களின் தோல்வியை இதில் எப்படியாவது சரிக்கட்டிவிட வேண்டும் என்பதில் முழு முனைப்போடு இருக்கிறார்.
முதல் சிங்கிள்: படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். நேற்று தனுஷின் 43வது பிறந்தநாளையொட்டி முதல் சிங்கிள் வெளியானது. வழக்கம்போல் சாய் இந்தக் காலத்துக்கு தேவையான சத்தங்களை இசையாக கொடுத்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். பாடலின் ஆரம்ப வரிகள் எல்லாம் சுத்தமாக புரியவில்லை என்பதும் ரசிகர்களின் கருத்து. இருப்பினும் பலரும் சோஷியல் மீடியாவில் வைப் செய்ய தொடங்கிவிட்டார்கள்.
சென்னையில் ஷூட்டிங்: படத்தின் ரிலீஸுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கின்றன. இந்நிலையில் சென்னை விஜயா ஃபோரம் மாலில் இருக்கும் ஆர்.எம்.கே.வி துணி கடையில் இன்று ஓம் படத்தின் ஷூட்டிங் நடந்தது. தனுஷும், மம்மூட்டியும் சேர்ந்து சென்று துணிகளை வாங்கும் காட்சி படமாக்கப்பட்டது. அநேகமாக இதுதான் இறுதி ஷெட்யூலாக இருக்கும் என்றும்; அடுத்ததாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஆரம்பிக்கும் என்றும் தெரிகிறது.