📅 Saturday, 08 August 2026 IST | ஆடி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 07, 2026 03:33 AM

ஆடி கிருத்திகை: திருத்தணி முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

ஆடி கிருத்திகை: திருத்தணி முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருவள்ளூர்: திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை திருவிழா இன்று நடைபெற்றது. இந்தத் திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அமைந்துள்ளது முருகப் பெருமானின் ஐந்தாம் படைவீடான சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இங்கு ஆடிக் கிருத்திகை திருவிழா கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி ஆடி அஸ்வினி விழாவோடு தொடங்கியது. தொடர்ந்து, நேற்று ஆடி பரணி விழா நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக இன்று ஆடிக் கிருத்திகை விழா நடைபெற்றது. ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு முருகப் பெருமானுக்கு அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீப ஆராதனை நடைபெற்றது. மேலும், தங்கக் கவசம், பச்சைக்கல் பதித்த வைரமாலை அணிவிக்கப்பட்டது.

இந்தத் திருவிழாவை முன்னிட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட தமிழகப் பகுதிகள் மற்றும் புதுச்சேரி மட்டுமல்லாமல், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தணியில் குவிந்தனர்.

பக்தர்கள் பலரும் தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றும் வகையில், கோயில் மலையடிவாரத்தில் உள்ள சரவணபொய்கை, மேல்திருத்தணி நல்லாங்குளம் ஆகியவற்றில் புனித நீராடி, பால், பன்னீர், மலர், மயில், அலகு உள்ளிட்ட பல்வேறு வகையான காவடிகளுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

ஆடிக் கிருத்திகை திருவிழாவின் முக்கிய திருவிழாவான, மூன்று நாள் தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, முதல் நாள் தெப்பத் திருவிழா இன்று மாலை நடைபெறவுள்ளது. இதில், மலைக்கோயில் காவடி மண்டபத்தில் இருந்து உற்சவர், வள்ளி, தெய்வானை சமேதராய் தேர் வீதியில் வலம் வந்து மலையடிவாரத்தில் உள்ள சரவணப் பொய்கையில் அலங்கரிக்கப்பட்டுள்ள தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

ஆடிக் கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு, திருத்தணி நகர் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக பல்வேறு இடங்களில் இருந்து நூறு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னையிலிருந்து அரக்கோணம் வரை செல்லும் 3 மின்சார ரயில்கள், திருத்தணி வரை நீடிக்கப்பட்டுள்ளன. மேலும், மருத்துவ வசதிகள், குடிநீர், கழிப்பறை, குளியலறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.