ஆவடி மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கிய உணவில் பல்லி: 4 பெண்களுக்கு தீவிர சிகிச்சை
ஆவடி மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கிய உணவில் பல்லி: 4 பெண்களுக்கு தீவிர சிகிச்சை
சென்னை: ஆவடி மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி இருந்ததால், அதை சாப்பிட்ட 4 பெண் பணியாளர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆவடி மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கான காலை உணவு, ஆவடி சின்னம்மன் கோயில் அருகே ஸ்ரீஹரி தனியார் நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று காலை 7 மணியளவில் உணவு தயாரிக்கப்பட்டு அந்தந்த மண்டல அலுவலகத்தில் உள்ள தூய்மை பணியாளர்கள் உணவு அருந்தும் அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி ஆவடி மாநகராட்சி மண்டலம் 3ல், பருத்திப்பட்டு பசுமை பூங்கா பகுதி தூய்மை பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, சாம்பாரில் பல்லி இறந்து கிடப்பதைக் கண்டு தூய்மை பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பல்லி விழுந்த சாம்பாரை சாப்பிட்ட தூய்மை பணியாளர்கள் வசந்தா (50), எமிலி (50), குமார் (40), விஜயலட்சுமி (50) ஆகியோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனைக் கண்ட சக தூய்மை பணியாளர்கள், உடல்நிலை பாதித்த 4 பேரையும் மீட்டு ஆவடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், காலை உணவு சாப்பிட்ட அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த ஆவடி மாநகராட்சி ஆணையர் சரண்யா, மேயர் உதயகுமார், துணை மேயர் சூரியகுமார், முன்னாள் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், ஆவடி சுகாதாரத் துறை அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள், பாதிக்கப்பட்ட தூய்மை பணியாளர்களிடம் நலம் விசாரித்தனர்.
கடந்த சில தினங்களாக தூய்மை பணியாளர்களுக்கு தயாரிக்கும் உணவில் கரப்பான் பூச்சி, பல்லி, புழு ஆகியவை இருப்பதாகவும், சரியாக சாப்பாடு வேக வைக்காமல் இருப்பதாகவும் பலமுறை மாநகராட்சி அதிகாரியிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தூய்மை பணியாளர்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து ஆவடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
* உணவு மாதிரிகள் ஆய்வு
ஆவடி மாநகராட்சி ஆணையர் சரண்யா கூறுகையில், ‘ஆவடி தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவில் பல்லி இருந்த தகவல் அறிந்து உடனடியாக மற்றவர்களுக்கு உணவு அளிப்பது நிறுத்தப்பட்டது. உடனடியாக தூய்மை பணியாளர்களை மருத்துவ பரிசோதனைக்காக ஆவடி அரசு மருத்துவமனைக்கு வரவழைத்து பார்த்த போது அதில் 4 தூய்மை பணியாளர்கள் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை பார்த்து நலன் விசாரித்தேன். அவர்களுக்கு வாந்தி தலைசுற்றல் இருப்பதாக கூறியதன்பேரில் தீவிர கண்காணிப்பில் வைக்கும்படி மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினேன்.
பெரிய பாதிப்பு ஏதுமில்லை. மற்றபடி அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் உடல் பரிசோதனை மேற்கொள்ளும்படி மருத்துவர்களிடம் அறிவுறுத்தேன். உணவு பாதுகாப்பு துறை மூலம் 21 இடங்களில் வழங்கப்பட்ட உணவு மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி அங்கீகரிக்கப்பட்ட உணவு தயாரிக்கும் நிறுவனத்தின் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது. உணவு மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது தவறுகள் கண்டறிந்தால் அந்த நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
\n ${e.display_status||e.scheduleTime}\n
\n ${e.display_status+", "+e.scheduleTime}\n