ஐசிசி ரேங்கிங்.. டாப் 10
ஐசிசி ரேங்கிங்.. டாப் 10-இல் இருந்து வெளியேறிய பும்ரா.. முன்னேறிய ஸ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல்
துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ள புதிய டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் பெரிய அளவில் முன்னேறி உள்ளனர். அதே சமயம், வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு தரவரிசையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
டி20 பேட்டிங் தரவரிசையில், இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 218 ரன்கள் குவித்த இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், 62 இடங்கள் அதிரடியாக முன்னேறி 31வது இடத்தைப் பிடித்துள்ளார். இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் 12 இடங்கள் முன்னேறி 7வது இடத்தைப் பிடித்து முதன்முறையாக டாப் 10 வரிசையில் நுழைந்துள்ளார். 131 ரன்கள் விளாசிய ஜோஸ் பட்லர் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இந்திய வீரர்களான இஷான் கிஷன் மற்றும் அபிஷேக் சர்மா தொடர்ந்து முதல் இரண்டு இடங்களில் நீடிக்கின்றனர். ஆனால், திலக் வர்மா 8வது இடத்திற்கும், சூர்யகுமார் யாதவ் 16வது இடத்திற்கும் சரிந்துள்ளனர். பந்துவீச்சு தரவரிசையில் ஜஸ்பிரித் பும்ரா 5 இடங்கள் சரிந்து, டாப் 10 பட்டியலிலிருந்து வெளியேறி 13வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். இங்கிலாந்தின் ஜோப்ரா ஆர்ச்சர் 8 இடங்கள் முன்னேறி 18வது இடத்தைப் பிடித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, 57 ரன்கள் குவித்த ஆல்-ரவுண்டர் அக்சர் படேல், ஒருநாள் ஆல்-ரவுண்டர் தரவரிசையில் 3 இடங்கள் முன்னேறி 9வது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். மேலும் அவர் பேட்டிங்கில் 18 இடங்கள் முன்னேறி 73வது இடத்திற்கும், பந்துவீச்சில் 2 இடங்கள் முன்னேறி 42வது இடத்திற்கும் முன்னேறி உள்ளார்.
இந்தப் போட்டியில் 52 ரன்கள் எடுத்த வாஷிங்டன் சுந்தர் 16 இடங்கள் முன்னேறி 55வது இடத்தைப் பிடித்துள்ளார். பேட்டிங்கில் 80 ரன்கள் குவித்த சுப்மன் கில், முதல் இடத்தில் இருக்கும் நியூசிலாந்தின் டேரில் மிட்செலை விட வெறும் 11 புள்ளிகள் மட்டுமே பின்தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.