AK 64 First Update: டேர் டெவில்.. ஒன்றரை வருட தவத்துக்கு பலன் கிடைச்சிடுச்சு.. தல படம் வருது மக்கா
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் என்றால் அது, கடந்த ஆண்டு வெளியான படமான குட் பேட் அக்லி படம் தான். இந்த படத்திற்குப் பின்னர் இவரது 64ஆவது படம் எப்போது தயாரிக்கப்படும் என்ற கேள்வி பலருக்கும் இருந்து வந்த நிலையில், ஒரு ஆண்டுக்குப் பிறகு அஜித்குமாரின் 64ஆவது படம் குறித்த அப்டேட்டை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
அஜித்குமார் கடந்த 2024ஆம் ஆண்டு இறுதியில் இருந்தே முழுக்க முழுக்க தனது கார் ரேஸில் தான் கவனம் செலுத்தி வருகிறார். சர்வதேச அளவில் நடைபெற்றுவரும் கார் பந்தயங்களில் அவரது அஜித்குமார் ரேஸிங் அணி கலந்து கொண்டு பதக்கங்களை வென்று வருகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிட்டது.
அஜித்குமாரை திரையில் மட்டும் பார்த்து உற்சாகமடைந்து வந்த ரசிகர்கள், துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அவரது அணி கலந்து கொண்ட போட்டிகளுக்கு நேரில் சென்று அவரது அணியை உற்சாகப்படுத்தினர். தனது அணி வெற்றி பெற்ற தருணங்களில் எல்லாம், இந்திய தேசியக் கொடியை தனது தலைக்கு மேல் உயர்த்தி, அசைத்து மொத்த நாட்டிற்கும் பெருமை சேர்த்தார்.
இவரது அடுத்த படம் எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் தொடர்ந்து இணையத்தில் கேள்வி எழுப்பிக் கொண்டு இருந்தனர். இப்படி இருக்கையில் அஜித்குமார் தரப்பில் தயாரிப்பாளர் சங்கத்தில், அஜித்குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ் எல்.எல்.சி என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனைத்தை பதிவு செய்தார். இது அவரது ரேஸிங் அணியின் ஆவணப்படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுத்தான் அஜித், தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் அவரது 64ஆவது படத்தின் அப்டேட்டை அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், படத்தின் பெயர் டேர் டெவில் என்றும், படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் படத்தை அஜித்துன் மனைவி ஷாலினி அஜித்குமார் தயாரிக்கிறார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.