📅 Friday, 14 August 2026 IST | ஆடி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 14, 2026 05:01 PM

அலைகளில் சாகசம்! சர்வதேச சர்ஃபிங் மையமாக மாறும் மாமல்லபுரம்: உலகை ஈர்க்கும் உலகக்கோப்பை தொடர்!

அலைகளில் சாகசம்! சர்வதேச சர்ஃபிங் மையமாக மாறும் மாமல்லபுரம்: உலகை ஈர்க்கும் உலகக்கோப்பை தொடர்!

வரலாற்றுச் சிறப்புமிக்க மாமல்லபுரம் என்றாலே நம் நினைவுக்கு வருவது கம்பீரமாக நிற்கும் கடற்கரைக் கோயிலும், பல்லவர் காலச் சிற்பங்களும்தான். ஆனால் தற்போது இந்த அழகிய நகரம் சர்வதேச விளையாட்டு உலகின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. மாமல்லபுரம் கடற்கரையில் நடைபெறும் சர்வதேச சர்ஃபிங் போட்டியில் பல நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்று, கடல் அலைகளில் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அலைகளில் அரங்கேறும் சாகசம்:

ஆகஸ்ட் 12 முதல் 16-ம் தேதி வரை மாமல்லபுரம் கடற்கரையில் Shore Temple Classic QS 2000 மற்றும் Pro Junior போட்டிகள் நடைபெறுகின்றன. சுமார் 120 வீரர்கள் 12 நாடுகளில் இருந்து பங்கேற்கின்றனர். இந்திய அணியில் மட்டும் 20 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். தாய்லாந்து, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, ஜப்பான், பிலிப்பைன்ஸ், தென் கொரியா, ஸ்வீடன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் வீரர்களும் களமிறங்கியுள்ளனர்.

இந்தப் போட்டியின் மற்றொரு சிறப்பு, இந்தியாவில் முதன் முறையாக World Surf League-ன் Pro Junior போட்டி நடைபெறுவதுதான். இதன் மூலம் இளம் சர்ஃபிங் வீரர்களுக்கு சர்வதேச அளவில் தங்கள் திறமையை நிரூபிக்க ஒரு முக்கியமான வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஏற்கெனவே 2023-ல் இந்தியாவில் முதன்முறையாக WSL போட்டி நடைபெற்ற நிலையில், தற்போது மீண்டும் மாமல்லபுரம் சர்வதேச சர்ஃபிங் போட்டியின் மையமாகியுள்ளது.

சர்ஃபிங் என்பது வெறுமனே அலைகளில் சறுக்கிச் செல்லும் விளையாட்டு அல்ல. அலைகளின் வேகம், உயரம், திசை ஆகியவற்றைக் கணித்து, சரியான நேரத்தில் பல்வேறு சாகசங்களைச் செய்யவேண்டும். உடல் வலிமை மட்டுமின்றி, சமநிலை, வேகம், மனத்திட்பம் மற்றும் கடல் சூழலைப் புரிந்துகொள்ளும் திறனும் அவசியம்.

இந்தப் போட்டியில் கிடைக்கும் 3,000 தரவரிசைப் புள்ளிகள் வீரர்களுக்கு மிகவும் முக்கியமானவை. சர்வதேச தரவரிசையில் முன்னேறுவதற்கும், அடுத்தடுத்த உயர்நிலைப் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுவதற்கும் இந்தப் புள்ளிகள் உதவுகின்றன.

மாமல்லபுரத்தின் நீண்ட வலதுபுற அலைகள் உயர்தர சர்ஃபிங்கிற்கு ஏற்றதாக இருப்பதும் போட்டியின் சிறப்பாகும். உள்ளூர் வீரர்கள் தங்கள் சொந்த கடற்கரையிலேயே உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வீரர்களுடன் போட்டியிடுவது அவர்களுக்கு அனுபவத்தையும் தன்னம்பிக்கையையும் அளிக்கும்.

இந்த நிகழ்வின் மிக முக்கியமான தாக்கம் இந்தியாவில் சர்ஃபிங் விளையாட்டுக்கான எதிர்கால பாதையை உருவாக்குவதில் தான் உள்ளது.. குறிப்பாக இளம் வீரர்களுக்கு சர்வதேச தரம்கொண்ட போட்டியில் பங்கேற்று அனுபவம் வாய்ந்த வீரர்களுடன் போட்டியிடும் வாய்ப்பு கிடைப்பது அவர்களின் வளர்ச்சிக்கு உதவும்.

இந்தியாவில் முதல்முறையாக நடைபெறும் WSL Pro junior போட்டி இளம் தலைமுறையினருக்கான புதிய கதவுகளை திறந்து உள்ளது.. சர்ஃபிங் விளையாட்டை இந்தியாவில் மேலும் வளர்க்கும் நோக்கில் எதிர்காலத்தில் கூடுதல் WSL போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய வீரர்கள் வெளிநாடுகளுக்கு சென்று மட்டுமே சர்வதேச அனுபவத்தைப் பெறவேண்டிய நிலை குறையலாம்.

சொந்த நாட்டிலேயே உயர் தர போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்பதன் மூலம் அவர்களின் திறமையும் தரவரிசையும் மேம்பட வாய்ப்பு உள்ளது.. மாமல்லபுரம் போன்ற சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் சர்வதேச போட்டி நடைபெறுவது விளையாட்டைத் தாண்டியும் பல்வேறு வாய்ப்புகளை வழங்குகிறது. வெளிநாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் வருகை உள்ளூர் சுற்றுலா மற்றும் கடற்கரை சார்ந்த தொழில்களுக்கும் ஊக்கமளிக்கக் கூடும்.

அதே நேரத்தில் கடலை மையமாகக் கொண்ட ஒரு விளையாட்டை இளம் தலைமுறையினர் நேரடியாக பார்ப்பது அவர்கள் இடையே புதிய விளையாட்டு ஆர்வத்தை உருவாக்கும். இவ்வாறு ஒரு சர்வதேச போட்டி ஒரு சில நாட்கள் நடைபெறும் விளையாட்டு நிகழ்வாக மட்டும் இல்லாமல் இந்தியாவில் சர்ஃபிங்கிற்கான நீண்ட கால வளர்ச்சிக்கு அடித்தளமிடும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.

பல்லவர் காலக் கலைச் செல்வத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திய மாமல்லபுரம், இன்று விளையாட்டு உலகிலும் புதிய அடையாளத்தை உருவாக்கி வருகிறது. கடல் அலைகளில் வீரர்கள் நிகழ்த்தும் ஒவ்வொரு சாகசமும் தமிழகத்தில் சர்ஃபிங் விளையாட்டின் வளர்ச்சிக்கு ஒரு புதிய அத்தியாயத்தைத் திறக்கிறது.

வரலாறும், சுற்றுலாவும், சர்வதேச விளையாட்டும் ஒரே இடத்தில் சங்கமிக்கும் மாமல்லபுரம், இனி இந்திய சர்ஃபிங்கின் முக்கியமான முகவரிகளில் ஒன்றாக மாறுவதற்கான வாய்ப்பு அதிகம்.

இந்தத் தொகுப்பின் மூலம் மாமல்லபுரத்தில் நடைபெறும் சர்வதேச சர்ஃபிங் போட்டியின் முக்கியத்துவம், இந்திய விளையாட்டு வீரர்களுக்கான உலகளாவிய வாய்ப்புகள் மற்றும் தமிழக கடற்கரைச் சுற்றுலாவில் ஏற்படும் பொருளாதார மாற்றங்களை விரிவாக அறிந்து கொள்ளலாம்.