அமைச்சரை முற்றுகையிட்ட அ.தி.மு.க.,வினரால் பரபரப்பு
தாராபுரம்: அமைச்சர் சம்பத்குமார் காரை முற்றுகையிட்டதால் , அ.தி.மு.க., - த.வெ.க.,வினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில், த.வெ.க., வேட்பாளர் சத்யபாமாவுக்கு ஆதரவாக, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார், நஞ்சியம்பாளையம் கிராமத்தில், நேற்று முன்தினம் இரவு பிரசாரத்துக்கு சென்றபோது, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளை தீர்க்க வலியுறுத்தி, பொதுமக்கள் அவரது காரை முற்றுகையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்பகுதியில் திரண்ட அ.தி.மு.க.,வினர், அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர். இதனால், அ.தி.மு.க., -- த.வெ.க., நிர்வாகிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளுமுள்ளாக மாறியது. போலீசார் இருதரப்பினரையும் சமாதானம் செய்து கலைத்தனர்.
அமைச்சர் சம்பத்குமார் கூறுகையில், ''மக்கள் எங்களுக்கு ஆதரவு தருகின்றனர். வேறு பகுதியை சேர்ந்த சிலர், எங்களை மடைமாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்கு நாங்கள் ஆளாகக்கூடாது என்பதில் கவனமாக இருந்தோம்,'' என்றார்.