அம்மா சங்கீதாவைவிட அப்பா விஜய்தான் ஆதரவு.. கேட்டதும் ஓகே சொன்னார்.. ஜேசன் சஞ்சய் ஓபன் டாக்
சென்னை: விஜய் - சங்கீதாவின் மகன் ஜேசன் சஞ்சய் இப்போது சிக்மா படத்தை இயக்கியிருக்கிறார். சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்க; தமன் இசையமைத்திருக்கிறார். கடந்த மாதம் ரிலீஸாக வேண்டிய படம், ஜனநாயகன் காரணமாக தள்ளி போயிருக்கிறது. அநேகமாக இந்த மாதத்துக்குள் படம் வந்துவிடும் என்று தெரிகிறது. இந்நிலையில் ஜேசனை சுற்றி பாசிட்டிவ்வாக விஷயங்கள் நடக்க தொடங்கியிருக்கும் நிலையில் தன் தாய், தந்தை குறித்து பேசியிருக்கிறார்.
விஜய்க்கும், சங்கீதாவுக்கும் ஏற்பட்ட பிரச்னையில் ஜேசன் சஞ்சய்யின் பெயரும் அளவுக்கதிகமாகவே உருண்டது. முதலில் வெளியான சிக்மா டீசரில் இனிஷியலுக்குகூட விஜய்யின் பெயரை அவர் பயன்படுத்தவில்லை என்ற சர்ச்சை எழுந்தது. சாந்தமாக இருந்த சஞ்சய் அடுத்த அப்டேட்டில் அதை சரி செய்துகொண்டார். அதனையடுத்து பட வேலைகளில் பிஸியான அவர் நல்லபடியாக அனைத்து பணிகளையும் முடித்து ரிலீஸுக்கு தயாரானார். ஆனால் தந்தையின் ஜனநாயகன் வந்ததால் ரிலீஸ் தள்ளிப்போனது.
உடைத்த பேட்டி: படம் இந்த மாதத்துக்குள் ரிலீஸாகிவிடும். இப்படிப்பட்ட சூழலில் தனியார் யூடியூப் சேனல்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு தந்தை எவ்வளவு சப்போர்ட்டாக இருந்தார் என்பதை விளக்கினார். இதனால் அவருக்கும், விஜய்க்கும் மனஸ்தாபம் என்ற பேச்சு உடைபட்டது. மேலும், அவர்கள் குடும்பத்துக்குள் அடித்த புயல் இப்போது ஓய தொடங்கியிருப்பதாக கருதப்பட்டது. நினைத்தபடியே, சமீபத்தில் தனது விவாகரத்து மனுவை திரும்ப பெற்றுக்கொண்டார் சங்கீதா. இரண்டு பேரும் சேர்ந்து வாழ்வதற்கான கதவுகள் இதன் மூலம் திறந்திருக்கின்றன.
சஞ்சய் பேட்டி: சரியாக தனது பட ரிலீஸ் சமயத்தில் தாயும், தந்தையும் சேர்ந்ததை நினைத்து உள்ளுக்குள் நிம்மதியும், மகிழ்ச்சியும்தான் அடைந்திருப்பார் ஜேசன். இந்நிலையில் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளிதத்தார் அவர். அந்தப் பேட்டியில் சங்கீதா குறித்து பேசுகையில், "நான் இவ்வளவு வளர்ந்தாலும், எனது அம்மா இன்றும் என்னை ஒரு குழந்தையாகவே பார்க்கிறார். நான் வேலையில் பிஸியாக இருப்பதால் முன்புபோல் அம்மாவுடன் அதிக நேரம் செலவழிக்க முடியவில்லை. அவர் தொடர்ந்து நலம் விசாரிப்பதோடு வேலையில் சோர்ந்து போகும்போதெல்லாம் என்னை உற்சாகப்படுத்துவார்.
அதை மதிக்கிறேன்: சினிமா விஷயத்தில் எனது அம்மாவின் கருத்தையும், விமர்சனத்தையும் நான் ரொம்பவே மதிக்கிறேன். இந்தப் புதிய படத்தை பார்த்து அவர் என்ன சொல்லப்போகிறார் என்பதை அறிய காத்திருக்கிறேன்" என குறிப்பிட்டார். தொடர்ந்து தன்னுடைய தந்தை விஜய் குறித்து பேசியபோது, "சிறு வயதில் இருந்தே சினிமா எனக்கு பழக்கப்பட்ட ஒன்றாகத்தான் இருந்தது. எனது அப்பா அந்தத் துறை சார்ந்தவராக இருந்ததால் எனக்கும் அதன் மீது ஆர்வம் இருந்தது.
உடனே சம்மதம் சொன்னார்: நான் அவரிடம் சென்று வெளிநாட்டில் சினிமா தொடர்பாக படிப்பது பற்றி கூறினேன். அவர் தயங்கவே இல்லை. உடனே சம்மதம் சொல்லிவிட்டார். எனது அம்மா, தங்கையைவிட அதிக ஆதரவு தந்தது அப்பாதான். சினிமாவில் பல துறைகள் இருக்கின்றன. நீ போய் படி அப்போதுதான் உனக்கு எதில் ஆர்வம் இருக்கிறது என்று தெரியும் என சொல்லி அனுப்பி வைத்தார்" என்றார். அவரது இந்தப் பேட்டி விஜய் ரசிகர்களிடம் அமோக ஆதரவை பெற்றிருக்கிறது.