அம்மா கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது.. நைட்ல காரைத் தூக்கிட்டு எஸ்கேப்.. ஜேசன் சஞ்சய் பேட்டி!
சென்னை: தமிழக முதல்வர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய், ஹீரோவாக களமிறங்குவார் என ஒட்டுமொத்த கோலிவுட்டும் எதிர்பார்த்த நிலையில், தனது தாத்தாவைப் போலவே இயக்குனராக அவதாரமெடுத்துள்ள 'சிக்மா' படத்தின் ரிலீஸுக்காகக் காத்திருக்கும் வேளையில், தனது பெற்றோர் விஜய் - சங்கீதா குறித்து பேசி உள்ளார்.
ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் படம் 'சிக்மா'. இதில் சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா மற்றும் ஜேசன் சஞ்சய் இருவரும் இணைந்து தயாரித்து இருக்கும் இப்படம் ஜூலை மாதம் 31-ந் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. ஆனால், 'ஜனநாயகன்' படம் வெளியானதால் படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது.
ஜேசன் சஞ்சய் பேட்டி: இந்நிலையில் ஜேசன் சஞ்சய் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பல விஷயங்களைப் பேசி இருந்தார். தான் ஒரு முதலமைச்சரின் மகன் என்ற கர்வம் துளியும் இல்லாமல் அப்பா குறித்தும் அம்மா குறித்து பேசியது பலரை கவர்ந்தது. அதில், சிறுவயதில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடர் சென்னையில் நடந்த போது, தந்தை விஜய்யின் தோளில் அமர்ந்துகொண்டு மேட்ச் பார்த்த சுவாரஸ்யமான நினைவுகளையும் அவர் நினைவு கூர்ந்தார்.
அம்மா பயந்துட்டாங்க: அம்மா சங்கீதா குறித்து பேசிய சஞ்சய், என் அம்மா ஒரு உளவுத்துறை அதிகாரி மாதிரி, எல்லாத்தையும் கண்டுபிடித்துவிடுவார்கள். அம்மாவை ஏமாற்றிவிட்டுத் தனியாக வெளியே செல்ல முயலும்போதெல்லாம் மாட்டிக்கொள்வேன். ஒருமுறை, வீட்டில் எல்லோரும் தூங்கிக்கொண்டிருந்தபோது, யாருக்கும் சொல்லாமல் காரை எடுத்துக்கொண்டு இரவு முழுவதும் வெளியே சென்றுவிட்டு காலையில் திரும்பினேன். என் செல்போனும் ஆஃப் செய்து வைத்துவிட்டேன். நான் காணாமல் போய்விட்டதாக நினைத்து, அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கத் தயாராக இருந்தார்கள். காலையில் நான் திரும்பியபோது, என்னை நன்றாகவே வெளுத்து வாங்கிவிட்டார்கள் என கூறினார்.
விமர்சனங்களுக்கு விழுந்த அடி: விஜய் முதலமைச்சரானதும், அவர் குறித்துச் சோஷியல் மீடியாவில் பல விமர்சனங்கள் வந்தன. அவர் தன் மனைவி, குடும்பம், குழந்தைகளைக் கவனிக்கவில்லை என்று எதிர்த்தரப்பினர் தொடர்ந்து அவதூறு பரப்பி வந்தனர். ஆனால், ஜேசன் சஞ்சயின் இந்த பேட்டி, விஜய் எவ்வளவு பாசமான தந்தை என்பதையும், அவர்களின் அழகான குடும்ப பிணைப்பையும் வெளிச்சம்போட்டுக் காட்டி, அந்த விமர்சனங்களை மொத்தமாகத் தவிடுபொடியாக்கியுள்ளது.