அம்மன் சிலையுடன் ஆடையின்றி தற்கொலை செய்த பெண் இன்ஜி.,
ஆந்திராவில், மனநலம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும், 25 வயது இளம்பெண் ஒருவர், நிர்வாணமாக கோவிலுக்குள் நுழைந்து, அம்மன் சிலையை எடுத்துக் கொண்டு, அருகே இருந்த குளத்தில் குதித்து தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திராவின் விஜயநகரம் மாவட்டத்தைச் சேர்ந்த தேஜஸ்வினி, 25, கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள ஒரு ஐ.டி., நிறுவனத்தில் மென்பொருள் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். மனநலம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் இவர், ஆறு மாதங்களுக்கு முன், வேலையை ராஜினாமா செய்தார்.
இரு மாதங்களுக்கு முன், தன் தாயுடன் பீர்பஜிகுடாவில் வாடகை வீட்டில் அவர் குடியேறினார். கடந்த 17ம் தேதி இரவு, தாயுடன் துாங்க சென்ற தேஜஸ்வினி, நள்ளிரவு 2:30 மணியளவில் எழுந்து, தாயின் அறைக்கதவை வெளி பக்கமாக பூட்டி வீட்டில் இருந்து வெளியேறினார்.
தெருக்களில் ஆடைகளின்றி நிர்வாணமாக சுற்றித்திரிந்த தேஜஸ்வினி, கையில் புடவை ஒன்றையும் வைத்திருந்தார். தொடர்ந்து, அருகே உள்ள பீரம்மா கோவிலுக்குள் நிர்வாணமாக நுழைந்த அவர், அங்கிருந்த அம்மன் சிலையை எடுத்துக் கொண்டு, அருகே இருந்த கோவில் குளத்தில் குதித்து திடீரென தற்கொலை செய்து கொண்டார்.
மறுநாள் காலை, அறை கதவு பூட்டப்பட்டிருப்பதை கண்டு தேஜஸ்வினியின் தாய் அலறினார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர் வெளியே வந்தார். தேஜஸ்வினியை தேடிய போது, அவரது உடல் கோவில் குளத்தில் மிதப்பது கண்டறியப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த மீட்புப் படையினர், தேஜஸ்வினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அதே சமயம், அவர் எடுத்துச் சென்ற அம்மன் சிலையை காணவில்லை. வழக்கின் முக்கிய ஆதாரமாக கருதப்படுவதால், குளத்தில் சிலையை தேடும் பணி நடக்கிறது.
வழக்கின் பின்னணியில் உள்ள மர்மங்கள் மற்றும் தேஜஸ்வினியின் தற்கொலைக்கான காரணத்தை அறிய, சிசிடிவி காட்சிகள், சாட்சிகளின் வாக்குமூலங்கள் மற்றும் தடய அறிவியல் ஆதாரங்களை போலீசார் ஆய்வு செய்கின்றனர். தற்கொலை வழக்காக தெரிந்தாலும், அனைத்து கோணங்களிலும் போலீசார் விசாரிக்கின்றனர்.