📅 Saturday, 03 October 2026 IST | புரட்டாசி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics June 07, 2026 04:00 AM

“அண்ணாமலை தொடங்கிய இயக்கத்துக்கு பிரதமரின் ஆசி கிடையாது”

“அண்ணாமலை தொடங்கிய இயக்கத்துக்கு பிரதமரின் ஆசி கிடையாது”

சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

சென்னை: அண்ணாமலையின் புதிய இயக்கத்துக்கு மோடியின் ஆசி கிடையாது. எனவே, பாஜக தொண்டர்கள் எதையும் நம்பி ஏமாற வேண்டாம் என மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

சென்னையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகி ‘வீ த லீடர்ஸ்’ என்ற இயக்கத்தைத் தொடங்கியுள்ளார். அதில் பாஜகவின் சில பொறுப்பாளர்களும், தொண்டர்களும் இணைந்துள்ளதாகத் தெரிகிறது. பிரதமர் மோடியின் ஆசியுடன்தான் இந்த இயக்கத்தைத் தொடங்கியதாகக் கூறி, அவர்களை அண்ணாமலை மூளைச்சலவை செய்து வருகிறார். ஆனால், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அல்லது தேசியத் தலைவர்கள் என யாருடைய ஆசியும் எந்தத் தனிப்பட்ட இயக்கத்துக்கும் கிடையாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வெளியேறியவர்கள் வென்றதில்லை: பாஜக என்பது தேசம் மற்றும் கொள்கை அடிப்படையில் இயங்கும் கட்சி. கல்யாண் சிங், உமா பாரதி போன்ற பெரிய தலைவர்களே கட்சியிலிருந்து வெளியேறி மீண்டும் தாய் கட்சிக்கே திரும்பியுள்ளனர். பாஜகவை விட்டு வெளியேறித் தனியாகச் செயல்பட்டவர்கள் யாரும் இதுவரை வெற்றி பெற்றது கிடையாது. பாஜக தொண்டர்கள் யாரும் எதையும் நம்பி ஏமாற வேண்டாம். ஒருவர் ஒரே நேரத்தில் கட்சியிலும், மற்றொரு இயக்கத்திலும் இருக்க முடியாது. அண்ணாமலையின் இயக்கத்தில் இணைந்தவர்கள் மீண்டும் பாஜகவுக்குத் திரும்ப வேண்டும். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது.

பின்னடைவு கிடையாது: அண்ணாமலை வெளியேறியதால் பாஜகவுக்கு எந்தப் பாதிப்போ, பின்னடைவோ கிடையாது. 18 மாதங்களாகக் கருத்து வேறுபாடு இருந்ததாக அவர் கூறுவது ஏற்புடையதல்ல. கடந்த காலங்களில் பிரதமர் மற்றும் அமித் ஷா பங்கேற்ற அனைத்து நிகழ்ச்சிகளிலும் அவர்களுக்கு அருகிலேயே இருந்து அண்ணாமலை பணிகளை மேற்கொண்டார். கருத்து வேறுபாடு இருந்திருந்தால் அப்போதே சொல்லியிருக்க வேண்டும். இப்போது சொல்வது சரியல்ல.

திருச்சியில் 8-ம் தேதி (நாளை) நடைபெறவுள்ள மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடியின் சாதனைகளைக் கொண்டாடுவது மற்றும் யோகா தின நிகழ்வுகள் குறித்து ஆலோசிக்கப்படும். மேலும், உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டால் அதனைச் சந்திக்க பாஜக எவ்வாறு தயாராக இருப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் இனி பாஜகவுக்கும் ஆளும் கட்சிக்கும் இடையேதான் நேரடிப் போட்டி இருக்கும். அதேபோல், உள்ளாட்சித் தேர்தலில் தற்போதுள்ள கூட்டணியே தொடரும்.

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற நீதிமன்றம் அனுமதி அளித்தும், சட்டம் பயின்ற அமைச்சர் நிர்மல்குமார் அதற்கு முரணாகப் பேசுவது வருத்தமளிக்கிறது. அவர் சட்டத்துறை அமைச்சராக இருப்பதற்குத் தகுதியானவரா என்ற கேள்வி எழுகிறது. பாஜக உலகிலேயே மிகப்பெரிய கட்சி. எந்தத் தனிநபர் விலகலாலும் கட்சி பலவீனமடையாது. தொண்டர்கள் கொள்கை உறுதியுடன் பாஜகவில் மட்டுமே அங்கம் வகிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.