📅 Thursday, 30 July 2026 IST | ஆடி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu July 29, 2026 01:30 AM

அன்பே டயானா பட தயாரிப்பு நிறுவனத்தின் சூப்பர் முயற்சி.. இனி தமிழ் சினிமாவில் புதுசு புதுசா வரும்

அன்பே டயானா பட தயாரிப்பு நிறுவனத்தின் சூப்பர் முயற்சி.. இனி தமிழ் சினிமாவில் புதுசு புதுசா வரும்

சென்னை: தமிழ் சினிமாவின் வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ். சமீபத்தில் அந்த நிறுவனம் தயாரித்த அன்பே டயானா, கடந்த வருடத்தில் தயாரித்த டூரிஸ்ட் ஃபேமிலி ஆகிய படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருக்கின்றன. இந்நிலையில் நாவல், சிறுகதைகள் போன்ற புத்தகங்கள் சினிமாவாக மாறுவதற்கான முயற்சிகளை அந்த நிறுவனம் முன்னெடுத்திருக்கிறது. அதுகுறித்து நீண்ட பதிவையும் வெளியிட்டிருக்கிறார் அவர்.

இதுகுறித்து அவர் தன் முகநூல் பக்கத்தில், "மில்லியன் டாலர் பதிப்பகம் தொடங்கிய நாளில் இருந்தே மனதில் இருந்த ஒரு சிறிய ஆசை இருந்தது. நல்ல எழுத்தாளர்கள் நம்மிடம் இருக்கிறார்கள். நல்ல கதைகளும் இருக்கின்றன. ஆனால் அந்த எழுத்தாளர்களுக்கு கிடைக்க வேண்டிய மரியாதை, அவர்கள் உழைப்புக்கான மதிப்பு, அவர்களின் கதைகளைப் பற்றிய பெரிய உரையாடல்கள் இவை இன்னும் நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு உருவாகவில்லை.

புதிய வாசகர்கள்: ஒரு புத்தகம் ஆயிரக்கணக்கான வாசகர்களை சென்றடைந்தாலும், அதிலிருந்து ஒரு எழுத்தாளரின் வாழ்க்கை மாறும் அளவுக்கு வாய்ப்புகள் கிடைப்பது அரிது. ஆனால் அதே கதை ஒரு திரைப்படமாக மாறும்போது, அந்த எழுத்தாளரின் பெயரும் தொலைதூரம் பயணிக்கிறது. அவருக்கான அங்கீகாரமும், பொருளாதார மதிப்பும், புதிய வாசகர்களும் உருவாகிறார்கள்.

புத்தகங்களாக நிற்காமல்: உலக சினிமாவில் ADAPTED SCREENPLAY என்பது தனியாக கொண்டாடப்படும் ஒரு பிரிவு. ஒரு புத்தகத்தை திரையில் உயிர்ப்பிப்பது ஒரு பெருமையாக பார்க்கப்படுகிறது. தமிழிலும் அப்படிப்பட்ட ஒரு கலாச்சாரம் உருவாக வேண்டும். புத்தகங்கள் வெறும் புத்தகங்களாக அலமாரியில் நிற்காமல், திரைப்படங்களாகவும், தொடர்களாகவும், புதிய தலைமுறையைச் சென்றடையும் படைப்புகளாகவும் மாற வேண்டும்.

பதிப்பகத்துக்கு நன்றி: அதற்கான ஒரு சிறிய முயற்சிதான் மில்லியன் டாலர் பதிப்பகம். அதனால்தான் இன்று இந்த செய்தி எங்களுக்கு மிகவும் தனிப்பட்ட மகிழ்ச்சியை தருகிறது. எழுத்தாளர் பாக்கியம் சங்கர் அவர்களின் திருப்பால் நாவல், ஒரு முக்கியமான இயக்குநரின் கைகளில் திரைப்படமாகப் பயணிக்கிறது. நேற்று அவரை சந்தித்தபோது அவர் சொன்ன ஒரு வாக்கியம் மனதில் நிற்கிறது.

A post shared by Yuvaraj Ganesan (@yuvraj_ganesan)

"தம்பி... ரொம்ப சந்தோஷம். புத்தகம் படமாகிறது என்பதற்கும் மேலாக, ஒரு எழுத்தாளராக எனக்கு மதிப்போடும், நல்ல தொகையோடும் இந்தப் பயணம் நடந்தது. அதற்கு மில்லியன் டாலர் பதிப்பகத்திற்கு நன்றி." அந்த ஒரு வாக்கியம், அதுதான் இந்தப் பதிப்பகம் தொடங்கியதற்கான பதில். ஒரு எழுத்தாளரின் கண்களில் அந்த திருப்தியைப் பார்ப்பதை விட, ஒரு பதிப்பகத்திற்கு பெரிய வெற்றி வேறு என்ன இருக்க முடியும்? இது ஒரு புத்தகம் திரைப்படமாகிறது என்ற அறிவிப்பு மட்டும் இல்லை.

ஒரு நல்ல கதை, அதன் படைப்பாளிக்கு தகுந்த மரியாதையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக நிஜமாகிக் கொண்டிருக்கிறது என்பதற்கான சாட்சி. இன்னும் நிறைய கதைகள் வர வேண்டும்! இன்னும் நிறைய எழுத்தாளர்கள் கொண்டாடப்பட வேண்டும்" என குறிப்பிட்டிருக்கிறார். கோலிவுட்டில் நாவல்களும், சிறுகதைகளும் சினிமாவாக மாறுவது சமீபகாலமாக அதிகரித்திருக்கிறது.

அதேபோல் எழுத்தாளர்களும் இயக்குநர்களாக மாற தொடங்கியிருக்கிறார்கள். சமீபத்தில்கூட எழுத்தாளர் லட்சுமி சரவணக்குமார் லிங்கம் வெப் சீரிஸை இயக்கியிருதார். இப்போது மில்லியன் டாலர் தயாரிப்பு நிறுவனம் எடுத்திருக்கும் இந்த முயற்சி பல எழுத்தாளர்களை சினிமாவுக்குள்ளும், பல எழுத்துக்களை சினிமாவாகவும் கொண்டு வருவது அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.