அணுக்கருப் பிணைப்பால் சிங்கப்பூருக்கு நல்வாய்ப்பு: டான் சீ லெங்
அணுக்கருப் பிணைப்பு சார்ந்த பொருளியல் வாய்ப்புகளைக் கைப்பற்றுவதற்கு உகந்த நிலையில் சிங்கப்பூர் இருக்கிறது என்று வர்த்தக, எரிசக்தி, தொழில்துறை (எரிசக்தி, தொழில்துறை) அமைச்சர் டான் சீ லெங் தெரிவித்துள்ளார்.
பயோபொலிசில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘பியூஷன் எக்ஸ்: ஏபெக்’ எனும் அணுக்கருப் பிணைப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசியபோது அமைச்சர் டான் இதனைத் தெரிவித்தார்.
2030ஆம் ஆண்டிற்குள் அணுக்கருப் பிணைப்பு சார்ந்த தொழில்துறையின் மதிப்பு $535 பில்லியனை எட்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
“சொந்தமாக அணுக்கருப் பிணைப்பு உலைகள் இல்லாத சிங்கப்பூர் போன்ற நாடுகளும்கூட, தங்களின் திறனாளர்கள், ஆய்வு மற்றும் உருவாக்கம், தொழில்துறைச் செயல்திறன் ஆகியவற்றின்மூலம் உலகளாவிய பிணைப்புப் பொருளியலுக்கு ஆதரவளிக்க முடியும்,” என்று திரு டான் கூறினார்.
எஸ்ஜிஇன்னொவேட் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இந்த மூன்று நாள் மாநாட்டில், உலகளாவிய அணுக்கருப் பிணைப்பு நிறுவனங்கள், ஆய்வாளர்கள், முதலீட்டாளர்கள் ஆகியோர் பங்கேற்று, அத்துறை சார்ந்த வாய்ப்புகள், சவால்கள் குறித்துக் கலந்துரையாடுகின்றனர்.
தற்போதுள்ள வணிக நோக்கிலான அணுமின் நிலையங்கள் அணுக்கருப் பிளவு முறையைப் பயன்படுத்தி, யுரேனியம் அணுக்கருவைப் பிளந்து, மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. மாறாக, அணுக்கருப் பிணைப்பு முறையானது ஹைட்ரஜன் அணுக்கருவை ஒன்றிணைப்பதன்மூலம் எரிசக்தியை உற்பத்தி செய்கிறது.
அத்துடன், அணுக்கருப் பிணைப்பு முறையானது குறைந்த அபாயமுடையது என்பதாலும் கரியமிலவாயு வெளியேற்றம் இல்லாதது என்பதாலும், அது எரிசக்தித் துறையில் சிறந்த மாற்றாகப் பார்க்கப்படுகிறது.
உலகின் அணுக்கருப் பிணைப்பு சார்ந்த பொருளியலில் சிங்கப்பூரால் அதிகப் பங்களிக்க முடியும் என்று அமைச்சர் டான் கூறினார்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
அதற்குச் சான்றாக, சிங்கப்பூர் தனது துல்லியப் பொறியியல், நவீன உற்பத்தித் துறை, பிளாஸ்மா எனப்படும் மின்ம இயற்பியல் போன்ற துறைகளில் நிபுணத்துவத்தையும் திறனாளர்களையும் வளர்த்துவருவதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், ‘ஏ ஸ்டார்’ நிறுவனமானது அமெரிக்காவின் ‘காமன்வெல்த் ஃபியூஷன் சிஸ்டம்ஸ்’, ‘ரியல்டா ஃபியூஷன்’ ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து புதிய தொழில்நுட்பங்களையும் கருவிகளையும் உருவாக்கி வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
எரிசக்தித் துறையில் எந்தவொரு வாய்ப்பையும் கைவிடக்கூடாது என்ற அடிப்படையில், அணுக்கருப் பிணைப்புத் தொழில்நுட்பத்தைச் சிங்கப்பூர் கூர்ந்து கவனித்து வருவதாகவும் திரு டான் கூறினார்.
முன்னதாக, அக்டோபர் 1ஆம் தேதிமுதல் வர்த்தக, தொழில் அமைச்சானது ‘எரிசக்தி, வர்த்தக, தொழில்துறை அமைச்சு’ (METI) எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளதையும் அவர் குறிப்பிட்டுப் பேசினார்.