அரசு போக்குவரத்துக்கழக ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: சவுமியா அன்புமணி கோரிக்கை
சென்னை: அரசு போக்குவரத்துக்கழகங்களில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று சட்டப்பேரவையில் பாமக உறுப்பினர் சவுமியா அன்புமணி கோரிக்கை விடுத்தார்.
சட்டப்பேரவையில் நேற்று போக்குவரத்துத்துறை, நிதி, திட்டம், வளர்ச்சித்துறை, பொதுத்துறை மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பாமக உறுப்பினர் சவுமியா அன்புமணி பேசியதாவது: ஊழல் ஒழிப்புக்கு அரசு எடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகளுக்கு பாராட்டுகள்.
ஊழல் ஒழிப்புத்துறையில் கூடுதல் உதவி ஆய்வாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். சேவை உரிமை பெறும் சட்டத்தை விரைவாக அமல் படுத்த வேண்டும்.
ஊழல் ஒழிப்பின் பயன்கள் பொதுமக்களை சென்றடைய வேண்டு்ம். அந்த வகையில், மின்துறையில் ஊழல் ஒழிந்தால் மின்கட்டணம் குறைய வேண்டு்ம. பள்ளிக்கல்வித்துறையில் ஊழல் ஒழிந்தால் பள்ளிக் கட்டணம் குறைய வேண்டு்ம்.
எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.5 கோடியாக உயர்த்த வேண்டும். தொகுதி மேம்பாட்டு நிதியை குடிநீர் தூய்மைப்படுத்தும் பணிக்கு (ஆர்.ஓ.) பயன்படுத்த முடியவில்லை.
எனவே, ஆர்.ஓ. பணிக்கு பயன்படுத்தும் வகையில் அதற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள 106 அகதிகள் முகாம்களில் 57 ஆயிரம் ஈழத் தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கு வீட்டுவசதி திட்டம் உட்பட தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
பாமக தலைவர் ராமதாஸ் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஈழத்தமிழர் நலன் குறித்து சட்டப்பேரவையில் பேசுமாறு சொன்னார்.
கிராமங்களில் மினி பேருந்துகளை இயக்க வேண்டு்ம். மகளிர் இலவசபேருந்து பயணத்திட்டத்தை தனியார் பேருந்துகளுக்கும் நீட்டிக்க வேண்டும்.
அரசு போக்குவரத்துக்கழகங்களில் பணிபுரியும் ஒப்பந்ததொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என அவர் பேசினார்.