அரசு துறைகளில் அடங்கியதா லஞ்சத்தின் ஆட்டம்?
கோவை: முதல்வர் விஜயின் அதிரடி அறிவிப்புகளால் ஆடிப்போயுள்ள அரசுத்துறை லஞ்சப் பேர்வழிகள், மக்களிடம் மிரட்டி பறிப்பதை தவிர்த்து, கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொள்ளும் நிலைக்கு இறங்கி வந்துள்ளனர். எனினும், 'பத்திரப்பதிவு துறை, உள்ளூர் திட்ட குழுமம், மாநகராட்சி, வருவாய்த் துறை, நில அளவைத் துறைகளில் லஞ்ச அதிகாரிகளின் ஆட்டம் இன்னும் அடங்கவில்லை' என, ஆதங்கப்படுகின்றனர் மக்கள்.
தமிழகத்தில் கடந்த 60 ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில், எல்லா துறைகளிலும் லஞ்சம் புரையோடி போய்விட்டது. ஒவ்வொரு வேலைக் கும் லஞ்சம் நிர்ணயித்து, 'பார்ட்டி பண்ட்' பெயரில் பெருந்தொகை அள்ளியது, மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியது; அதனால் தான் ஆட்சி மாற்றமும் நிகழ்ந்தது.
ஆனால், அதேவேளையில் லஞ்சம் ஒன்றும் முழுமையாக ஒழிந்துவிடவில்லை; சற்றே குறைந்திருக்கிறது. வாங்கும் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மத்தியில் ஒரு வித அச் சம் நிலவுகிறது என்பது மட்டும் உண்மை.
சில நாட்களுக்கு முன், கோவை மாவட்டத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடந்த உண்மை சம்பவம். ஒரு பெண், பத்திரம் பதிவு செய்ய வந்திருக்கிறார். பத்திர எழுத்தரிடம் சென்று பத்திரம் எழுதி விட்டு, 'நானே பதிவு செய்து கொள்கிறேன்' என்றதோடு, 'சப் - ரிஜிஸ்தருக்கு எவ்வளவு கொடுக்கணும்' என கேட்டிருக்கிறார். 'அவரிடம்... நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்' என, பத்திர எழுத்தர் நழுவிவிட்டார்.
அந்த பெண், அலுவலகத்துக்குள் சென்று பத்திரப்பதிவு நடைமுறை முடியும்போது, சப் ரிஜிஸ்தரிடம், 'உங்களுக்கு எவ்வளவு வேணும்ங்க' என கேட்டிருக்கிறார். அவரோ, '30,000 ரூபாய் கொடுங்க போதும்' என்றதும், தன் மொபைல் போனை எடுத்திருக்கிறார்.
அந்த பெண், வாட்ஸாப் மொபைல் எண்ணை தட்டச்சு செய்து, மெசேஜ் அடிக்க ஆரம்பிச்சதும் பயந்துபோன பத்திரப்பதிவு அலுவலர்கள், 'நீங்கள் பணமே தர வேண்டாம் பதிவு செய்து விட்டு கிளம்புங்கள்' என, அனுப்பி வைத்திருக்கின்றனர்.
பத்திரம் எழுதுவோரிடம் பேசியபோது, 'பதிவு துறையில் லஞ்சம் குறைந் திருக்கிறது. முன்பு ஒரு பத்திரம் பதிவு செய்ய, கறாராக 5 லட்சம் ரூபாய் வரை - சொத்து மதிப்பிற்கு ஏற்ப கேட்டனர்; எங்க - வேண்டுமானாலும் போயி சொல்லு' என்பர். இப்போது, 'நீங்களாக பார்த்து கவனிங்க' என்கின்றனர்.
நிர்ப்பந்தம் இல்லை
மேலிடத்துக்கு கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் இப்போது இல்லை. அதனால், கட்டாயப்படுத்தி யாரிடமும் கேட்பதில்லை' என்றனர்.
டாக்டர் ஒருவரிடம் பேசியபோது, 'தி.மு.க., ஆட்சியில், வாடகைக்கு விடும் வகையில் வரிசையாக நான்கு வீடுகள் கட்டினோம். பழைய மின் இணைப்பை ஓரமாக 'ஷிப்ட்' செய்ய, 10,000 ரூபாய் லஞ்சம் வாங்கினர்; தற்காலிக இணைப்பு பெற, 20,000 வாங்கினர். புதிய மின் இணைப்புக்கு, 1 லட்சம் ரூபாய் வரை கேட்டனர்; கொடுக்கவில்லை.
'த.வெ.க., ஆட்சியில் லஞ்சம் இல்லாமல் இணைப்பு தருவதாக கேள்விப்பட்டேன். நாமும் கொடுத்து பார்ப்போம் என கூறி, விண்ணப்பம் தந்தேன். மின் வாரியத்தினர் முதலில் இழுத்தடித்தனர்; 'புகார் அளிக்கப் போகிறேன்' என கூறியதும், இரண்டு நாளில் இணைப்பு தந்தனர். மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது' என்றார்.
மின் வாரிய ஊழியர்கள் கூறுகையில், 'புதிய டிரான்ஸ்பார்மர் பொருத்துவதாக இருந்தாலோ அல்லது பழசில் பழுது பார்க்க வேண்டியிருந்தாலோ, லாரி, கிரேன் ஏற்பாடு செய்வதில் தொடங்கி, பல்வேறு வகையில், ஏ.இ., தன் சொந்த பணத்தை, 10,000 ரூபாய் வரை செலவிட வேண்டியிருக்கிறது.
இங்கு தான் லஞ்சம் ஆரம்பிக்கிறது. ஒவ்வொரு வேலைக்கும் ஏற்படும் செலவின தொகையை மின் வாரியம் ஒதுக்க வேண்டும். இப்போது, செலவு தொகைமட்டும் வசூலிக்கப்படுகிறது' என்றனர்.
மாநகராட்சிகளில் சில பில் கலெக்டர்கள், நகரமைப்பு பிரிவினர் மாறாமல் இருக்கின்றனர்.
முந்தைய ஆட்சியில் சொத்து வரி நிர்ணயிக்க சதுரடிக்கு, 20 ரூபாய் வீதம் லஞ்சம் வாங்கப்பட்டது; இப்போது, 10 ரூபாயே கேட்கின்றனர். கட்சி நிதி இல்லை; 10 ரூபாயும் அலுவலகத்தில் வைத்து வாங்குவதில்லை.
இதற்கு முன், லஞ்சம் வசூலிக்க ஆள் நியமித்திருந்தனர். இப்போது, வெளியே உள்ள கடைகளில் ஒருத்தரை குறிப்பிட்டு கொடுக்கச் சொல்கின்றனர். தள்ளுவண்டி கடைக்காரர்களிடம் போலீசார் இதற்கு முன் மாமூல் வாங்கினர். இப்போது, தின வசூல் இல்லை. பயமில்லாத போலீஸ்காரர்கள் சிலர், துணிச்சலாக வசூலிக்கின்றனர்; மற்றவர்கள் நிறுத்தி விட்டனர்.
பாஸ்போர்ட் சரிபார்ப்பு, வாகனங்கள் சரிபார்ப்பு, கடை வசூல் என கட்டாயப்படுத்தி, எந்த இடத்திலும் பணம் கேட்பதில்லை. 'டாஸ்மாக் பார்' வருமானமும் நின்று விட்டது.
மாமூல் நிறுத்தம்
இல்லாவிட்டால், ஒரு விண்ணப்பத்தை 'அப்ரூவல் செய்வதற்கான அவகாசம், 14 நாட்கள் என்றால், அதுவரை இழுக்கின்றனர். வருவாய்த் துறை, நில அளவைத் துறை உள்ளிட்ட சில துறைகளில் லஞ்சம் வாங்குவது நிறுத்தப்படவில்லை; துணிச்சலாக வசூலிக்கின்றனர்.
இரு திராவிட கட்சிகளின் ஆட்சி காலத்தில், அனைத்து துறைகளிலும் புரையோடியிருந்த லஞ்சம் கட்டுக்குள் வந்திருக்கிறது. வெளிப்படையாக கேட்க யோசிக்கின்றனர்; பயப்படுகின்றனர்.
லஞ்ச ஒழிப்பு துறை அடிக்கடி ரெய்டு நடத்தினால், லஞ்சம் கட்டுக்குள் வரும். அதனால், லஞ்ச ஒழிப்பு துறையை வலுப்படுத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது.
ரியல் எஸ்டேட் தொழிலைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், 'உள்ளூர் திட்ட குழுமத்தில் சின்ன மதிப்பீடுகளுக்கு பணம் கேட்பதில்லை; முடிந்த வரை கிடப்பில் போடுகின்றனர். கேள்வி கேட்டால், 'அப்ரூவல்' கொடுக்கின்றனர். அச்சமயத்தில், 'அப்புறம் வருகிறோம்; பார்த்துக்கலாம்' என சொல்லி அனுப்புகின்றனர்.
இப்போது, நேரடியாக வாங்க பயப்படுகின்ற னர். வணிக ரீதியான பெரிய மதிப்பீடு கட்டடங் கள், லே-அவுட்டுகளுக்கு வாங்குவதை நிறுத் தவில்லை. 'முதலில் பயப்படாமல் வாங்கினர்; இப்போது, பயந்து பயந்து வாங்குகின்றனர். ஒரு வாரத்துக்கு முன், பெரிய புராஜெக்டுக்கு அப்ரூவல் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதிகாரி பெயரை சொல்லி, பிரபலமான நகை கடை ஒன்றில், 600 கிராமுக்கான தொகையை கொடுக்கச் சொல்லி இருக்கின்றனர். மேலிடத்தில் இருந்து வேறு யாரும் லஞ்சம் கேட்பதில்லை என்பதால், இத்தொகை குறைவு' என்கின்றனர்.