📅 Wednesday, 18 November 2026 IST | கார்த்திகை 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 23, 2026 04:34 PM

அதிகாரமா... நெருக்கடியா..?

அதிகாரமா... நெருக்கடியா..?

அதிகாரமா... நெருக்கடியா..? - மீண்டும் தாமரையை நெருங்கும் சூரியன்!

பா.ஜ.க-வை மத்தியிலிருந்து அகற்ற வேண்டுமென காங்கிரஸின் கரத்தை 15 ஆண்டுகளுக்கும் மேலாகவே வலுப்படுத்தியும் வந்தோம்.

‘மதவாதக் கட்சி, மக்கள் விரோத ஆட்சி’ என்றெல்லாம் சகட்டுமேனிக்கு மத்திய பா.ஜ.க-வை வசைபாடி வந்த தி.மு.க., தற்போது அந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்க ஆயத்தமாகிவிட்டதாக அதிர்ச்சி கொடுக்கிறார்கள், அறிவாலயப் புள்ளிகள்.

“2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஆட்சிக்கு மட்டுமல்ல... மதச்சார்பற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும் முடிவுரை எழுதிவிட்டதால், செய்வதறியாது திகைத்து நிற்கிறது தி.மு.க. ஆட்சி அதிகாரத்தையும், கூட்டணிக் கட்சிகளையும் இழந்து நிற்கும் தி.மு.க., அதிலிருந்து மீள முடியாமல் உட்கட்சி விவகாரங்களிலும், எதிர்க்கட்சி அரசியலிலும் பெரும் நெருக்கடியைச் சந்தித்துவருகிறது.

ஆகையால், கட்சியை மீட்டெடுக்கவும், சூழ்ந்திருக்கும் நெருக்கடிகளைச் சமாளிக்கவும், ‘அதிகாரம் தேவை’ என்ற கமலாலய ஆஃபர்களை பரிசீலிக்க முடிவெடுத்திருக்கிறது. அதனால்தான் நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறையைத் தீர்க்கமாக எதிர்த்த தி.மு.க., தற்போது தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தாமல் சஸ்பென்ஸாக வைத்திருப்பது பா.ஜ.க அமைச்சரவையிலும், கூட்டணியிலும் தி.மு.க பங்கேற்கப்போவதற்கான சிக்னல்” என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

காங்கிரஸைக் கூட்டணியில் வைத்திருந்ததற்காக அமலாக்கத்துறையின் அளவில்லா அடக்கு முறைக்கு ஆளானோம். மாநிலத்தில் ஆளும் தரப்பாக இருந்தும், மத்தியிலிருந்து நிதி பெற முடியாமல் திணறினோம். காங்கிரஸுக்கு நேர்மையான தோழமையாக இருந்தோம். அப்படிப்பட்ட தி.மு.க-வை அமைச்சர் பதவிக்காக உதறிவிட்டுச் சென்றுவிட்டன தோழமைக் கட்சிகள். அப்படியென்றால், நாங்கள் மட்டும் காங்கிரஸுக்கும், காங்கிரஸை முன்னிறுத்தும் `இந்தியா’ கூட்டணிக்கும் ஏன் வலுசேர்க்க வேண்டும்... எங்களைத் தாழ்த்திக்கொண்டு `இந்தியா’ கூட்டணிக்குப் பாடுபட வேண்டுமா?

2 எம்.எல்.ஏ-க்களை வைத்துக்கொண்டு வி.சி.க-வும் ஐ.யூ.எம்.எல்-லும் அமைச்சரவையில் பங்கேற்கும்போது 22 எம்.பி-க்களை வைத்துக்கொண்டு, நாங்கள் ஏன் சும்மா இருக்க வேண்டும்... எனவே, த.வெ.க ஆட்சிக்கு நிகரான அதிகாரத்துடன் வலம்வர மத்திய அமைச்சரவையில் பங்கெடுக்க வேண்டும் என்ற கருத்தும் கட்சிக்குள் உருவாகியிருக்கிறது. வரலாற்று எதிரியான அ.தி.மு.க-வுடனேயே கைகோக்கத் தயாரான தி.மு.க-வுக்கு, பா.ஜ.க-வுடன் அணி சேருவது பெரிய விஷயமல்ல.

மாறும் அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுப்பதுதான் புத்திசாலித்தனம் என்பதை அண்ணாவும் கலைஞருமே எங்களுக்கு வழிகாட்டியிருக்கிறார்கள். 2001 - 2004 காலகட்டத்தில் தி.மு.க ஆட்சியில் இல்லாவிட்டாலும், மத்திய அமைச்சரவையில் தி.மு.க நீடித்ததால் கட்சி வலுவாக இருந்ததையெல்லாம் கூர்ந்து நோக்குகிறோம்” என்றனர்.

நம்மிடம் பேசிய கமலாலய சீனியர்கள் சிலர், “ `இந்தியா’ கூட்டணியிலிருந்து தி.மு.க வெளியேறியதை, கொண்டாட்ட மனநிலையுடன் அணுகுகிறது டெல்லி. கடந்த மே மாத இறுதியில் கூர்க்-குக்குச் சென்ற ஸ்டாலின் குடும்பத்தினருடன் நேரடிப் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. அதன்படி, மத்திய அமைச்சரவையில் பங்கேற்க தி.மு.க-வுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது. தொகுதி மறுசீரமைப்பு மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை ஆதரிக்கச் சொல்லியும் கேட்டிருக்கிறோம்.

இது போக, விஜய்க்குக் குடைச்சல் ஏற்படுத்தும் விதமாக கரூர் சி.பி.ஐ விவகாரம், குதிரைப் பேர விவகாரத்தில் நடவடிக்கை, வாய்ப்பிருந்தால் ஆட்சிக்கே சிக்கல் ஏற்படுத்துவது என தி.மு.க-வின் அஜண்டாக்களுக்கு உதவிடவும் வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. நிதி, கல்வி, ரயில்வே போன்ற முக்கிய இலாகாக்களை தி.மு.க பெற்றுக் கொண்டால், தமிழ்நாட்டில் இணை அரசாங்கத்தை நடத்தலாம் எனச் சொல்லப் பட்டிருக்கிறது. இது ஒரு கூட்டணி என்பதைவிட தி.மு.க-வுக்கு ஒருவிதப் பாதுகாப்பு என்கிற அடிப்படையில் ஆஃபர் கொடுத்திருக்கிறோம்” என்றனர்.

நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர்கள், “பா.ஜ.க-வுக்கு எதிரான மதச்சார்பற்ற கூட்டணியை எந்தவொரு மாநிலமும் கட்டத் தவறிய நிலையில், அதைச் சாத்தியப்படுத்தி மூன்று பொதுத்தேர்தல்களில் வெற்றியும் பெற்றுக்கொடுத்தார் ஸ்டாலின். ஆனால், தற்போது திடீரென பா.ஜ.க-வுக்கு ஆதரவு நிலைப்பாடு எடுத்தால், அதை சொந்தக் கட்சியினரே ஏற்றுக்கொள்வார்களா என்ற கேள்வி எழும். அவ்வாறு நடந்தால் ஒட்டுமொத்த சிறுபான்மையினரின் வாக்குகளும் த.வெ.க-வுக்குச் சென்றுவிடும். தேசிய அரசியலில் காங்கிரஸை வீழ்த்த உதவும் இந்த முடிவு, மாநில அரசியலில் தி.மு.க-வுக்குப் பெரும் பின்னடைவைத் தரக்கூடிய அபாயமும் இருக்கிறது.

மத்திய அமைச்சரவையில் தி.மு.க பங்கெடுத்தால், ‘பா.ஜ.க-வுடன் கைகோத்து தி.மு.க-வும் மாநில உரிமைகளைச் சிதைக்கிறது... நிதி தர மறுக்கிறது...’ என எளிதாகப் பழிசுமத்திவிடுவார் முதல்வர் விஜய். மேலும் பா.ஜ.க-வுக்கு எதிராக ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ என்ற ஜென் ஸி புரட்சி தொடங்கியிருக்கும் சூழலில், பா.ஜ.க-வுடன் கைகோப்பது நல்ல முடிவாக இருக்காது. ஆட்சி அதிகாரம் இல்லாத பதற்றத்தில் எதிர்காலம் குறித்து யோசிக்காமல் வரலாற்றுப் பிழையை தி.மு.க செய்துவிடக் கூடாது என அஞ்சுகிறார்கள் உடன்பிறப்புகள் சிலர். `அதிகாரம் இல்லாத சூழலில், அதைத் தேடிப்போவதில் தவறில்லை’ என்ற வாதம் கட்சிக்கு நல்லதல்ல” என்றனர்.அரசியலில் எதுவும் நடக்கலாம்... பார்ப்போம் என்ன நடக்கிறதென்று!