அதிமுகவை காலி செய்ததே எடப்பாடி பழனிசாமி தான்; அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்
அதிமுகவை காலி செய்ததே எடப்பாடி பழனிசாமி தான்; அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்
எடப்பாடி பழனிசாமியுடன் சேர்வதற்குப் பதிலாக தூக்கில் தொங்குவேன் என்று கூறிய டிடிவி தினகரன் அரசியலைவிட்டே ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் நிர்மல் குமார் விமர்சித்துள்ளார்.
Published : June 2, 2026 at 7:33 PM IST
சென்னை: அதிமுகவை காலி செய்ததே அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டம் மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,பயிர்க் கடன் தள்ளுபடி விவகாரத்தில் திமுகவின் தூண்டுதலின் பேரில் ஒரு சில இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருவதாகவும், பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பால் எவ்வளவு பேர் பயனடைகிறார்கள் என்பதை பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
விவசாயிகள் நலனுக்காக முதலமைச்சர் விஜய் தினந்தோறும் போராடி வருவதாக கூறிய அவர், பயிர்க் கடன் தள்ளுபடி தொடர்பான அரசாணை விரைவில் வெளியிடப்படும் எனக் கூறினார்.
அரசு மருத்துவமனைகளில் காலிப் பணியிடங்கள் மற்றும் உபகரணக் குறைபாடுகள் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் கணக்கிடப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க நேரம் கேட்கப்பட்டதாகவும், அரசியல் சூழலை கருத்தில் கொண்டு சிலரை சந்திப்பது சரியாக இருக்காது என்று அவர் கூறியதாகவும் அமைச்சர் விளக்கம் அளித்தார்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்கள் சந்திப்பு நடைபெறும் என்றும், முதலமைச்சர் விஜய் அடிக்கடி மக்களை சந்திப்பார் என்றும் கூறிய அமைச்சர் நிர்மல் குமார், முதலமைச்சர் எங்கும் அவமரியாதையாக பேசமாட்டார் என்றும் தெரிவித்தார்.
சட்டம்-ஒழுங்கு குறித்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார், குற்றச் சம்பவங்கள் நடைபெற்றவுடன் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன என்றும், பாலியல் குற்றச் சம்பவங்களில் கடந்த ஆட்சிக் காலத்தில் நடவடிக்கைகள் தாமதப்படுத்தப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார். தற்போது காவல்துறை துரிதமாக செயல்படுவதாகக் கூறி பொதுமக்கள் அரசுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
சட்டத்திற்கு புறம்பான மதுபான பார்கள் தொடர்பாக புகார் வந்தவுடன் உடனடியாக மூடப்படுகின்றன என்றும், சட்டத்திற்கு புறம்பான அனைத்து செயல்பாடுகளும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். சட்ட விரோத குவாரிகள் எங்காவது செயல்படுகின்றனவா என்பதை சுட்டிக்காட்ட முடியுமா என்றும் அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி எழுப்பினார்.
மின்சாரத் துறை குறித்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார், தற்போது மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் என்றும், மின்வெட்டு பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். மின்னகம் அமைப்பில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதிமுக தொடர்பாக பேசிய அவர், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலில் தனது கட்சிக்குள் நிலவும் சூழ்நிலையை கவனிக்க வேண்டும் என்றும், அதிமுகவை காலி செய்ததே எடப்பாடி பழனிசாமி தான் என்றும் குற்றம்சாட்டினார்.
எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலினுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்ததாகவும், தன்னையும் தனது குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்ள ஸ்டாலினுடன் எடப்பாடி பழனிசாமி கை கோர்த்ததாகவும் விமர்சித்தார்.
அதிமுக நிர்வாகிகள் திமுகவுக்கு செல்ல விருப்பமில்லாமல் தமிழக வெற்றிக் கழகத்தை நோக்கி வருவதாகவும், திமுகவுக்கு எதிராக நிற்கக்கூடிய கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமியுடன் சேர்வதற்குப் பதிலாக தூக்கு மாட்டி தொங்கிடுவேன் என்று கூறிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், இன்று அவருடன் நிற்கிறார். டிடிவி.தினகரன் அரசியலை விட்டே ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் நிர்மல் குமார் விமர்சித்தார். மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட மாட்டாது என்றும் என்றும் அமைச்சர் நிர்மல் குமார் திட்டவட்டமாக தெரிவித்தார்.
அமமுக பதிலடி: அமைச்சர் நிர்மல்குமாரின் இந்த விமர்சனத்துக்கு அமமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு பதிலடி கொடுத்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், ' 2017ல் பாஜகவில் இருந்து கொண்டே, அதிமுக துணைப் பொதுச் செயலாளராக இருந்த அண்ணன் டிடிவியின் குட்புக்கில் இடம்பிடிக்க வேண்டும், பார்வையில் பட வேண்டுமென அவர் வீட்டை சுற்றி வந்ததெல்லாம் நிர்மல்குமாருக்கு மறந்து போயிருக்கலாம், அதை நினைவு படுத்த வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. ஆர்.கே நகர் சட்டமன்ற தேர்தலிலும், டிடிவியின் பார்வை படாதா என பம்மியது எல்லாம் மறந்துவிட்டதா மிஸ்டர் நிர்மல்?
சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு கூட, அமமுகவை தவெக கூட்டணியில் சேர்க்க வேண்டும் என வரிசைக்கட்டி தூது வந்தவகளின் பட்டியலை வெளியிடட்டுமா? அப்போதெல்லாம் அண்ணன் டிடிவி அரசியலில் இயங்கியது இனித்தது, இன்று இந்த அரசின் கையாலாகாதனத்தை சுட்டிக் காட்டியதும் கோபம் வருகிறதா?
அதிர்ஷ்ட காற்றில் கோபுர உச்சியில் ஒட்டிக்கொண்ட சருகுகளுக்கு எல்லாம் இவ்வளவு தலைக்கணம் தேவையில்லை, காற்றின் வேகம் குறைந்தால் சருகுகள் காணாமல் போகும்' என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.