அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரிக்கக் கூடாது!
தமிழகத்தில் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை தொடர்ந்து அதிகரித்துவருவது மக்களைப் பெரும் சிரமத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது. உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சினை இது.
கடந்த சில மாதங்களாகவே இந்தியாவில் - குறிப்பாகத் தென்னிந்திய மாநிலங்களில் அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்டவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த ஒருமாத காலத்தில் அரிசி 40%, சர்க்கரை 50%, எண்ணெய் 60% விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. வெங்காயம், இஞ்சி, பூண்டு உள்ளிட்ட காய்கறிகள், மளிகைப் பொருள்கள், பால், பழங்களின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது.
கடந்த வாரம் தமிழக சட்டமன்றத்தில் அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு தொடர்பாகக் கவன ஈர்ப்புத் தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தன.
நியாயவிலைக் கடைகளில் சர்க்கரை, பருப்பு உள்ளிட்டவற்றை அதிக அளவில் வழங்குவது, ஏற்கெனவே வழங்கப்பட்டுவரும் மளிகைப் பொருள்கள் தொகுப்பைச் சந்தைவிலையைவிடக் குறைத்து வழங்குவது, குறிப்பிட்ட பொருள்களின் விலை குறைவாக உள்ள மாநிலங்களில் இருந்து அவற்றைக் கொள்முதல் செய்வது உள்ளிட்டவை அந்த விவாதத்தின்போது வலியுறுத்தப்பட்டன.
ஈரான் போர், எரிபொருள் விலை உயர்வு ஆகியவற்றின் காரணமாக, விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளதாகவும், 41 அத்தியாவசியப் பொருள்களின் விலை அன்றாடம் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தமிழக அரசு பதிலளித்தது.
மத்திய அரசின் ஏற்றுமதிக் கொள்கை, விவசாயிகளுக்கான கொள்முதல் விலை, எத்தனால் உற்பத்திக்கான கரும்புப் பயன்பாடு உள்ளிட்ட காரணங்களால் சர்க்கரை விலை உயர்ந்திருப்பதாகத் தகவல்கள் பரவின.
ஆனால், இது தவறான தகவல் என மத்திய அரசு மறுப்புத் தெரிவித்துள்ளது; வரும் அக்டோபர் மாதம் வரையிலான சர்க்கரை கையிருப்பு உள்ளதாகவும் சர்க்கரை விலையைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக 10 லட்சம் டன் கச்சா சர்க்கரையை இறக்குமதி செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளது.
அதேபோல, வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த, நாசிக்கில் இருந்து டெல்லி, சென்னை, கொச்சி, குவாஹாத்தி உள்ளிட்ட பெருநகரங்களுக்குக் குறைந்த விலையில் வெங்காயம் கிடைக்கச் செய்யும் வகையில் ‘கண்டா எக்ஸ்பிரஸ்’ (kanda express) சேவையையும் மத்திய அரசு தொடங்கியுள்ளது.
விற்பனையைக் கண்காணிப்பது, உடனடி இறக்குமதி போன்றவற்றின் மூலமாக அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வைக் கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு முயன்றுவருகிறது.
அதேநேரத்தில், நிலையற்ற ஏற்றுமதிக் கொள்கை மட்டுமல்லாமல் அண்டை நாடுகளுடனான வெளியுறவுக் கொள்கையிலும் மாற்றம் நிகழும்பட்சத்தில் இந்தப் பிரச்சினையை விரைவாகத் தீர்க்க முடியும் என்று தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் பிரிவு) உள்ளிட்ட கட்சிகள் குரல்கொடுத்து வருகின்றன.
இதற்கிடையே, வரும் செப்டம்பர் காலாண்டில் சில அத்தியாவசிய பொருள்களின் (FMCG) விலையை 2 – 5% அதிகரிக்க, சம்பந்தப்பட்ட உற்பத்தி நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன.
கடந்த ஜூன் உடன் முடிந்த காலாண்டில் விலை உயர்வு ஏற்கெனவே நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், இதனால் மக்களுக்கு நெருக்கடி அதிகமாகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
விலை உயர்வுக்குப் பதிலாக, பொருள்களின் அளவைக் குறைக்கவும் (shrinkflation) சில நிறுவனங்கள் முடிவுசெய்துள்ளன. குறுகிய காலத்தில் அத்தியாவசியப் பொருள்களின் விலை சில மடங்காக உயர்வது, நிச்சயம் சாதாரண மக்களை வெகுவாகப் பாதிக்கும். சமூக ஏற்றத்தாழ்வை மேலும் அதிகரிக்கும்.
ஆதலால், இந்தப் பிரச்சினையைப் பொருளாதாரம் சம்பந்தப்பட்டதாக மட்டுமல்லாமல் சமூக, அரசியல் பார்வையிலும் அணுகி உரிய தீர்வு காணப்பட வேண்டியது அவசியம். வரவிருக்கும் விழாக் காலங்களில் அத்தியாவசியப் பொருள்களுக்கான தேவை மேலும் அதிகரிக்கும் என்பதால் வெகுவிரைவாக விலைவாசி உயர்வு கட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு.