📅 Thursday, 13 August 2026 IST | ஆடி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 13, 2026 01:04 PM

அடுத்தது யார்? டாடா சன்ஸ் தலைவர் பதவி போட்டியில் இருப்பது இவர் தான்!

அடுத்தது யார்? டாடா சன்ஸ் தலைவர் பதவி போட்டியில் இருப்பது இவர் தான்!

நமது சிறப்பு நிருபர்

'டாடா சன்ஸ்' தலைவர் சந்திரசேகரனின் பதவிக் காலம் 2027 பிப்., 20ல் முடிவடைய உள்ள நிலையில், பதவியில் தொடர விரும்பவில்லை என அவர் அறிவித்துள்ளார். இதனால், டாடா குழுமத்தின் தலைமை பொறுப்பில் அவர் வகித்த 10 ஆண்டு காலம் முடிவுக்கு வருகிறது.

தற்போது 63 வயதான சந்திரசேகரன், டாடா குழுமத்தில் 40 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். அடுத்த தலைவரை விரைவில் தேர்வு செய்யுமாறு டாடா சன்ஸ் இயக்குநர் குழுவிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சந்திரசேகரனுக்கு பதிலாக தலைவர் பதவிக்கு யார் வருவார்? சந்திரசேகரன் 2027ம் ஆண்டு பிப்ரவரி வரை தலைவராக நீடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறார். இதனால், இந்த மாற்றத்தைத் திட்டமிட டாடா சன்ஸுக்கு கணிசமான அவகாசம் உள்ளது.

டாடா சன்ஸ் நிறுவனத்தின் விதிகளின்படி, தலைவர் ஐந்து பேர் கொண்ட குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். மூன்று உறுப்பினர்கள் சர் தோரப்ஜி டாடா அறக்கட்டளை மற்றும் சர் ரத்தன் டாடா அறக்கட்டளை ஆகியவற்றால் கூட்டாகப் பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

ஒருவர் டாடா சன்ஸ் வாரியத்தால் நியமிக்கப்படுகிறார். மேலும் ஐந்தாவது உறுப்பினர் வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சுயாதீன உறுப்பினர் ஆவார். இதற்கிடையே டாடா சன்ஸ் இயக்குநரும், டாடா டிரஸ்ட்ஸ் தலைவருமான நோயல் டாடா இடைக்காலத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கலாம். டாடா குழுமத்தின் கொள்கையின்படி, நிர்வாகம் சாராத இயக்குநர்களுக்கு ஓய்வு பெறும் வயது 70 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அவர் வரும் நவம்பரில் டாடா குழும நிறுவனங்களின் இயக்குநர் குழுவிலிருந்து ஓய்வு பெற உள்ளார். அவர் ஒரு அறக்கட்டளையின் பிரதிநிதி என்பதால் டாடா சன்ஸ் இயக்குநராகத் தொடர்வார். மேலும் அறக்கட்டளைப் பிரதிநிதிகளுக்கு ஓய்வு வயது வரம்பு இல்லை. டாடா குழுமத்தின் தற்போதைய தலைவர் சந்திரசேகரன் விலகவுள்ள நிலையில், டாடா சன்ஸ் நிறுவனத்தின் அடுத்த தலைவர் பதவிக்கான முக்கியப் போட்டியில் உள்ளவர்களில் நரேந்திரனும் ஒருவர்.

யார் இந்த நரேந்திரன்?

* டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) மற்றும் நிர்வாக இயக்குநர் நரேந்திரன், வயது 61.

* 1988ல் இக்குழுமத்தில் இணைந்த, டாடா நிறுவனத்தின் மூத்த ஊழியரான நரேந்திரன், தனது முழு தொழில் வாழ்க்கையையும் டாடா ஸ்டீல் நிறுவனத்திலேயே கழித்துள்ளார்.

* திருச்சி என்.ஐ.டி-யில் இயந்திரவியல் பொறியியலும், கொல்கத்தா ஐ.ஐ.எம்-மில் எம்பிஏ பட்டமும் பயின்றவர். 35 ஆண்டுகளுக்கும் மேலான எகுத் துறை அனுபவம் கொண்டவர்.

* 2013ம் ஆண்டு முதல் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றி வருகிறார். மேலும் இவர் இந்தியத் தொழில் கூட்டமைப்பின் முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார்.

* தற்போது சந்திரசேகரன் பதவி விலகல் முடிவை அடுத்து, டாடா சன்ஸ் தலைவர் பதவிக்கு நரேந்திரன் நியமிக்கப்படலாம் என பேசப்படுகிறது.