Box Office: ஸ்பைடர்மேன், டிசிக்கு நடுவே 41.2% கல்லா கட்டிய ஜன நாயகன்.. கருப்பு உலக வசூலை முந்தியதா?
சென்னை: கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இந்தியளவிலும் தமிழ்நாட்டிலும் ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ டே மற்றும் டிசி படங்களுக்கு நடுவே விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் மீண்டும் ரசிகர்களை தியேட்டர்களுக்கு வரவழைத்து 3 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்துள்ளது.
கேவிஎன் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் கடந்த மாதம் ஜூலை 23ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
ஹெச்டி தரத்தில் படம் லீக்கான பிறகும் ஓடிடியில் ரிலீஸ் செய்யாமல் தியேட்டர்களிலேயே சென்சார் சான்றிதழ் பெற்று வெளியிடும் முடிவில் உறுதியாக இருந்த விஜய் ஜன நாயகன் படத்தை தியேட்டரில் வெளியிட்டு 300 கோடி கிளப்பில் மீண்டும் இணைந்தார்.
41.2 சதவீதம் அதிகரித்த வசூல்: ஜன நாயகன் திரைப்படம் ஜூலை 23ம் தேதி வெளியான நிலையில், ஜூலை 31ம் தேதி எந்தவொரு படங்களும் தமிழில் வெளியாகவில்லை. ஆனால், ஜூலை 30ம் தேதி வெளியான ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ டே திரைப்படம் ஜன நாயகன் வசூலுக்கு மிகப்பெரிய வேட்டு வைத்தது. 2வது வாரத்திலேயே படத்தின் வசூல் ஸ்லோடவுன் ஆக அதுதான் பெரிய காரணம். வார நாட்களில் ஜன நாயகன் வசூல் டல் அடிக்கத் தொடங்கிய நிலையில், நேற்று 3வது வாரம் திடீரென 41.2 சதவீதம் வசூல் அதிகரித்து 3.60 கோடி வசூலை 18வது நாளில் ஜன நாயகன் ஈட்டியது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
தாண்டவமாடும் டிசி: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் நடித்த டிசி திரைப்படமும் கடந்த வாரம் வெளியான நிலையில், அந்த படமும் வசூலில் தாண்டவமாடுகிறது. 3 நாட்களில் அதிகபட்சம் 20 கோடி வரை அந்த படம் வசூல் ஈட்டியது என்கின்றனர். டிசி மற்றும் ஜன நாயகன் படங்கள் ஏ சான்றிதழ் படங்களாக இருந்தாலும், இந்த வாரமும் தியேட்டர்களை அதிகப்படியான வயதுக்கு வந்தவர்கள் சென்று அரங்குகளை நிரப்பினர்.
கருப்பு வசூலை முந்தியதா ஜன நாயகன்?: கருப்பு படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் என படக்குழு 340 கோடி ரூபாய் போஸ்டரை கடைசியாக வெளியிட்டது. ஆனால், சாக்னிக் உள்ளிட்ட பாக்ஸ் ஆபீஸ் டிராக்கர்கள் கருப்பு படம் உலகளவில் 312 கோடி வரை தான் வசூல் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த கணக்கை வைத்து பார்த்தால் ஜன நாயகன் திரைப்படம் உலகளவில் நேற்றைய வசூலுடன் 317 கோடி ரூபாயை அள்ளி கடந்து விட்டது என்று விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதிகாரப்பூர்வ வசூல் அறிவிப்பை ஜன நாயகன் படக்குழு வெளியிடாத நிலையில் கருப்பு படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் கணக்கான 340 கோடியை ஜன நாயகன் இன்னமும் கடக்கவில்லை என்றே தெரிகிறது. 400 முதல் 500 கோடி பட்ஜெட்டில் வெளியான ஜன நாயகன் திரைப்படம் லீக் ஆன நிலையில், 317 கோடி மட்டுமே ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.