சாலமன் பாப்பையா (1936
90 ஆண்டுகள் வாழ்ந்த சாலமன் பாப்பையா, தனது வாழ்நாள் முழுவதையும் தமிழ் மொழி, தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ்ச் சமூகச் சிந்தனைகளுக்காக முழுமையாக அர்ப்பணித்தவர். நல்லறிஞர், தமிழ் மூதறிஞர், பத்மஸ்ரீ, கலைமாமணி உள்ளிட்ட விருதுகளைப் பெற்ற சாலமன் பாப்பையா, மகாகவி பாரதியார் மீது மிகுந்த பற்றுடையவர். அவரது மறைவு, பாரதி நினைவு நாளான செப்டம்பர் 11ஆம் தேதி நிகழ்ந்திருப்பது நம்மைத் துயரில் ஆழ்த்துகிறது.
அவரது புகழையும் பெருமையையும் நாம் நினைவுகூரும் வேளையில், அவரோடு எனக்கிருந்த தொடர்பையும் குறிப்பிட வேண்டியிருக்கிறது. நான் சிறுவனாக இருந்தபோது எனது தந்தையாருடன் சென்று தரையில் அமர்ந்து அவரது பேச்சைக் கேட்டிருக்கிறேன். அதன் பிறகு, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பயின்றபோது, அனைத்துக் கல்லூரிகளுக்குமான பேச்சுப்போட்டியில் இரண்டாமிடம் பெற்று அவரது கரங்களால் பரிசு பெற்றேன்.
பிற்காலத்தில் பட்டிமன்றங்களில் அவரது அணியிலேயே பேசும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. அவரோடு பட்டிமன்ற மேடைகளில் பேசிய பெருமை மட்டுமல்லாது, 2003ஆம் ஆண்டு வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA - பெட்னா) அவரை அமெரிக்காவுக்கு அழைத்தபோது, அவருடன் நானும் சென்றிருந்தேன். அவரோடு நான்கு வாரங்கள் இணைந்து பயணிக்கிற அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
அப்போதெல்லாம் நாங்கள் இருவரும் மேடைகளில் மாறி மாறிப் பேசி, பெருவாரியான மக்களின் அமோக வரவேற்பைப் பெற்றோம். அங்கு இரவு நேரப் பயணங்களின் போதும், ஓய்வெடுக்கும் விடுதி அறைகளிலும் பாரதியாரின் பாடல்களை அற்புதமாகப் பாடுவார். பாடல்களைப் பாடும் தனித்திறமையும் அவரிடம் இயல்பாகவே இருந்தது.