சாங்கி விமான நிலையக் கடையில் கைச்சங்கிலித் திருட்டு: பெண் கைது
சாங்கி விமான நிலையத்தின் மூன்றாம் முனையத்தில் இயங்கும் ஸ்வரோவ்ஸ்கி கடையில் கைச்சங்கிலியைத் திருடியதாகச் சந்தேகிக்கப்படும் 38 வயதுப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாண்டு செப்டம்பர் 26ஆம் தேதி அதிகாலை 1.15 மணியளவில் திருட்டு நடந்ததாகத் தங்களுக்குத் தகவல் கிடைத்தது என்று காவல்துறை திங்கட்கிழமை (அக்டோபர் 12) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
காட்சி அடுக்கில் வைக்கப்பட்டிருந்த $255.95 மதிப்புள்ள கைச்சங்கிலி காணாமல் போயிருந்ததை அக்கடையின் விற்பனை உதவியாளர் கண்டுபிடித்ததாக அது கூறியது.
அந்தப் பெண் கைச்சங்கிலியை எடுத்துக்கொண்டு பணம் செலுத்தாமல் கடையில் இருந்து வெளியேறுவது கண்காணிப்புப் படக்கருவிப் பதிவுகளில் தெரியவந்ததாகக் காவல்துறை மேலும் தெரிவித்தது.
கண்காணிப்புப் படக்கருவிகளின் துணையுடனும் விசாரணைகளின் மூலமும் விமான நிலையக் காவல் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் பெண்ணை அடையாளம் கண்டனர்.
சீன நாட்டவரான அப்பெண், சிங்கப்பூரில் இருந்து புறப்படுவதற்கு முன்பாகக் கைது செய்யப்பட்டார் என்றும் அவரிடமிருந்து கைச்சங்கிலி மீட்கப்பட்டது என்றும் காவல்துறை தெரிவித்தது.
அவர்மீது செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படக்கூடும்.
ஆகஸ்ட் 24ஆம் தேதி காவல்துறை வெளியிட்ட ஆண்டின் முற்பாதிக்கான குற்றப் புள்ளிவிவரங்களின்படி, கடை அல்லது கட்டடங்களில் திருடுதல் கவனிக்கப்பட வேண்டிய முதன்மைக் குற்றங்களில் அடங்கும்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
கட்டடங்களில் திருடிய சம்பவங்களின் எண்ணிக்கை, சென்ற ஆண்டின் முற்பாதியில் 726ஆக இருந்தது. அது இவ்வாண்டின் முற்பாதியில் 730க்குக் கூடியது.