சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு செக்: பத்திரப்பதிவுத் துறை அதிரடி உத்தரவு
சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு செக்: பத்திரப்பதிவுத் துறை அதிரடி உத்தரவு
பழனியில் சார் பதிவாளராக ஜஸ்டின் மணிகண்டன் பணிபுரிந்த நாளில்தான், இந்த பத்திரப்பதிவு செய்யப்பட்டதால் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Published : July 31, 2026 at 10:06 PM IST
திண்டுக்கல்: பழனி கோயில் நில மோசடி விவகாரத்தில் சிக்கிய சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், தனது பணிக்காலத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்வதற்காக சிறப்பு தணிக்கைக் குழுவை அமைத்து பத்திரப்பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயில் கட்டுப்பாட்டில் இருந்ததாக கூறப்படும் ரூ.120 கோடி மதிப்பிலான நிலத்தை ரூ.2 கோடிக்கு பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில், சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பழனி பதிவு மாவட்ட சார்பதிவாளராக ஜஸ்டின் மணிகண்டன் பொறுப்பேற்ற நாள் முதல் பணி நீக்கம் செய்யப்பட்ட காலம் வரையில், பதிவு செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்ய பத்திரப்பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக 6 பேர் கொண்ட சிறப்பு தணிக்கை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி துணை பதிவுத்துறை தலைவர் சுவாமிநாதன், சிவகங்கை உதவி பதிவுத்துறை தலைவர் சீனிவாசன், சேலம் மேற்கு சார் பதிவாளர் கீதா, விருதுநகர் சார்பதிவாளர் காஜா முஹைதீன், விருதுநகர் சார்பதிவாளர் அலுவலக உதவியாளர் மோகன்ராஜ், அலுவலக உதவியாளர் முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் இந்த சிறப்பு தணிக்கை குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
மேலும், பதிவுச் சட்டம் பிரிவு 22Aக்கு முரணாக ஜஸ்டின் மணிகண்டன் பதிவு செய்த ஆவணங்கள், மற்றும் அவரால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து சிறப்பு தணிக்கை செய்து அறிக்கையினை மூன்று நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறும் பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.