📅 Saturday, 03 October 2026 IST | புரட்டாசி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports July 20, 2026 07:33 AM

சச்சின் கூட செய்யாத உலக சாதனை.. ரோஹித் சர்மா 3 பிரம்மாண்டமான ரெக்கார்டுகளை உடைத்து பதிலடி

சச்சின் கூட செய்யாத உலக சாதனை.. ரோஹித் சர்மா 3 பிரம்மாண்டமான ரெக்கார்டுகளை உடைத்து பதிலடி

சச்சின் கூட செய்யாத உலக சாதனை.. ரோஹித் சர்மா 3 பிரம்மாண்டமான ரெக்கார்டுகளை உடைத்து பதிலடி

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் மூத்த வீரர் ரோஹித் சர்மா சதம் அடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். கிரிக்கெட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க லார்ட்ஸ் மைதானத்தில் ஒருநாள் போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அது மட்டுமின்றி இங்கிலாந்து மண்ணில் மாபெரும் உலக சாதனை ஒன்றையும் நிகழ்த்தி இருக்கிறார்.

லண்டனில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான மூன்றவது ஒருநாள் போட்டியில், 388 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி இந்திய அணி களம் இறங்கியது. துவக்கத்தில் நிதானமாக விளையாடிய ரோஹித் சர்மா, பின்னர் இங்கிலாந்து பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். வெறும் 110 பந்துகளில் 17 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்களுடன் அவர் 138 ரன்கள் எடுத்து அசத்தினார்.

இதற்கு முன்பு 2004ல் சவுரவ் கங்குலி அடித்த 90 ரன்களே லார்ட்ஸ் மைதானத்தில் ஒருநாள் போட்டியில் இந்திய வீரரின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. தற்போது அந்த சாதனையை ரோஹித் முறியடித்துள்ளார். அவருக்கு துணையாக விளையாடிய சுப்மன் கில் 77 ரன்கள் எடுத்தார்.

இந்த சதத்தின் மூலம், வெளிநாடு ஒன்றில் அதிக ஒருநாள் சதங்கள் அடித்த உலகின் முதல் வீரர் என்ற புதிய உலக சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார். இங்கிலாந்து மண்ணில் மட்டும் அவர் அடிக்கும் 8வது ஒருநாள் சதம் இதுவாகும். இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் (ஐக்கிய அரபு அமீரகத்தில் 7 சதங்கள்), ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் குயின்டன் டி காக் (இந்தியாவில் தலா 7 சதங்கள்) ஆகியோரின் சாதனையை முறியடித்து ரோஹித் உலக அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இதுமட்டுமின்றி, ஒருநாள் கிரிக்கெட்டில் சதம் அடித்த மிக வயதான இந்திய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் மற்றொரு சாதனையையும் ரோஹித் முறியடித்துள்ளார். 39 வயது 80 நாட்களில் ரோஹித் இந்த சாதனையை எட்டியுள்ளார். இதற்கு முன்பு சச்சின் 2012ல் 38 வயது 327 நாட்களில் சதம் அடித்ததே சாதனையாக இருந்தது. ஓய்வு குறித்த விமர்சனங்களுக்கு மத்தியில், லார்ட்ஸ் மைதானத்தில் ரோஹித் சர்மா விளாசிய இந்த வரலாற்று சதம் அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.