சேயோன் படத்தில் முருகராக சீமானா? தமிழ் கடவுளை அசிங்கப்படுத்தாதீங்க.. படத்திற்கு எழுந்த சிக்கல்!
சென்னை: பராசக்தி ற்றிக்குப் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் சேயோன். தாய்க்கிழவி திரைப்படத்தை இயக்கி கவனத்தைப் பெற்ற இயக்குநர் சிவகுமார் முருகேசன் இத்திரைப்படத்தை இயக்கி வருகிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் 'டர்மரிக் மீடியா சார்பில் கமல்ஹாசன் மற்றும் ஆர்.மகேந்திரன் இணைந்து இத்திரைப்படத்தைப் தயாரிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கும் இப்படத்தில், பாக்ய போர்ஸ் கதாநாயகியாக நடிக்க, கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகர் ராஜ் பி ஷெட்டி வில்லனாக நடிக்கிறார்.
மதுரையைப் பின்னணியாகக் கொண்ட கிராமத்துக் கதைக் களத்தில் உருவாகி வரும் 'சேயோன்' படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு, தற்போது பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட செட்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிக்கவுள்ளதாகக் கடந்த வாரம் செய்தி வெளியானது.
சீமான்: சீமான் எந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார் என அனைவரம் எதிர்பார்த்து இருந்த நிலையில், படத்தின் மிக முக்கியமான பிளாஷ்பேக் காட்சியில் சீமான் 'முருகன்' கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. 'சேயோன்' என்ற சொல்லே சேயோனாகிய வேலவனையும் தமிழ் கடவுள் முருகனையும் குறிக்கும் பெயராக இருப்பதால், இந்த செய்தி சோஷியல் மீடியாவில் தீயாகப் பரவியது.
கொந்தளித்த முருக பக்தர்கள்: இந்தத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள முருக பக்தர்கள் மற்றும் பல்வேறு ஆன்மீக அமைப்புகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஒரு பெண் சீமான் மீது பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். மேலும், மேடைகளிலும் பேட்டிகளிலும் தொடர்ச்சியாக ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் பேசி வரும் ஒருவரை, எங்கள் தமிழ்க் கடவுள் முருகன் கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பது தமிழ் இனத்திற்கு பெரும் கேடாகும். சீமான் அந்த வேடத்தில் நடித்தால், தமிழ்நாட்டில் எந்தவொரு திரையரங்கிலும் 'சேயோன்' படத்தை திரையிடவோ அனுமதிக்க மாட்டோம் என முருக பக்தர்கள் அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
சோஷியல் மீடியாவில் வெடிக்கும் சர்ச்சை : இந்த செய்தியைப் பார்த்த இணையவாசிகளும் முருக பக்தர்களும் சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். முருகர் எங்களுக்கு மிகவும் பிடித்த கடவுள், நாங்கள் வணங்கும் முதன்மை தெய்வம். அவரை இழிவுபடுத்தும் வகையிலோ அல்லது அவரது புனிதத்தைக் குறைக்கும் வகையிலோ இதுபோன்ற நடிகர்களை நடிக்க வைப்பது ஏற்புடையதல்ல என நெட்டிசன்கள் கமண்ட் செய்து வருகின்றனர்.
ஆரம்பமே சர்ச்சை: அண்மையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' திரைப்படத்தில் பிரதீப்பின் தந்தையாக சீமான் நடித்திருந்த நிலைவயில், தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'சேயோன்' படத்தில் சீமானின் முருகன் கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாக தகவல் கசிந்து சர்ச்சை கிளப்பியுள்ளது. சீமான் நடிக்கும் கதாபாத்திரம் குறித்து, இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.