சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் தள்ளிவைப்பு
சென்னை: அமைச்சர்கள் தலைமையில் ரிப்பன் மாளிகையில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில், தூய்மைப் பணியாளர்களுக்கு ஓய்வறை மற்றும் பேட்டரி வாகனங்களை உடனடியாக வழங்கப்படும் என உறுதியளித்த நிலையில், அவர்களின் போராட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் பணி நிரந்தரம், சம்பள உயர்வு, மகப்பேறு விடுப்பு, உணவுப்படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, உழைப்போர் உரிமை இயக்கத்தைச் சேர்ந்த தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கெனவே மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன், அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்நிலையில் 16-வது நாளான இன்று ரிப்பன் மாளிகை வளாகத்தில் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர்.நிர்மல் குமார், ராஜ்மோகன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பேசிய அமைச்சர் ஆனந்த், “உங்களை சந்தித்து உங்கள் கோரிக்கையை கேட்குமாறு முதல்வர் எங்களை அனுப்பி வைத்துள்ளார். அவர் உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருப்பது உங்களை முகத்தை பார்க்கும்போதே தெரிகிறது. உங்கள் கோரிக்கை நியாயமானது. இப்போது நிதிநிலை மோசமாக இருக்கிறது. நிதி நிலையை பொறுத்து உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்” என்றார்.
அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் பேசும்போது, “இது உங்கள் அரசு. உங்களை இவ்வளவு வருத்திக்கொள்ள வேண்டாம். என்னென்ன முடியுமோ அனைத்து கோரிக்கைகளையும் இந்த அரசு நிறைவேற்றும்” என்றார்.
அமைச்சர் ராஜ்மோகன் பேசும்போது, “நாங்கள் இங்கு அமைச்சராக வரவில்லை. உங்கள் வீட்டுப் பிள்ளையாகத்தான் இங்கு நிற்கிறோம். இத்தனை நாட்கள் அற வழியில் போராடிய உங்களுக்கு நான் தலைவணங்குகிறேன். போராடுவது உங்கள் உரிமை. உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவது எங்கள் கடமை” என்றார்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசும்போது, “முதல்வர் விஜய் வெற்றி பெற்ற பிறகு அவர் அளித்த வாக்குறுதிகளை, எவையெல்லாம் முடியுமோ அவற்றையெல்லாம் செயல்படுத்தி வருகிறார். கடந்த ஆட்சியில் பல துறைகளில் எல்லாமே வெளி முகமை மூலமாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதை உடனே மாற்ற முடியாது.
கடந்த ஆட்சியில் கடன் வாங்கி ஊழல் செய்தார்கள். இந்த ஆட்சியில் கடன் வாங்கி மக்கள் நல திட்டங்களை முதல்வர் செய்து வருகிறார். இந்த 100 நாளில் முதல்வர் விஜய் முதல்வர், குடும்ப ஊழலை ஒழித்துள்ளார். சென்னை அழகாக இருப்பதற்கு நீங்கள்தான் காரணம். உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற முதல்வர் விஜய்க்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்” என்றார்.
பின்னர், ரிப்பன் மாளிகையில் அமைச்சர்கள் தலைமையில், ஆணையர் ஜி.எஸ்.சமீரன் முன்னிலையில், உழைப்போர் உரிமை இயக்க தலைவர் கு.பாரதி மற்றும் தூய்மைப் பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பேச்சுவார்த்தையின் முடிவில், செய்தியாளர்களிடம் பேசிய பாரதி, “நாளொன்றுக்கு தூய்மைப் பணியாளர்களின் உணவுக்காக ஒரு நபருக்கு ரூ.50 செலவிடப்படுகிறது. அதை உணவுப்படியாக அடுத்த மாதம் முதல் வழங்கப்படும். மொத்தம் உள்ள 200 வார்டுகளில், 197 வார்டுகளில், பெண் தூய்மைப் பணியாளர்களுக்கான கழிப்பறை மற்றும் ஓய்வறை வசதி ஒரு மாதத்தில் ஏற்படுத்தப்படும். போராட்டத்தில் ஈடுபட்டதற்காக தூய்மைப் பணியாளர்கள், வழக்கறிஞர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும்.
தண்டையார்பேட்டை, அம்பத்தூர், அண்ணாநகர் ஆகிய மண்டலங்களுக்கு புதிதாக 300 பேட்டரி வாகனங்கள் வழங்கப்படும். முதற்கட்டமாக இம்மாத இறுதிக்குள் 160 வாகனங்கள் வழங்கப்படும். இறந்த தூய்மைப் பணியாளர்களுக்கான இழப்பீடு வழங்கப்படும். அக்டோபர் 10-ம் தேதிக்குள் மழை கோட்டு வழங்கப்படும். வாரம் ஒரு ஜோடி கையுறை, நாளொன்றுக்கு 2 முகக்கவசம் வழங்கப்படும் என பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள் உறுதியளித்துள்ளனர்.
அக்.3-ம் தேதி அடுத்த கூட்டம் நடைபெறும். அதில், வார விடுப்பு, மகப்பேறு விடுப்பு, மாதவிடாய் விடுப்பு, ஆட்சியர் நிர்ணயத்த தினக்கூலி ரூ.832 வழங்குவது தொடர்பாக அரசுடன் கலந்தாலோசித்து, அன்று தெரிவிக்கப்படும். அன்று தூய்மைப் பணியாளர்களுக்கு நல்ல செய்தி வரும். 2 மாதங்களுக்கு ஒரு முறை குறைதீர் கூட்டங்கள் நடைபெறும். 4 மாதங்களுக்கு ஒருமுறை ஆணையர் தலைமையில் குறைதீர் கூட்டங்கள் நடத்தப்படும். முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அமைச்சர்கள் உறுதியளித்துள்ளனர். அதனால் 16 நாட்களாக நடத்தி வந்த போராட்டத்தை தள்ளிவைக்கிறோம்” என்று பாரதி கூறினார்.
இது தொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் கூறும்போது, "தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் நிதிச் சிக்கல், நிர்வாக சிக்கல்கள் உள்ளன. அவை பேசி தீர்க்கக்கூடியது தான். தூய்மைப் பணியாளர்களுக்கான ஓய்வறை அமைப்பது தொடர்பான பணிகளை நானே நேரில் சென்று பார்வையிட இருக்கிறேன்" என்றார்.