செவிலியர் பணி நிரந்தரம் தொடர்பாக நல்ல செய்தி வரும்: அமைச்சர் அருண்ராஜ்
சென்னை: ''தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்தரம் தொடர்பாக, விரைவில் நல்ல செய்தி வரும்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
சென்னை வடபழனி, விஜயா ஹெல்த் சென்டர் மருத்துவமனையில், செவிலியர்களுக்கான தீவிர சிகிச்சை பிரிவு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது. இந்த முகாமை, அமைச்சர் அருண்ராஜ் தொடக்கி வைத்தார். பின், அவர் அளித்த பேட்டி:
மருத்துவமனைகளில் டாக்டர்கள் மட்டும் இல்லாமல், செவிலியர்கள் திறனும் தேவைப்படுகிறது. எனவே, நீண்ட நாட்களாக தொகுப்பூதியத்தில் பணியாற்றும் செவிலியர்கள், பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை வைத்துஉள்ளனர்.
இதுதொடர்பாக முதல்வருடன் ஆலோசனை நடத்தப்பட்டது. விரைவில் நல்ல செய்தி வரும். லோக்சபா தொகுதி மறுவரையறை தொடர்பாக, கடந்த காலங்களில் தி.மு.க., கூட்டிய கூட்டத்தில், த.வெ.க., பங்கேற்றது. இதுபோன்ற மாநில நலன் சார்ந்த விவகாரத்தில், அனைத்து கட்சிகளும் ஒரே அணியில் இருக்க வேண்டும் என்று தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தற்போது, தி.மு.க., புறக்கணிப்பது, அவர்களை பற்றி மக்கள் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பாக அமைந்துள்ளது. பல்வேறு காரணங்களால், மத்திய அரசோடு தி.மு.க., பணிந்து செல்கிறது. அவர்களின் முன்னாள் அமைச்சர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.
கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறியது, தி.மு.க.,வுக்கு சந்தோஷம். அவர்கள் எப்போது பா.ஜ., பக்கம் செல்லலாம்; ஊழல் குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்கலாம் என்று நினைக்கின்றனர். இதை அவர்கள் நல் வாய்ப்பாக பார்க்கிறார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.