📅 Tuesday, 22 September 2026 IST | புரட்டாசி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Technology August 07, 2026 03:30 AM

செயற்கை நுண்ணறிவும் மொழிபெயர்ப்பும்: மீடியாகார்ப் போட்டியில் மாணவர்களுக்குப் புதிய ஏஐ சவால், சமூகம் செய்திகள்

செயற்கை நுண்ணறிவும் மொழிபெயர்ப்பும்: மீடியாகார்ப் போட்டியில் மாணவர்களுக்குப் புதிய ஏஐ சவால், சமூகம் செய்திகள்

மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவு தனது வருடாந்தர தமிழ் மொழிபெயர்ப்புப் போட்டியில் புதிதாக ‘ஏஐ’ அங்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்கால ஊடகத்துறையில் வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவின் தாக்கத்தைக் கருத்திற்கொண்டு, ‘தமிழில் யோசி தமிழில் வாசி’ போட்டியில் முதன்முறையாக இவ்வாண்டுப் பங்கேற்பாளர்கள் செயற்கை நுண்ணறிவின் துணையோடு ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டவற்றை மேம்படுத்த முயன்றனர்.

மொழிபெயர்ப்பு, இதழியல் போன்ற துறைகளில் தேவையான முக்கியத் திறன்களை மாணவர்களிடத்தில் விதைப்பது இப்போட்டியின் முதன்மை நோக்கம்.

உயர்நிலைப்பள்ளி, தொடக்கக்கல்லூரி, பலதுறைத் தொழிற்கல்லூரி ஆகிய கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்கள் கிட்டத்தட்ட 100 பேர் போட்டியில் கலந்துகொண்டனர்.

‘ஏஐ’யின் துணையுடனான புதிய மொழிபெயர்ப்பு அங்கம் உட்பட ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும் பல்வேறு எழுத்து, பேச்சுச் சவால்களை அவர்கள் எதிர்கொண்டனர்.

இயந்திரங்களின் மொழிபெயர்ப்பில் உள்ள பிழைகளைக் கண்டறிந்து திருத்துதல், அதன் மொழிபெயர்ப்பில் மொழியின் சரளத்தை மேம்படுத்துதல், மொழிபெயர்ப்புகள் சூழலுக்குப் பொருத்தமாக இருப்பதை உறுதிசெய்தல் ஆகிய திறன்களின் அடிப்படையில் அவர்கள் மதிப்பிடப்பட்டனர்.

முன்பு நடத்தப்பட்ட பயிலரங்கில் சிறப்பாகச் செய்த முதல் 20 மாணவர்களுக்கு நடத்தப்பட்ட இறுதிப் போட்டியில், நேரடிச் செய்திப் படைப்புச் சவால் ஒன்று இடம்பெற்றது.

இதில் இறுதிப் போட்டியாளர்கள், உண்மையான உள்ளூர்ச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு நேரடிச் செய்தியறிக்கைகளை வழங்கினர்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

குறுகிய நேரத்திற்குள் செய்திகளை வழங்கும் அவர்களின் தெளிவு, சரளம், துல்லியம் ஆகியவை சோதிக்கப்பட்டன.

இந்தச் சவால்களின் முடிவில், அஸ்வின் கணேசன், ஹரிசுகரிதா காயத்ரி சுரேஷ், சேந்தனமுதன் சுந்தரவடிவேலு, ஹனா அக்‌ஷித்தா, தர்ஷிதா செல்வராஜு, நரேன் ராம், ஆகிய அறுவரும் வாகை சூடினர்.

இவர்களுக்கு மீடியாகார்ப் தமிழ்ச் செய்தியின் சமூக ஊடகத் தளங்களுக்கான காணொளிகளைத் தயாரித்துப் படைக்கும் அரிய வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன் மூலம் அவர்கள் செய்தி அறையில் நேரடி அனுபவத்தைப் பெற்றனர்.

இது குறித்துப் பேசிய மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவின் ஆசிரியர் ந குணாளன், “இன்றைய மொழிபெயர்ப்பாளர்கள் அல்லது ஆங்கிலம் அல்லாத பிறமொழிச் செய்தி அறைகளில் பணிபுரிபவர்கள், மொழிபெயர்ப்பதில் எந்த அளவிற்குத் திறமை வாய்ந்தவர்களாக இருக்கின்றார்களோ, அதே அளவிற்கு ‘ஏஐ’யின் கருத்துகளைச் சரிபார்ப்பதிலும் திறன் பெற்றிருக்க வேண்டும்,” என்று கூறினார்.