📅 Tuesday, 22 September 2026 IST | புரட்டாசி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 22, 2026 01:03 PM

’என்னை மன்னித்துவிடுங்கள் கீர்த்தனா’

’என்னை மன்னித்துவிடுங்கள் கீர்த்தனா’

’என்னை மன்னித்துவிடுங்கள் கீர்த்தனா’ –அமைச்சர் கீர்த்தனாவின் ஆபரேசன் குறித்து கனிமொழி

"என் அன்பு தங்கை அமைச்சர் கீர்த்தனா அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவர்கள் 20 நாட்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்திய நிலையிலும், 4 நாட்களிலேயே மீண்டும் மக்கள் பணிக்குத் திரும்பினார்" - கனிமொழி

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு பெண்ணாகவும், ஒரு சகோதரியாகவும் இதை நேரில் பார்த்ததால் சொல்கிறேன். என் அன்பு தங்கை அமைச்சர் கீர்த்தனா அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவர்கள் 20 நாட்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்திய நிலையிலும், 4 நாட்களிலேயே மீண்டும் மக்கள் பணிக்குத் திரும்பினார்.

மருத்துவமனை படுக்கையில் இருந்தபோதும், முதலமைச்சரின் லண்டன் பயணத்திற்கான ஏற்பாடுகள் சரியாக நடைபெறுகிறதா என்பதில்தான் அவரது கவனம் இருந்தது. ஆனால், அவர் சில நாட்கள் பணிக்கு வராததைப் பற்றி பேசும்போது, அவரது உடல்நிலை, காயம் குறித்து சிந்திக்காமல் அதை மாதவிடாயுடன் தொடர்புபடுத்தும் பிற்போக்குத்தனமான சிந்தனை வேதனை அளிக்கிறது.

பெண்கள் அவர்களின் உடல் சுழற்சியால் மட்டும் வரையறுக்கப்படுபவர்கள் அல்ல. நாங்கள் தலைவர்கள், தொழில் வல்லுநர்கள், தாய்கள், மகள்கள். வலி, நோய், காயம் என அனைத்தையும் கடந்து கடமையைத் தொடர்ந்து செய்பவர்கள்.

ஒரு பெண்ணின் பணியை விமர்சிக்க முடியாதபோது, அவரது உடலைப் பற்றி பேசுவது அரசியல் விமர்சனம் அல்ல; அது பிற்போக்குத்தனமான மனநிலையின் வெளிப்பாடு. பெண்களை அவர்களின் சாதனைகளுக்காக மதிப்போம். அவர்களின் உடலை அரசியல் கேலிக்குரிய பொருளாக மாற்றுவதை நிறுத்துவோம்.

பெண்கள் இதைவிட சிறந்த மரியாதைக்கு உரியவர்கள். தமிழ்நாடும் இதைவிட சிறந்த அரசியல் பண்பாட்டுக்கு உரியது. என்னை மன்னித்துவிடுங்கள் கீர்த்தனா. இதை ரகசியமாக வைத்திருக்கவே நீங்கள் விரும்பினீர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால், உங்கள் அர்ப்பணிப்பை பார்த்த ஒரு சகோதரியாக இதை சொல்ல வேண்டிய கடமை எனக்கு உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.