சிஎஸ்கே அணியின் அடுத்த பயிற்சியாளராக இங்கிலாந்து அணி முன்னாள் கேப்டன்.. அஸ்வின் கருத்து
சிஎஸ்கே அணியின் அடுத்த பயிற்சியாளராக இங்கிலாந்து அணி முன்னாள் கேப்டன்.. அஸ்வின் கருத்து
சென்னை: சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் பிளெமிங் கடந்த மாதம் தனது பதவியில் இருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து, அணியின் புதிய பயிற்சியாளர் நியமனம் குறித்து சிஎஸ்கே முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் இரு முக்கிய வழிகளைப் பகிர்ந்துள்ளார்.
2019-ல் உலகக் கோப்பையை வென்று தந்த இங்கிலாந்து முன்னாள் கேப்டன் இயன் மோர்கன், இந்த பதவிக்கான போட்டியில் மிக வலுவான வேட்பாளராக விளங்குவதாக அஸ்வின் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், தோனி ஒரு வருடத்திற்கு தற்காலிகப் பொறுப்பை ஏற்று அணியை வழிநடத்துவதற்கான வாய்ப்புகளும் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச அளவில் பெரிய அளவில் பயிற்சி அளித்த அனுபவம் இயன் மோர்கனுக்கு இல்லை என்றாலும், அவர் ஒரு சிறந்த வியூகம் வகுப்பதில் வல்லவராக கருதப்படுகிறார். இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் அணியை மாற்றியமைத்ததில் இவருக்கு முக்கியப் பங்குண்டு. மேலும், 2021 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை இறுதிப்போட்டி வரை கேப்டனாக வழிநடத்தினார்.
இவரது ஆக்ரோஷமான ஆட்ட அணுகுமுறையும், அணியை வழிநடத்திய விதமும் பரவலாகப் பாராட்டப்பட்டது. தற்போது, அவர் இங்கிலாந்தின் 'தி ஹண்ட்ரட்' தொடரில் லண்டன் ஸ்பிரிட் அணியின் வாரிய இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.
"இயன் மோர்கன் இங்கு வரக்கூடும் என்று எனக்குத் தோன்றுகிறது. அவரது பெயர் பலமாக அடிபடுகிறது; ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகளும் நிச்சயமாக நடந்து வருகின்றன. இதில் இரண்டு சாத்தியங்கள் உள்ளன. முதலாவதாக, இயன் மோர்கன் இந்த ஆண்டே பொறுப்பை ஏற்பாரா? அல்லது மினி ஏலத்தில் வேறொருவர் அணியை உருவாக்கித் தர, அதன் பின்னர் அவர் பொறுப்பேற்பாரா?" என்று தனது யூடியூப் சேனலில் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான தலைமைப் பயிற்சியாளராக உள்ள பிரெண்டன் மெக்கல்லமும் இந்தப் பதவிக்கு பரிசீலிக்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், அவரது தற்போதைய ஒப்பந்தக் கடமைகள் காரணமாக அவர் சிஎஸ்கேவின் பயிற்சியாளராக வருவதில் சிக்கல் உள்ளதாக அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தங்களது பயிற்சியாளர்களை ஐபிஎல் தொடரில் பணியாற்ற அனுமதித்தாலும், இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள 2027 உலகக் கோப்பையைக் கருத்தில் கொள்ளும்போது இது அவ்வளவு எளிதானதாக இருக்காது என்று அஸ்வின் கூறியுள்ளார். மோர்கனைப் பொறுத்தவரை, மற்ற ஐபிஎல் அணிகளும் அவரை அணுகியதாகவும், ஆனால் அவர் அந்த வாய்ப்புகளை நிராகரித்துவிட்டதாகவும் அஸ்வின் மேலும் தெரிவித்துள்ளார்.