📅 Saturday, 03 October 2026 IST | புரட்டாசி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News June 16, 2026 06:30 AM

சிக்கலாக மாறிவரும் செவித்திறன் குறைபாடு, சமூகம் செய்திகள்

சிக்கலாக மாறிவரும் செவித்திறன் குறைபாடு, சமூகம் செய்திகள்

செவித்திறன் குறைதல் வயது மூத்தோருக்கான பிரச்சினையாக இருந்த நிலை மாறி தற்போது அது பொதுப் பிரச்சினையாகி வருகிறது என்று கூறினார் செவி உணர்வியல் வல்லுநர் ஹிரியா கருணாகரன்.

இளையர்களிடையே செவித்திறன் இழப்பு (Hearing Loss) அச்சுறுத்தலாக விளங்குவதில் நவீன வாழ்க்கைமுறை, தொழில்நுட்பப் பயன்பாடு ஆகியவற்றுக்குப் பெரும்பங்கு உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

செவித்திறன் பேண அனைவரும் பின்பற்ற வேண்டிய சிறந்த நடைமுறைகளையும் தவிர்க்க வேண்டிய தவறுகள் குறித்தும் தமிழ் முரசிடம் விரிவாகப் பகிர்ந்துகொண்டார் ‘ஆட்டிக்கான்’ நிறுவனத்தின் மூத்த செவி உணர்வியல் வல்லுநரான ஹிரியா கருணாகரன்.

திறன்பேசிகளும், மடிக்கணினிகளும் தவிர்க்க முடியாத கருவிகளாகிவிட்டதையும் அதனைத் தொடர்ந்து, காதொலிக்கருவிகளின் (Headphones, Earbuds) பயன்பாடும் அதிகரித்துள்ளதையும் அவர் சுட்டினார்.

“இவற்றைப் பயன்படுத்துவது நேரடியாகத் தீங்கு என்றில்லாவிட்டாலும் நாம் பயன்படுத்தும் விதம், கால அளவு ஆகியவை ஆபத்தைத் தீர்மானிக்கின்றன,” என்றார் ஹிரியா.

செவிகளின் உட்பகுதியில் உள்ள ‘காக்லியா’ (Cochlea) என்ற பகுதியில் கோடிக்கணக்கான மென்மையான உயிரணுக்கள் உள்ளன. தொடர்ச்சியான இரைச்சல், இவற்றை நிரந்தரமாகச் சேதப்படுத்தும். இது ‘இரைச்சலால் தூண்டப்படும் செவித்திறன் இழப்பு’ (NIHL) என்று ஹிரியா விளக்கினார்.

அடிப்படையில், தனிப்பட்ட காதொலிக்கருவிகளில் பாடல் அல்லது ஒலியைக் கேட்கும்போது 60/60 எனும் விதியைப் பயன்படுத்த இவர் அறிவுறுத்துகிறார்.

அதிகபட்ச ஒலியளவு 60 விழுக்காட்டுக்கு மிகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவற்றை 60 நிமிடங்களுக்குமேல் தொடர்ந்து பயன்படுத்தக் கூடாது.

மேலும், நீண்ட தொலைபேசி அழைப்புகள் அல்லது இணையவழிச் சந்திப்புகளில் இருக்க நேர்ந்தால், ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை 5 முதல் 10 நிமிடங்கள் வரை அமைதியான இடத்திற்குச் சென்று காதுகளுக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்றும் இவர் சொன்னார்.

இரைச்சல் நீக்கம்

பேருந்து, பெருவிரைவு ரயில்களில் பயணம் செய்யும்போதும் காதொலிக்கருவி அணியும் வழக்கம் உள்ளவர்கள் ‘இரைச்சல் நீக்க’ (Active Noise Cancellation) அம்சத்தைப் பயன்படுத்தலாம் என்று ஹிரியா குறிப்பிட்டார். அவை, வெளிப்புற இரைச்சல் காரணமாக காதில் ஒலிக்கும் இசையில் ஒலியளவை அதிகரிக்கும் வழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்கிறார் இவர்.

ஆண்டுதோறும் பரிசோதனை

மொத்த உடல்பரிசோதனை செய்துகொள்வது போலவே செவித்திறன் பரிசோதனை செய்துகொள்வது, ஆரம்பக்கட்ட பாதிப்புகளைக் கண்டறிய உதவும் என்று கூறிய ஹிரியா, இது நவீனகாலத் தேவை என்பதைப் புரிந்து நடப்பது நல்லது என்றும் சொன்னார்.

காது கேட்கும் திறன் குறைவது உடல்நலக் கோளாறு என நினைக்க வேண்டாம் என்ற இவர், காதுகளில் ரீங்காரமோ இரைச்சலோ கேட்டால், அது செவிகள் சோர்வடைந்துள்ளதற்கான அறிகுறி என்றதுடன் அதை அலட்சியப்படுத்தாமல் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறர்.