📅 Monday, 14 September 2026 IST | ஆவணி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health July 16, 2026 02:31 PM

சிக்கனத்துடன் பயணம் செய்யும் சிங்கப்பூரர்கள்: ஆய்வு முடிவு

சிக்கனத்துடன் பயணம் செய்யும் சிங்கப்பூரர்கள்: ஆய்வு முடிவு

சுற்றுப்பயணங்களுக்காக வெளிநாடு செல்லும் சிங்கப்பூர்ப் பயணிகள், கூடுதல் சிக்கனத்துடன் செயல்படுவதாக அண்மை ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

வெளிநாட்டுப் பயணம் செய்யும் சிங்கப்பூரர்களில் 71 விழுக்காட்டினருக்குக் கட்டணம் பற்றிய கவலை ஆகப் பெருந்தடையாக இருப்பதாகப் பயணத்துறை பற்றிய இவ்வாண்டின் ‘குலூக் டிராவல் பல்ஸ்’ கருத்தாய்வு தெரிவித்தது.

கட்டணம் பற்றிச் சிங்கப்பூரர்கள் அக்கறைப்படுவது உண்மை என்றாலும், அவர்கள் சலுகைகளையும் தள்ளுபடிகளையும் தேடி, இயன்றவரை தங்கள் செலவை முனைப்புடன் குறைக்கின்றனர்.

கவனம் கலந்த ஆர்வத்துடன் சிங்கப்பூரர்களில் பெரும்பாலானோர் செயல்படுவதாக இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

செலவு பற்றிய கவனம், சிங்கப்பூரர்களின் பயண முறை என்பது குறித்த மாற்றங்களை உண்டாக்குவதாக ஹாங்காங்கைச் சேர்ந்த ‘குலூக் டிராவல்’ பயண இணையத்தளத்தின் பொது நிர்வாகி சாரா வான் தெரிவித்தார்.

தள்ளுபடி பெற 47 விழுக்காட்டுச் சிங்கப்பூரர்கள் முயல்வதாகவும், குறைந்த விலைக்காக ஹோட்டல், விமானப் பயணங்கள் போன்றவற்றுக்கு 46 விழுக்காட்டுச் சிங்கப்பூரர்கள் முன்பதிவு செய்வதாகவும் அந்தக் கருத்தாய்வு குறிப்பிடுகிறது.

அதிகம் ஈர்க்கும் ஜப்பான்

சிங்கப்பூரர்கள் சுற்றுப்பயணம் செய்ய விரும்பும் இடங்களில் ஜப்பான் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. ஆண்டு அடிப்படையில், ஜப்பானுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கையும் கூடியுள்ளது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

தோக்கியோ, ஒசாக்கா ஆகியவை அதிகம் நாடப்படும் நகரங்களாக இருந்தபோதிலும் சப்போரோ, நகோயா, ஃபுகுவோக்கா, கியோட்டோ ஆகிய நகரங்களும் சுற்றுப்பயணிகளை அதிகம் ஈர்க்கத் தொடங்கியுள்ளன.

பயணிகளில் 64 விழுக்காட்டினர், தனித்துவமான உள்ளூர் நிகழ்வு, திருவிழா அல்லது நடவடிக்கையில் கலந்துகொள்வதற்காகவே அதிகம் அறியப்படாத நகரங்களுக்குச் செல்வதாகக் கூறினர்.

விருப்பத் தேர்வாக இருக்கும் வியட்னாம்

தென்கிழக்கு ஆசியாவில் புகழ்மிக்க மற்றொரு சுற்றுப்பயணத் தளமாக வியட்னாம் தன்னை நிலைநிறுத்திக்கொள்கிறது.

அதன் தேவை ஆண்டுக்கு ஆண்டு 50 விழுக்காட்டுக்கும் மேலாக வளர்ந்துள்ளது. அதற்கு அந்நாட்டின் புகழ்பெற்ற நகரங்களே முக்கியக் காரணமாகத் திகழ்கின்றன.

ட நாங், ஹோ சி மின், சாப்பா, ஹனோய், ஹா லாங் நகரம் ஆகியவை புகழ்பெற்று வருகின்றன.

பயணத் தொலைவு, செலவு, பெருகிவரும் மேம்பட்ட உணவு, பண்பாட்டுச் சூழல் ஆகியவை குறைந்த சிரமத்துடன் மிகுந்த அனுபவத்தைத் தேடும் சிங்கப்பூர்ப் பயணிகளுக்கு வியட்னாமை இயல்பான தேர்வாக ஆக்குகின்றன.

பணத்திற்கு ஏற்ற மதிப்பளிக்கும் பயணங்களை முன்பதிவு செய்யும் தேடலில், சிங்கப்பூரர்கள் தாங்கள் எங்கு முன்பதிவு செய்கிறோம் என்பதில் அதிக கவனத்துடன் இருக்கிறார்கள்.

மேலும், அவர்கள் தாங்கள் நம்பும் தளங்களையே நாடுகிறார்கள். செயற்கை நுண்ணறிவுக் கருவிகள், பொதுவான தளங்கள் நிறைந்த இந்தச் சூழலில், 57 விழுக்காட்டினர் இன்னமும் முன்பதிவுகளுக்குச் சிறப்புப் பயணத் தளங்களையே விரும்புவதாகக் கருத்தாய்வு குறிப்பிடுகிறது.