சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம்: முதல்வர் விஜய் துவக்கி வைக்கவிருந்த நிகழ்ச்சி மீண்டும் ரத்து
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம்: முதல்வர் விஜய் துவக்கி வைக்கவிருந்த நிகழ்ச்சி மீண்டும் ரத்து
சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை திட்ட துவக்க விழா நிகழ்ச்சி நிர்வாக காரணங்களாலும், தவிர்க்க முடியாத சூழ்நிலைகளாலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Published : May 29, 2026 at 9:19 AM IST
சென்னை: இன்று நடைபெறவிருந்த சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை திட்ட துவக்க விழா இரண்டாவது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற உடனே, பதவியேற்ற மேடையில் வைத்தே பெண்கள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தின் கோப்பில் கையெழுத்திட்டார். மேலும், இந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு தலைமை வகிப்பதற்காக ஐ.ஜி பவானிஸ்வரி நியமிக்கப்பட்டார்.
இதனையடுத்து இந்த திட்டத்தை முழு வீச்சில் செயல்படுத்தும் நோக்கில் காவல் துறையினரும், அரசு அதிகாரிகளும் தீவிரமாக செயலாற்றினர். அதன் அடிப்படையில் இந்த திட்டத்தில் பணிபுரிய இருக்கும் பெண் காவலர்களுக்கு பிரத்யேக உடைகள் மற்றும் வாகனங்கள் உள்ளிட்டவை தயார் செய்யப்பட்டன.
இந்நிலையில், நேற்று முன்தினமே சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அவர் டெல்லி சென்றதால் இந்த நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று பிற்பகல் முதலமைச்சர் டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய நிலையில், இன்று (மே 29) சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை அவர் தொடங்கி வைப்பார் என கூறப்பட்டது. மேலும் அதற்கான ஏற்பாடுகளும் ராஜரத்தினம் மைதானத்தில் செய்யப்பட்டு, காவலர்கள் அணிவகுப்பு ஒத்திகைகளும் நடத்தினர். இதனை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனிடையே அந்நிகழ்ச்சி நிர்வாக காரணங்களாலும், தவிர்க்க முடியாத சூழ்நிலைகளாலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முதலில் கடந்த 27 ஆம் தேதி நடைபெற இருந்த இந்த நிகழ்ச்சி, முதலமைச்சரின் டெல்லி பயணம் காரணமாக மே 29 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டிருந்தது. தற்போது இரண்டாவது முறையாக நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், எதற்காக இந்த நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டது என்பது குறித்தும் முறையான காரணங்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. மேலும் மாற்று தேதி குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இதனால் பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் அதிருப்தி மற்றும் குழப்பமான சூழல் நிலவி வருகிறது. இதனிடையே, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம் எப்போது தொடங்கி வைக்கப்படும் என்ற விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.