📅 Monday, 31 August 2026 IST | ஆவணி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil August 29, 2026 07:04 PM

சிங்கப்பூர் அமைச்சர்கள் வழக்கு: ப்ளூம்பெர்க் மேல்முறையீடு செய்யவில்லை

சிங்கப்பூர் அமைச்சர்கள் வழக்கு: ப்ளூம்பெர்க் மேல்முறையீடு செய்யவில்லை

சிங்கப்பூர் அரசாங்கத்தின் அமைச்சர்கள் கா.சண்முகம், டான் சீ லெங் இருவரும் தொடுத்த அவர்கள் குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் பிரதிவாதியான புளூம்பெர்க் ஊடகம் அதற்கு எதிராக வழங்கப்பட்ட இறுதித் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யவில்லை.

அதன் அச்செயல் அது வெளியிட்ட செய்தி உறுதியான உண்மைத் தன்மை வாய்ந்தது என்ற அதன் ஆரம்ப விளக்கத்திற்கு சட்டப்படி வாதாட இடமில்லை என்பதைக் குறிப்பதாக மூத்த அமைச்சர் க.சண்முகம் கருத்துரைத்தார்.

புளூம்பெர்க் ஊடகமும் அதன் செய்தியை வெளியிட்ட எழுத்தாளரும் அந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு இதுவரையில் செய்யவில்லை. அதில் திரு சண்முகத்துடன் வர்த்தக தொழில்துறை (எரிசக்தி தொழில்துறை) அமைச்சர் வாதிகளாக அந்த ஊடகத்தின்மீது அவதூறு வழக்கை வெற்றிகரமாகத் தொடுத்திருந்தனர்.

மேல்முறையீட்டுக்கான காலக்கெடு இரண்டு நாள்களுக்கு முன் காலாவதியானதையும் இதுவரை அது செய்யப்படவில்லை என்பதையும் அமைச்சர் சண்முகம் அவரது ஃபேஸ்புக்கில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 29) பதிவிட்டார்.

இவ்வாண்டு ஜூலை மாதம் புளூம்பெர்க் ஊடகமும் அதன் செய்தியாளர் திரு லோ டெ வெய்யும் ஒவ்வொரு அமைச்சருக்கும் தலா S$230,000 இழப்பீட்டுத் தொகையாக வழங்கவேண்டும் எனத் தீர்ப்பளித்தது. 2024ஆம் ஆண்டில் அந்த ஊடகத்தில் வெளிவந்த ‘குட் கிளாஸ் பங்களா’ குறித்த செய்தி அந்த இரு அமைச்சர்களுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தியதாக நீதிமன்றம் கூறியது.

அதோடு புளூம்பெர்க்கும் செய்தியாளரும் S$423,000 தொகையை வழக்கு நடத்தியதற்கான செலவாக வழங்கவேண்டும் எனவும் தீர்ப்பில் உள்ளது.

ஊடகங்களின் கேள்விகளுக்கு புளூம்பெர்க் எவ்வித பதிலும் அளிக்கவில்லை.

“சில ஊடகங்கள் மேலாதிக்கப் போக்கைக் கடைப்பிடிக்கின்றன. பொய்களை வெளியிட்டு மேற்கத்தியர் அல்லாத அரசியல் தலைவர்கள் குறித்துப் பொதுவில் தீய நோக்கத்துடன் அவதூறு பரப்புகின்றன. அதைச் செய்துவிட்டு பணபலத்தையும் புகழையும் வைத்துக்கொண்டு தப்பித்துவிடலாம் என்று நினைக்கின்றன. அது சிங்கப்பூரில் நடக்காது,” என திரு சண்முகம் அவரது பதிவில் கூறினார்.